இலங்கைக்கு உதவ தமிழக சட்டமன்றம் தீர்மானம்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
இலங்கைக்கு உதவ தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கலந்து கொண்டு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து பேசியதாவது:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வணக்கம். தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள இந்தத் தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமனதோடு வரவேற்கிறது. இலங்கை நாடு மிகப்பெரிய அளவில் பேரினவாத கொள்கையினால் அந்த நாடும், அந்த நாட்டு மக்களும் மிகப்பெரிய அளவில் இன்றைக்கு நிற்கதியாகியிருக்கிறார்கள்.
அதுபோல் அந்த நாட்டில் கடைபிடித்திருக்கின்ற பன்னா£ட்டு குழுமத்தினுடைய முதலாளிகளின் உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையினால் அந்த நாட்டில் இருக்கின்ற பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சீரழிந்துபோய் உள்ளது. எனவே, நமது தமிழ்நாடு முதலமைச்சர் மிகத் தாயுள்ளத்தோடு, கருணையுள்ளத்தோடு ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்திற்கு ஒன்றிய அரசு உரிய மதிப்பளித்திருக்க வேண்டும். காரணம், தமிழ்நாடு அரசு எடுக்கிற தீர்மானத்திற்கும் முதலமைச்சருடைய இந்த நடவடிக்கைகளுக்கும் முட்டுக்கட்டை போடுவது என்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு மிகப்பெரிய பேராபத்தை உருவாக்குகின்ற செயலில் ஒன்றிய அரசு என்றைக்கும் ஈடுபட்டுவிடக்கூடாது.
எனவேதான் நமது மாநில அரசாங்கம், நமது முதலமைச்சர் எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதோடு அத்தியாவசியமான உணவுப் பொருட்களுக்கும், உயிர்காக்கும் மருந்து பொருட்களுக்கும் முதலமைச்சர் எடுத்திருக்கின்ற இந்த நடவடிக்கையை ஆதரிப்பதோடு சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் நாமும் அந்த ஒருமாத ஊதியத்தை வழங்குவதாக அறிவித்திருந்தாலும், அதையும் நாங்கள் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தத் தயாராக இருக்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பணிவோடு கேட்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.
இவ்வாறு பேசினார்.