இந்தியா

இரண்டு நாள் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி!

வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!

மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் இதர தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடகங்களுக்கான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:

இரண்டு நாள் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில்,  நூதனமான பல முறைகளில், பங்கேற்று வெற்றி பெறச் செய்த ஊரக மற்றும் நகர்ப்புற தொழிலாளர்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தனியார், பொதுத்துறை, அரசு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள்,  அமைப்புசாரா தொழிலாளர்கள் என்று அனைத்து துறைகளைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் இதர துறை சார்ந்த தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

மாநில அரசாங்கம் மற்றும் பி.பி.சி.எல் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு தடை விதித்துள்ள கேரள உயர் நீதிமன்றத்தின் ஆணை, காவல்துறையின் அத்துமீறல், எஸ்மா சட்டம், அச்சுறுத்தல்கள் என்று எண்ணற்ற இடர்ப்பாடுகளைக் கடந்து 25 கோடிக்கும் அதிகமான உழைக்கும் மக்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

வங்கி மற்றும் காப்பீட்டுத் துறை ஊழியர்கள் இந்தியா முழுவதும் ஒரு இடத்தில் கூட அலுவலகத்திற்குச் செல்லாமல், பணிகளை முற்றிலுமாக ஸ்தம்பிக்கச் செய்து உள்ளார்கள். நிலக்கரி, ஸ்டீல், எண்ணெய், எரிவாயு, சிமெண்ட் மற்றும் தொலைத்தொடர்பு துறை ஊழியர்கள் 28 ஆம் தேதி காலையில் இருந்தே மாபெரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அனைத்து மாநிலங்களிலும் மின்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மகாராஷ்டிர மாநிலத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா பாய்ந்தது.

தூத்துக்குடி மற்றும் பாரதீப் துறைமுகங்களில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இரயில்வே மற்றும் பாதுகாப்புத்துறை தொழிலாளர்கள் நாடு முழுவதிலும் உள்ள 1000 க்கும் மேற்பட்ட இடங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி உள்ளனர்.

அங்கன்வாடி, வீட்டு வேலை, கட்டுமானம், பீடி மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதுடன், நாடு முழுவதிலும் நூற்றுக்கணக்கான இடங்களில் இரயில் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ்மா சட்டத்தின் அச்சுறுத்தலைத் துச்சமெனத் தூக்கியெறிந்த அரியானா மாநில சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் 28 ஆம் தேதி அதிகாலையில் இருந்து போக்குவரத்து பணிமனைகளில் இரண்டு நாட்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அஸ்ஸாம், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் நீர் மின் திட்டப்பணி தொழிலாளர்களும் மாபெரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள தனியார் துறையைச் சார்ந்த பன்னாட்டு நிறுவன ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, திரிபுரா, அஸ்ஸாம், ஹரியானா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் முழு அளவிலும், இதர மாநிலங்களில், பல மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் அளவிற்கு இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

கோவா, கர்நாடகம், மகாராஷ்டிரம், சத்தீஷ்கர், பஞ்சாப், பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மேகாலயா  மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் வேலைநிறுத்தம் முழுவீச்சில் நடைபெற்றது. சிக்கிம் மாநில பாதுகாப்பு பணியாளர்களும்   வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்  அரசாங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் சுமார் 50,௦௦௦ அரசாங்க ஊழியர்கள் பங்கேற்றனர். தபால்துறை, வருமான வரித்துறை, தணிக்கை துறை மற்றும் இதர துறைகளைச் சார்ந்த ஊழியர்களும்  இப்போராட்டங்களில் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

மீன்பிடித் தொழிலாளர்கள் அதிகாலையிலிருந்தே கடலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் முடிவின்படி தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த விவசாயிகள், அவர்களின் 6 கோரிக்கைகளை வலியுறுத்தும் வண்ணம்,  ஊரகப் பகுதிகளில் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக மக்களை அணிதிரட்டினர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் இணைந்து விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் இரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றனர்.

போராட்டத்தில்  ஈடுபட்டவர்களிடையே ஆங்காங்கே தொழிற்சங்கத்  தலைவர்கள் கண்டன உரையாற்றினார்கள். இந்திய மற்றும் அயல்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள்  பயனடைவதற்காக மத்தியில் உள்ள பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட தேசிய சொத்துக்கள் மற்றும் தேசிய வளங்களை  விற்றுவிட முயற்சிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

தொழிலாளர் சட்டங்களில் செய்யப்படும் மோசமான மாற்றங்கள், தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்துதல், வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமை பறிப்பு ஆகியவற்றால் தேசிய வளங்களை உருவாக்கும் தொழிலாளி வர்க்கமானது, அதனைத் தற்காத்துக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. தொழிலாளர் குரல் நெறிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, வேலையின்மை 12 சதவிகிதமாகவும், அதில் 25 வயதுக்கு  உட்பட்ட இளைஞர்கள் மிக அதிகமாக உள்ளார்கள்.

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு வாரங்களுக்குள்ளாகவே, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்த்தப்பட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பொதுத்துறை நிறுவன கட்டமைப்புகளை ஏறக்குறைய இலவசமாகத் தாரை வார்த்திட தேசிய நிதிமயமாக்கல் திட்டம் துரிதப்படுத்தப்படுகிறது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மத்திய அரசாங்கத்திற்கு அளித்துள்ள ஊக்கம், மத்திய பொதுத்துறை  நிறுவனங்களின் நிலங்களை விற்பதற்கான கொள்கைகையை வெளியிடச் செய்துள்ளது. தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.5 சதவிகிதம் என்பதிலிருந்து 8.1 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகள் தனியார்மயம் தீவிரப் படுத்தப்படுகிறது. எல்.ஐ.சி நிறுவன பங்குகளும் கணிசமான அளவிற்கு விற்கப்பட உள்ளது.

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் மார்ச் 29 அன்று தொழிற்சங்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி பொதுச் செயலாளர் தோழர் அமர்ஜீத் கவுர் உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள். மாநிலங்களவை உறுப்பினரான தோழர் பினாய் விஸ்வம் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஹன்னான் மொல்லா ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.

தேசத்தைப் பாழாக்கியதோடு மட்டுமின்றி, பல்வேறு சமய நம்பிக்கைகள், பண்பாடுகள் மற்றும் மொழிகளுடன் நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் இந்திய மக்களைப் பிளவுபடுத்திட, அரசியலமைப்பு சட்ட விழுமியங்களை அழித்திட முயலும் மத்திய கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகத் தீவிரமான போராட்டங்களை நடத்திட தொழிலாளர்கள் – விவசாயிகள் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதே  இன்றைய காலத்தின் கட்டாயம் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் முழங்கினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button