இளைஞர்களே…, கார்ப்பரேட் ஆதரவு முதலாளித்துவ கொள்கையை முறியடிப்போம்! தேசம் காப்போம்!
கே முருகன் – முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர், AIYF
[2022 செப்டம்பர் 15 ஆம் தேதி போஸ்கோ- ஜிண்டால் கம்பெனி எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்தியை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள கட்டுரை]உலகம் முழுவதும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான கொள்கையை முதலாளித்துவ நாடுகளும், முதலாளித்துவ கொள்கை வழியிலான அரசுகளும் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றன. இதனால், சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு, சாதாரண ஏழை, எளிய மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளையும், அதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதையும் தடுக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை பலமுறை விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி வழிகாட்டி உள்ளதைப் பொருட்படுத்தாமல், முதலாளித்துவ நாடுகளும், முதலாளித்துவ கொள்கை திசைவழியிலான அரசுகளும் உழைக்கும் மக்களின் உயிரை விலை பேசி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 1991 ஆம் ஆண்டில் இந்தியாவில் கொண்டு வரப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம்(LPG) கொள்கையால் நாட்டில் இயற்கையாக நமக்கு கிடைக்கப்பெற்ற நீர் வளம், வனவளம் மற்றும் நிலவளம் ஒன்றிய அரசு மற்றும் பல மாநில அரசுகளால் சீரழிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியே ஒடிசா மாநிலம் பாராதிப் பகுதியில் தின்கியா கிராமத்தில் கொண்டுவரப்பட்ட போஸ்கோ ஜின்டால் கார்ப்பரேட் இரும்பு ஆலை ஒன்றிய மாநில அரசுகளின் தாக்குதல் ஆகும். இதனால் வாழ்வாதாரத்தை இழந்து அடக்குறைக்கு ஆளாக்கப்பட்ட கிராமப்புற உழைக்கும் மக்கள் தொடர்பாக வெளியான செய்தியைப் படித்த போது அதிர்ச்சியே மிஞ்சியது.
ஒடிசா தின்கியா கிராம மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தவும் மக்களின் மனித உரிமை மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடி தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவருக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட சுமார் 70 பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்து மனு அளித்துள்ளனர்.
2005 ஆம் ஆண்டு ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டனி அரசின் ஆதவோடு ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதள அரசு தென் கொரியாவின் இரும்பு தொழிற்சாலை போஸ்கோவை தின்கியா கிராமத்தில் அமைப்பதற்கு அனுமதி அளித்தது. கிராம மக்களின் விருப்பத்திற்கு எதிராக 100 ஆண்டுகள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் கிராம மக்களின் விளைநிலங்களை அரசின் காவல்துறை உதவியோடும் கம்பெனி குண்டர்ளோடும் சேர்ந்து கொண்டு வலுகட்டாயமாக கையகப்படுத்தியது.
கிராம மக்கள் போஸ்கோ எதிர்ப்பு போராட்டக்குழு அமைத்து அமைதி வழியில் வலுவான போராட்டத்தை நடத்தினர். மிரண்டுபோன மாநில (நவீன் பட்நாயக்) அரசு தனது சொந்த மக்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி 200 க்கும் மேலான வழக்குகளைப் போட்டு(FIR) பதிவு செய்தது. வழக்குகள் இன்றும் நிலுவையில் உள்ளன. 2005 ஆம் ஆண்டு போராடிய கிராம மக்களுக்கு எதிராக அரசு இயந்திரமும், கம்பெனி குண்டர்களும் சேர்ந்து செய்த சதியால் கிராம மக்கள் 5 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
(நினைவில் கொள்க – போஸ்கோ எதிர்ப்பு போராட்டக் குழுவின் தலைமை பொறுப்பில் இருந்து போராட்டத்தை வழிநடத்தியவர் தோழர் அபைசாகு. இந்த மாதம் நடந்து முடிந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் ஒடிசா மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.)
8 வருட தொடர் போராட்டம் காரணமாக போஸ்கோ கம்பெனி வெளியேறியது. மக்கள் நிம்மதியோடு வாழலாம் என்று நினைத்த அந்த நேரத்தில், நவீன் பட்நாயக் அரசு ஒன்றிய பாஜக அரசின் ஆதரவோடு 2019 ஆம் ஆண்டு அதே தின்கியா கிராமத்தில் ஜின்டால் இரும்பு ஆலை தொடங்குவதற்கு அனுமதித்தது.
அந்த ஆலையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை புறக்கணித்து ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடையில்லா சாண்றிதழ் அளித்தது.
2019 ல் போஸ்கோ-ஜின்டால் விரோத போராட்டக்குழு அமைத்து கிராம வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மக்களின் போராட்டம் தொடர்ந்தது. அரசு, மக்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கு மாறாக அவர்கள் மீது கடுமையான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. 2020ஆம் ஆண்டிலிருந்து 60 க்கும் மேற்பட்ட கிராம மக்கள், போராடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். ஒரு சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டு வெளியில் வந்தனர். கிராம மக்களின் நெற்பயிர்கள், வெற்றிலை கொடிகள், மீன் குட்டைகள் உட்பட அனைத்தும் அரசு இயந்திரம், கம்பெனியின் குண்டர்களால் நாசமானது. ஆனாலும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவும் தொடர்ந்து மக்கள் போராடுகின்றனர்.
பாசிச பா.ஜ.க ஆதரவோடு நவீன் பட்நாயக் அரசும் காவல்துறையும் சேர்ந்து கொண்டு, 2022 ஜனவரி 14ஆம் தேதி உலகத்தில் இதுவரை நடைபெறாத மிகவும் மோசமான தாக்குதலை கிராம மக்கள் மீது நடத்தியது. அந்தத் தாக்குதல் காட்சி சமூக வலைதளம் மற்றும் செய்தி ஊடகங்களில் வெளியானது; பார்ப்பவர்களின்
மனதை வேதனையில் பதறச் செய்தது.
ஜின்டால்- போஸ்கோ எதிர்ப்பு போராட்டக்குழுத் தலைவர் தேபேன்திர சுவான் மற்றும் போராட்டக்காரர்கள் இன்று வரை சிறையில் உள்ளனர். மக்களின் விவசாய வாழ்வாரத்தை அழிக்கும் பாசிச பாஜக ஆட்சியின் மிருகத்தனம் கிராம மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி வருகிறது. இதனை எதிர்த்து போராடி வரும் கிராம மக்களை முதியவர்கள், பெண்கள் குழந்தைகள் என்றும் பாராமல், அவர்கள் மீது கடுமையான அடக்குமுறை மற்றும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
ஒடிசாவின் பாராதீப் பகுதியில் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, வாழ்வாதாரம் இழந்து இயற்கை பேரழிவால் பலர் உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில், தற்போதைய ஜின்டால் இரும்பாலை கிராமங்களில் பாதிப்பை மேலும் அதிகரிக்கும். இத்தகைய சூழலில், தாங்கள் உடனடியாகத் தலையிட்டு கிராம மக்களின் நிலம், வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட ஒன்றிய அரசு மாநில அரசையும் வலியுறுத்த வேண்டும் என்று சமூக அக்கறை கொண்ட செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்; அந்தக் கோரிக்கைகள் பின்வருமாறு:
கோரிக்கைகள்
- ஜின்டால் இரும்பு ஆலை திட்டத்தை தின்கியா கிராமத்தில் கொண்டு வருவதை ரத்து செய்ய வேண்டும்.
- கிராம மக்கள் மீது காவல்துறை நடத்தும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
- ஜின்டால் கம்பெனிக்கு அளித்த சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சாண்றிதழை ரத்து செய்ய வேண்டும்.
- வன உரிமைச் சட்டம்(FRA) 2006 படி, கிராம மக்களின் நிலங்களை திரும்ப வழங்க வேண்டும். பாரபட்சமில்லாமல் கிராம மக்களின் வன வாழ்வுரிமையை நிலைநாட்ட வேண்டும்.
- தின்கியா கிராமத்தில் நிலமற்ற மக்களுக்கு சட்டப்படி பட்டா வழங்க
வேண்டும். - தின்கியா கிராமத்தில் போராடிய ஆயிரக்கணக்கான. முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைளுக்கு மனரீதியிலும், உடல்ரீதியிலும் கொடூர தாக்குதல் நடத்திய காவல் துறையின் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் சுமார்
300 உள்ளது. அவையனைத்தையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும். - போராட்டக்குழுத் தலைவர் தேபேந்திர சுவான் மற்றும் அவருடன் சிறையில் இருக்கும் அனைத்து போராட்டக்காரர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.
ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகள் கொழுக்க நாட்டின் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதும், அழிக்கப்படுவதும் முதலாளித்துவ கொள்கையின் விளைவு என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் வளம், சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு முதலாளித்துவ கொள்கை முறியடிக்கப்பட வேண்டும் என்பதையே போஸ்கோ- ஜின்டால் கம்பெனிக்கு எதிராக மக்கள் நடத்தியுள்ள போராட்டம் நமக்கு உணர்த்துகிறது.
பாசிச பா.ஜ.க ஆட்சியில் உழைக்கும் மக்கள் மீது மேலும் தாக்குதல் அதிகரித்துள்ளது. கார்ப்பரேட் ஆதரவு முதலாளித்துவ கொள்கையை முறியடிக்க இளைஞர்கள் ஒன்றுபட்டு களம் அமைப்போம்; தேசம் காப்போம்!
[ஆனந்த் பட்வர்த்தன் சினிமா தயாரிப்பாளர், K சச்சுதானந்தன் கவிஞர், எழுத்தாளர் மத்திய சாகித்ய அகாடமி முன்னாள் செயலாளர், பினாய் விஸ்வம் கேரள வனத்துறை முன்னாள் அமைச்சர், மணி சங்கர் அய்யர் ஒன்றிய முன்னாள் அமைச்சர், ஆனிராஜா பொதுச் செயலாளர் இந்திய மாதர் தேசிய சம்மேளனம், பிரகாஷ். C. ஜா ஆராய்ச்சியாளர், K. பத்மா வழக்கறிஞர் விசாகப்பட்டினம். (ஆந்திரா), தாரா முரளி ஆர்க்கி டெக்ட் சென்னை, சந்திப் பாண்டே பொதுசெயலாளர் சோசலிச கட்சி உள்ளிட்ட 70 பிரபல செயல்பாட்டாளர்கள் இந்தக் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.]தொடர்புக்கு : 7603930397