இலா பட் மறைவுக்கு ஏ.ஐ.டி.யு.சி இரங்கல்
தொழிலாளர் உரிமைகள் செயற்பாட்டாளரும், காந்தியவாதியும், சேவா (Self Employed Women’s Association) அமைப்பின் நிறுவனருமான இலா பட் (வயது 86) மறைவுக்கு ஏ.ஐ.டி.யு.சி அதன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
அயராத போராளியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த அவரது மறைவு இந்திய தொழிலாளர் உரிமைகள் இயக்கத்திற்கு ஒரு இழப்பு ஆகும். அவரது நினைவைப் போற்றும் வண்ணம் ஏ.ஐ.டி.யு.சி வீரவணக்கம் செலுத்துகிறது; அவரை இழந்து வாடும் சேவா அமைப்பினர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் துயரத்தில் பங்கு கொள்கிறது.
பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் உரிமைகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இலா பட் அவர்களின் மகத்தான பங்களிப்பு, அவருக்குப் பெரும் புகழைச் சேர்த்தது. நெல்சன் மண்டேலா மற்றும் தேஷ்மோண்ட் டுடு ஆகியோர் நிறுவிய உலக தலைவர்களின் குழுவில் இவரும் ஒரு உறுப்பினர் ஆவார்.
பாலஸ்தீன பிரச்சனை உள்ளிட்ட சில சர்வதேச பிரச்சனைகள் தொடர்பாக பல தேர்ந்த ஆலோசனைகளை அக்குழுவில் வழங்கினார். அவர்தம் அயராத உழைப்பு உரிய அங்கீகாரத்தையும், பரிசுகளையும் அவருக்குப் பெற்றுத் தந்தது. அவர்தம் உறுதிப்பாடு மிக்க கடும் உழைப்பு பல லட்சக்கணக்கான பெண்களுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
தொழிலாளர் மற்றும் பெண்கள் உரிமைகள் மறுக்கப்பட்டும் பறிக்கப்பட்டும் வரும் இந்தத் தருணத்தில்…, போராடிப் பெற்ற உரிமைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத் தொழிற்சங்க இயக்கம் போராடி வரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நேரத்தில்…, இலா பட் அவர்களின் மறைவு உண்மையில் ஒரு மாபெரும் இழப்பு ஆகும்.
அவர் கொண்டிருந்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டுடன், அவரது புகழார்ந்த மரபை சேவா அமைப்பினர் முன்னெடுத்துச் செல்லட்டும்!