இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்த நேரத்தில், இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மீன்பிடி கருவிகள், பேட்டரிகள், ஜி.பி.எஸ் கருவிகளையும் இலங்கை கடற்படையினர் எடுத்துச் சென்றுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பெற்று, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கை கடற்படையினர் சர்வதேச விதிமுறைகளையும், வழிவழியாக பின்பற்றி வரும் மரபுகளையும் தொடர்ந்து அத்துமீறி வருகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரும் ஒன்றிய அரசும் தலையிட்டு, நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். ஆனாலும் பாஜக ஒன்றிய அரசு தமிழ்நாடு மீனவர்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும், வாழ்வுரிமைக்கும் பாதுகாப்பு வழங்குவதில் போதிய அக்கறை காட்டாமல், அலட்சியப்படுத்தி வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிப்பதுடன், ஒன்றிய அரசின் அயலுறவுத்துறை தமிழக மீனவர்கள் உயிரையும், உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.