இந்தியா
இரண்டு நாள் பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வீர்!
தமிழ்நாட்டில் இயங்கும் அகில இந்திய மற்றும் மாநில அளவிலான தொழிற்சங்கங்கள் 25.03.2022 அன்று கூட்டாக விடுத்துள்ள ஊடகங்களுக்கான அறிக்கை வருமாறு:
இரண்டு நாள் பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வீர்!
அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டத்தில் பங்கேற்ற மூத்த தொழிற்சங்க தலைவர் இரா.குசேலர், கி.நடராஜன் (தொமுச) டி.எம். மூர்த்தி (ஏஐடியுசி), வி.குமார் (சிஐடியு), மு.சுப்ரமணியன் (எச்எம்எஸ்) டி.வி.சேவியர் (ஐஎன்டியூசி), வி.சிவக்குமார் (ஏஐயுடியுசி) எம்.திருநாவுக்கரசு (ஏஐசிசிடியு) இரா.அந்திரிதாஸ்( எம்எல்எப் ) பேரறிவாளன் (எல்எல்எப்) ஏ.எஸ்.குமார் (எல்டியுசி) உள்ளிட்டோர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை:
தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எதிரான தேச நலனுக்கு விரோதமான ஒன்றிய அரசின் கொள்கைகளை எதிர்த்து 2022, மார்ச் 28,29 தேதிகளில் நாடு முழுக்க பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது
தமிழ்நாட்டில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடுகள் அனைத்து மாவட்டங்களிலும், 4 மண்டலங்களிலும், பலதுறைத் தொழிலாளர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன. கடந்த 10 நாட்களாக ஆலை வாயில் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், வேன் பிரச்சாரங்கள் வழியாக வேலைநிறுத்த கோரிக்கைகள் தொழிலாளர்களிடமும், மக்களிடமும் எடுத்துச்செல்லப்பட்டு வருகின்றன. பல லட்சக்கணக்கான துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், வங்கி, காப்பீடு போன்ற நிதி நிறுவனங்கள், போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம் போன்றவற்றில் 15 நாட்களுக்கு முன்பே வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விட்டது. இவை மட்டுமின்றி ஆட்டோ, கட்டிடம், பீடி, சாலையோர வியாபாரம் உள்ளிட்ட ஏராளமான உடலுழைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.
பாதுகாப்பு துறை தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள், வேலை நிறுத்தம் செய்யக் கூடாது என அண்மையில் தடை சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் வேலை நிறுத்தத்தை ஆதரித்து ஒருமைப்பாட்டு இயக்கங்களை நடத்துகிறார்கள். அதுபோன்று ரயில்வே தொழிலாளர்களும் ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.
அண்மையில் சில மாநில சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தல்களில் பெற்ற வெற்றிகளால் ஊக்கமுற்று, உழைக்கும் மக்கள் மீதான தாக்குதலை ஒன்றிய அரசு மும்முரப்படுத்தி இருக்கிறது. வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.5 சதத்திலிருந்து 8.1 சதமாக குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், சிஎன்ஜி உள்ளிட்டவற்றின் விலை தேர்தல் முடிந்தவுடன் பெருமளவு உயர்த்தப்பட்டு வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு விற்பதற்கும், குத்தகைக்கு விடுவதற்குமான நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு மிகத் தீவிரமாக இறங்கியுள்ளது.
44 தொழிலாளர் சட்டங்களை சுருக்கி ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகள், தொழிலாளர் என்ற வரையறையையே மாற்றி அமைக்கின்றன. நிரந்தர தொழிலாளர் என்று யாருமே இல்லாத நிலையை விரைவில் அவை உருவாக்கிவிடும். 150 ஆண்டு காலத்திற்கு மேலாக போராடி பெற்ற வேலைக்கான உத்தரவாதம், சம்பளத்துக்காக உறுதி, சமூகப்பாதுகாப்பு ஆகியவை அனைத்தும் பறிக்கப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு ஆலை மட்டங்களிலும், மாவட்ட, மாநில அளவிலும் செயல்படும் தொழிற்சங்கங்கள் அனைத்தும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்று முழு வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
அனைத்து விவசாய சங்கங்களும் சேர்ந்து மார்ச் 28, 29 தேதிகளில் கிராமப்புற முழு அடைப்பு நடத்த முன்வந்துள்ளன. இதனை இக்கூட்டம் வரவேற்று பாராட்டுகிறது
மார்ச் 28, 29 ஆகிய இரு நாட்களிலும் இந்திய தொழிலாளர்கள் மேற்கொள்ளும் வேலைநிறுத்தம் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கானதாகும். எனவே அந்த நாட்களில் கடைகள் வணிக நிறுவனங்களை திறக்காமல் மூடி வைத்து, வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு அனைத்து வணிகர்களையும், வணிகர் சங்கங்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
உழைப்பவர் நலனில் பெரும் அக்கறை காட்டி தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அக்கட்சிகளுக்கு இந்த கூட்டம் நன்றியறிதலைத் தெரிவிக்கிறது.
பொதுமக்கள் நலன், நாட்டின் இறையாண்மை ஆகியவற்றைப் பாதுகாக்க நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்திற்கு, அனைத்துப் பகுதி மக்களும் தமது மேலான ஒத்துழைப்பையும் ஆதரவையும் தருமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்