பாலிடிக்ஸ்ல நிறைய இருக்குங்க.. ஜெய் பீம் குறித்தும் சூர்யா குறித்தும் குஷ்பு பேசியது இதுதான்!
சென்னை : ஜெய் பீம் குறித்தும் சூர்யா குறித்தும் குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, ஜெய்பீம் படத்தை தான் இன்னமும் பார்க்கவில்லை என்று பதில் அளித்தார். மீண்டும் மீண்டும் செய்தியாளர்கள் கேட்ட போது பாலிடிக்ஸ்ல நிறைய இருக்குங்க.. . தன்னை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று சூர்யாவிற்கு நல்லாவே தெரியும் என்று குஷ்பு தெரிவித்தார்.
சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரை சாலையில் அமைந்துள்ள டுமீல் குப்பம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி 500 பேருக்கு பிரெட் & 500 பால் பாக்கெட் ஆகியவற்றை நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு சுந்தர் இதை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த குஷ்பு மழை வெள்ள விவகாரத்தில் திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் குற்றம்சாட்டினார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர், ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவிற்கு திரையுலகில் ஆதரவு தரவில்லை. நீங்கள் திரை துறையை சார்ந்தவர். அவருக்கு ஆதரவு தருவீர்களா என்று கேட்டார்.
அத்துடன் திரைத்துறையில் யாருமே சூர்யாவிற்கு ஆதரவு தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு குஷ்பு, நான் இன்னும் ஜெய்பீம் படம் பார்க்கவில்லை. படம் பார்க்காமல் எதுவும் தெரிவிக்க முடியாது. ஒவ்வொரு படம் வரும் போதும், சமூக வலைதளங்களில் உட்கார்ந்து கொண்டு அவர்களுக்கு பிடித்த கருத்தை சொல்கிறார்கள். படம் பார்க்காமல் எதுவும் என்னால் சொல்ல முடியாது. படத்தை பார்த்துவிட்டு தெரிவிக்கிறேன்.
நேற்று மட்டும் பேப்பரில் பார்த்தேன். ஜெய்பீம் படம் யார் மீது(மெயின் கேரக்டர்) உருவாக்கப்பட்டுள்ளதோ அந்தஅம்மாவிற்கு மட்டும் எந்த உதவியும் செய்யவில்லை.. அவரிடம் படம் எடுக்க கேட்கவே இல்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.இதற்கு சூர்யா அவர்கள் மட்டுமே பதில் சொல்ல முடியும். என்னால் அதற்கு பதில் சொல்ல முடியாது. அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், சூர்யா உதவி பண்ணியிருக்கிறார். பார்வதி அம்மாவின் பெயரில் நடிகர் சூர்யா 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளார்.
நீங்களும் திரைதுறையில் இருந்து தான் வந்துள்ளீர்கள். சூர்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லையே என்று செய்தியாளர் கேட்டார். அதற்கு குஷ்பு பாலிடிக்கிஸில் (அரசியலில்) நிறைய இருக்கிறது. சூர்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கவிட்டால் வேலை செய்யவில்லை என்று அர்த்தம் இல்லை. ஆதரவு கொடுத்தால் தான் கூட நிற்கிறோம் என்று அர்த்தமா? இல்லையே? படமே பார்க்காமல் எப்படி பேச முடியும் என்றார்.