விவசாயிகளுக்கு நிவாரணம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வாடிகால்கள் ஆகியவற்றை சீரமைக்க மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கன்னியாகுமரியில் பெய்த கனமழையினால் உட்கட்டமைப்பு வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த லட்ச கணக்கான ஹெக்டர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டு பயிர் பாதிப்பு நிலவரம் குறித்த்து விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார். மழை நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்று விவசாயிகள் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் பயிர்சேதங்கள் குறித்த அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்மிக்கப்பட்டது. இதையடுத்து மழை நீரினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை – கார் – சொர்ணவாரிப் பயிர்கள் முழுமையாக சேதமடைந்த இனங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ஹெக்டர் ஒன்றுக்க ரூ.20,000 வழங்கப்படும்.
நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை மறு சாகுபடி செய்திட ஏதுவாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு 6038 ரூபாய் மதிப்பீட்டில் இடுபொருள்கள் வழங்கப்படும். மேலும் மழை வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பாதிப்படைந்த சாலைகள், வடிகால்கள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை சரி செய்ய ரூபாய் 300 கோடி வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.