பாஜகவில் இருந்தால் என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்யலாம்.. பெரிய குற்றமென்றால் பெரிய பரிசு கிடைக்கும்- உ.பி. அரசியல் தலைவர் கடும் தாக்கு
பாஜகவில் இருந்தால் குற்றங்களை போஷித்து நல்ல பரிசளிப்பார்கள். பெரிய குற்றம் செய்தால் பெரிய பரிசு உண்டு என்று உத்தரப் பிரதேச அரசியல் தலைவர் ஓம்பிரகாஷ் ராஜ்பர் சாடியுள்ளார்.
சுகெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஒம் பிரகாஷ் ராஜ்பர், உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்று முதல்வராவார் என்று உறுதியாகக் கூறுகிறார்.
2022-ல் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பாக எதிர்ப்பார்க்கப்படும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது, இதில் சமாஜ்வாதி கட்சி சுகெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் நியூஸ் 18-க்கு அளித்த பேட்டியில் அகிலேஷ் யாதவ் தான் அடுத்த உ.பி.முதல்வர் என்பதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இந்த ஓம் பிரகாஷ் ராஜ்பர் சமீபத்தில் மாஃபியாவாக இருந்து அரசியல்வாதியான முக்தர் அன்சாரியை சிறையில் சென்று சந்தித்தார், இது பெரிய சர்ச்சைகளை உ.பி.யில் கிளப்பியது, அது பற்றி ஓம் பிரகாஷ் கூறும்போது, “தற்போது நாட்டில் கிரிமினல்கள் மீது தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, குறிப்பிட்ட மதம், சாதியைச் சேர்ந்த கிரிமினல்கள் மீது மட்டும் நடவடிக்கை பாய்ந்து வருகிறது.பாஜக அரசு முஸ்லிம்கள், பிராமணர்கள், தலித்துகளை இலக்கு வைத்து அடக்கி ஒடுக்குகின்றனர். நான் பெரிய பெரிய மாஃபியாக்களை ஜெயிலில் வைத்து பார்த்திருக்கிறேன், இவர்களுக்கு பாஜக இனிப்புகள் வழங்கி ஊக்குவித்து வருவதையும் பார்க்கிறேன். முக்தர் அன்சாரியை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். பாண்டா சிறையில் முக்தர் அன்சாரியை நான் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த போதே போய் சந்தித்திருக்கிறேன். 8 முறை அவரை நான் சிறையில் பார்த்திருக்கிறேன் அப்போதெல்லாம் பாஜகவுக்கு பிரச்சனையில்லையா?பாஜகவுடன் இருந்து என்ன குற்றங்களை வேண்டுமானாலும் செய்யலாம் அவர் என்ன செய்கிறார் என்பது கேள்வியே அல்ல. சஞ்சய் நிஷாத் சமீபத்தில் பகவான் ராமர், தசரதனின் மகனே அல்ல என்றார், பாஜகவுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க தைரியம் இருக்கிறதா? உதவி முதல்வர் தினேஷ் சர்மா ஒருமுறை சீதாதேவி டெஸ்ட் டியூப் பேபி என்றார், பாஜக என்ன செய்து விட்டது? ஒன்றும் செய்யவில்லை. பாஜகவில் இருந்தால் குற்றங்களை போஷித்து நல்ல பரிசளிப்பார்கள். பெரிய குற்றம் செய்தால் பெரிய பரிசு உண்டு. நான் பாஜகவுடன் இருந்த போது 12,000 முஸ்லிம்கள் எனக்கு வோட்டு போட்டது கூட அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் வாக்கு இல்லாமல் நான் வெற்றி பெறவே முடியாது.
பாஜகவுக்கு ஓட்டு வேண்டுமென்றால் தலித்துகளின் கால்களைக் கழுவி விடுவார்கள். அந்தத் தண்ணீரையே குடிப்பார்கள். ஆனால் தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டால் பிணத்தை நள்ளிரவில் எரிப்பார்கள். குற்றவாளிகளை பாஜக காப்பாற்றும்.
பாஜகவில் இப்போது 3 லாபிகள் உள்ளன, ஒன்று யோகி ஆதித்யநாத் – ஆர்.எஸ்.எஸ். லாபி. 2. அமித் ஷா-கேஷவ் மவுரியா லாபி, 3வது லாபி பிராமணர்கள். இந்த 3 லாபிகளி ஒன்று யோகியைத் தோற்கடிக்க பணியாற்றி வருகிறது, இன்னொரு லாபி பாஜக வெல்ல வேண்டும் என்று பணியாற்றும், 3வது லாபி ஒரு பிராமணரை முதல்வராக்க வேண்டும் என்று பார்க்கிறது.
ஆனால் 100% உறுதியாகக் கூறுகிறேன் அகிலேஷ்ஜி முதல்வராவார். பாஜகவை வெளியேற்ற அகிலேஷினால்தான் முடியும் காங்கிரஸ், பகுஜன் கட்சிகளால் முடியாது” என்கிறார் ஓம் பிரகாஷ் ராஜ்பர்.