ஈரோடு எல்.ஆர்.பழனிசாமி மறைவுக்கு இரங்கல்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட மூத்த முன்னோடி எல்.ஆர்.பழனிசாமி (80) இன்று (26.11.2022) ஈரோட்டில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழர் எல்.ஆர்.பழனிசாமி ஈரோடு மாநகர் எல்லையில் உள்ள லக்காபுரத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதில் ஈரோடு நகரில் நகைக்கடை தொழிலாளியாக வேலை செய்தவர். பின்னர் சிறு நகைக்கடை வைத்துப் படிப்படியாக முன்னேறியவர்.
இளம் வயதில் கம்யூனிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த கே.எஸ். நாச்சிமுத்து, எஸ்.பி வெங்கடாசலம், ஆர்.ரங்கசாமி, எம்.நாகப்பன் போன்ற முன்னணி தலைவர்களுடன் ஏற்பட்ட நட்பில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கியவர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு வட்டாரக் குழுச் செயலாளர், மாவட்டக் குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர். கட்சியின் மாநிலக் குழுக் கூட்டங்கள், தொழிற்சங்க மாநில மாநாடுகளை நடத்துவதில் முன்னின்று உதவியவர்.
கலை – இலக்கிய அரங்கிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செலுத்தியவர். மாநகரின் முக்கியப் பகுதியான கருங்கல்பாளையம் பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
தோழர் எல்.ஆர்.பழனிசாமியின் மறைவு கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது மனைவி லட்சுமி இருக்கிறார். இவர்களுக்கு சக்திவேல், மெய்யப்பன், பூமிநாதன் என்று மூன்று மகன்கள். இவர்களில் மெய்யப்பன் சில வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார்.
தோழர் எல்.ஆர்.பழனிசாமியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செவ்வணக்கம் கூறி, அஞ்சலி செலுத்துகிறது. அன்னாரைப் பிரிந்து வாடும் அவரது மனைவி லட்சுமிக்கும், மகன்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.