இலங்கை தொழிற்சங்க இயக்கத்திற்கு உலக தொழிற்சங்க சம்மேளனம் ஆதரவு

இலங்கையில் நடைபெற்று வரும் உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்கு உலக தொழிற்சங்க சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து, நேற்று (22.08.2022) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:
இலங்கையில் தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள அரசாங்கம் மீண்டும் தொழிலாளர்களின் பி எப் நிதியைச் சூறையாட முயன்று வருவதாக உலக தொழிற்சங்க சம்மேளனத்துக்கு தகவல்கள் வந்துள்ளன. அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு எதிராக இலங்கை தொழிற்சங்க இயக்கம் போராடி வருகிறது.
இதற்கு முன்பு இருந்த அரசாங்கங்களும் இதே முறையில் பி எப் நிதியைச் சூறையாட முயன்றன என்பது அனைவரும் அறிந்த விஷயம் ஆகும். இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில், சில தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கதாகும். தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குவதற்காக தொழிலாளர் படுகொலைகளும் நடந்துள்ளன.
இலங்கையில் மட்டுமின்றி, நெருக்கடியில் சிக்கியுள்ள பல நாடுகளின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள், அந்த நெருக்கடிகளில் இருந்து மீண்டெழ தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு நிதியைக் கொள்ளையடிக்க முயலுகிறார்கள் என்பதை உலக தொழிற்சங்க சம்மேளனம் சுட்டிக்காட்டுகிறது.
தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு நிதியைக் கொள்ளையடிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும், உழைக்கும் வர்க்க மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் தொழிலாளர் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் உலக தொழிற்சங்க சம்மேளனம் கண்டிக்கிறது.
உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளையும் நிதியையும் பாதுகாக்கப் போராடி வரும் இலங்கை தொழிற்சங்க இயக்கத்திற்கு, 5 கண்டங்களிலும் உள்ள 133 நாடுகளைச் சார்ந்த கோடிக்கணக்கான தொழிலாளர்களின் பிரதிநிதி அமைப்பாகத் திகழும் உலக தொழிற்சங்க சம்மேளனம் வீரவணக்கம் செய்து, முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.