இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம்: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் பங்கேற்கும் !
இந்தி திணிப்பிற்கு எதிராக மாணவர் மற்றும் இளைஞர் பெருமன்றங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் பங்கேற்கும்.
இது குறித்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலக்குழு சார்பில் மாநிலச் செயலாளர் மருத்துவர் அறம் வெளியிடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்திக்குறிப்பு பின்வருமாறு:
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் அலுவல் மொழி குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையை செப்டம்பர் 9 அன்று குடியரசுத் தலைவரிடம் வழங்கியுள்ளது.
இந்த நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவராக ,ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா செயல்பட்டுள்ளார்.
இக்குழு 112 பரிந்துரைகளை, அலுவல் மொழி தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் வழங்கி உள்ளது.
அதில் பல்வேறு பரிந்துரைகள் இந்தி மொழியைத் திணிக்கும் வகையில் அமைந்துள்ளன.
இந்தி பேசும் மாநிலங்களில் ஒன்றிய அரசு நடத்தும் ஐஐடி, ஐஐஎம், கலை, அறிவியல், தொழில்நுட்ப நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள் , பல்கலைக்கழகங்கள் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிற்று மொழியாக இந்தி கட்டாயமாக்கப்படவேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.
தற்போது ஒன்றிய அரசு நடத்தும் கேந்திர வித்யாலயாக்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்தப் பரிந்துரை, இந்நிறுவனங்களில் பயிலும் இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியை நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது.
மேலும், இந்நிறுவனங்களில் எதிர்காலத்தில் இந்தி பயின்ற மாணவர்கள் மட்டுமே சேரும் நிலை இதனால் உருவாகும்.
இந்தி மொழி தெரியாத, இந்தி பேசாத மாநில மாணவர்கள் இந்நிறுவனங்களில் படிக்கமுடியாத நிலை ஏற்படும். இதனால் இந்தி பயில வேண்டும் என்ற மனநிலை மறைமுகமாக உருவாக்கப்படும். இது மறைமுக இந்தி திணிப்பை உருவாக்கும்.
இந்தப் பரிந்துரையானது படிப்படியாக இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள, ஒன்றிய அரசு நடத்தும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் ஆபத்து உள்ளது.
அவ்வாறு விரிவுபடுத்தப்படும் போது இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒன்றிய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் கல்வி மறுக்கப்பட்டதாக ஆகிவிடும்.
இப்பரிந்துரையில், ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளுக்கான கட்டாய ஆங்கிலத் தேர்வு நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக கட்டாய இந்தித் தேர்வு அமலாக்கப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இது ஒன்றிய அரசின் நிறுவனங்களில் இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிப்பதாக உள்ளது.
மேலும் ஒன்றிய அரசு வழங்கும் விளம்பரங்களில், இந்தி மொழிக்கு 50 விழுக்காட்டுக்கு மேல் நிதி ஒதுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தங்களின் முதன்மை மொழியாக இந்தியை 43 விழுக்காடு இந்தியர்கள் மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் 36 உள்ளன. இவற்றில் 12 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் மட்டுமே இந்தி முதன்மை மொழியாக உள்ளது.
இந்தியாவின் எதார்த்த நிலை இவ்வாறு இருக்கும்போது, ஒன்றிய அரசு இந்தி மொழிக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, எட்டாவது அட்டவணையில் உள்ள மற்ற 21 மொழிகளையும் புறக்கணிக்கும் போக்கில் செயல்படுகிறது.
இந்தப் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக, நிர்வாக மொழியாக, பயிற்று மொழியாக மாற்ற வேண்டும்.
அதுவரை, தற்போது உள்ள முறையில் ஒன்றிய அரசு நடத்தும் கேந்திர வித்யாலயாக்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆங்கிலமே பயிற்று மொழியாக தொடர வேண்டும்.
ஒன்றிய அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளில் கட்டாய இந்தி தேர்வு என்ற பரிந்துரையை நீக்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் நிதியைச் சமமாக ஒதுக்கி, சமமாக பேணி காக்க வேண்டும்! வளர்க்க வேண்டும்!
இந்தியாவில் மொழிக்கான ஜனநாயக கொள்கையை உருவாக்கி அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும்.
இந்தியாவை இந்து நாடாக அறிவித்திடும் நோக்கில் ‘ஒரே தேசம்,ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்’ என்னும் ஒற்றைத் தன்மையைத் திணிக்க ஒன்றிய அரசு முயல்கிறது.
இந்தியாவின் பன்மைத்துவத்தைச் சிதைக்கிறது.
இந்நிலையில், ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து வரும் 27.10.2022 வியாழக்கிழமை அன்று மாவட்ட தலைநகரங்களில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) இணைந்து ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றன.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.