இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ம், தன்பாலின திருமணச் சட்டமும்

-பீட்டர் துரைராஜ்.
கடந்த மாதம் கேரளா உயர்நீதிமன்றம், ஒரு பாலினத்தைச் சார்ந்த இருவர் சேர்ந்து வாழ தடையில்லை என்று தீர்ப்பு அளித்துள்ளது. எர்ணாகுளத்தைச் சார்ந்த அதிலா நசுரீன் என்ற 22 வயது பெண்ணும், நூரா என்ற 23 வயது பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இதனை விரும்பாத நூராவின் பெற்றோர், அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று விட்டனர். இதனை எதிர்த்து அதிலா நசுரீன் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த, கேரள உயர்நீதி மன்றம் இருவரும் சேர்ந்து வாழ தடையில்லை என்று சொல்லி விட்டது. ஒரே பாலினத்தைச் சேர்ந்த அதாவது, ஆணும் – ஆணும், அல்லது பெண்ணும்- பெண்ணும் திருமணம் செய்து கொள்வது பற்றி சட்டம் என்ன சொல்கிறது.
தன்பாலின உறவை குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 வது பிரிவு கூறியது. கிறிஸ்தவர்களின் வேத நூலான விவிலியத்தின் எண்ணவோட்டப்படி, ஆங்கிலேயர்களால் 1860 ல் இயற்றப்பட்ட, இந்திய தண்டனைச் சட்டம், தன்பாலின உறவு குற்றம் என்று கூறியது. ஆனால் 2018 ஆண்டு, உச்சநீதிமன்றம் தன்பாலின உறவு குற்றம் இல்லை (Decriminalisation of Homosexuality) என்று ஒரு தீர்ப்பில் கூறிவிட்டது. எனவே தற்போது தன்பாலின உறவு என்பது ஒரு குற்றமாகாது. அவர்கள் திருமணம் செய்து கொண்டால், அது சட்டப்படி செல்லுமா ? ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா ?
இது குறித்து மருத்துவர் அமலோற்பநாதன் அவர்களிடம் கேட்டபோது ” ஒருவருடைய பாலியல் விருப்பத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. ஆணும் – பெண்ணும்தான் உடலுறவு கொள்ள வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. இதில் மாறுபாடு இருக்கலாம். இது மருத்துவ ரீதியிலும், உயிரியல் ரீதியிலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.

எனவே தன்பாலின உறவு குற்றமில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதுதான். அவர்கள் திருமணம் செய்துகொள்ள தனியான சட்டம் கேட்டால் இயற்றுங்கள். அதனால் சமுதாயத்திற்கு என்ன தீங்கு நேரப்போகிறது. அவர்கள் குழந்தையை தத்து எடுத்து வளர்க்க இந்தச் சட்டம் பயன்படும். சொத்துரிமைக்கும் இந்தச் சட்டம் பயன்படும் ” என்றார்.
“தன்பாலின உறவு பழக்கம் கொண்டவர்களோடு, நான் பழகியிருக்கிறேன். சாதாரணமாக நமக்கு எப்படி எதிர்பாலினத்தவரோடு பாலியல் ஈர்ப்பு இருக்கிறதோ அப்படித்தான் அவர்களுக்கு தன்பாலினத்தைச் சேர்ந்தவர்களோடு ஈர்ப்பு இருக்கும். இது அவர்களின் பாலியல் தேர்வு; உரிமை. எனவே சமுதாயம் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்” என்றார் ஆய்வாளரான கீதா நாராயணன்.
“தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களை இந்த சமுதாயம் அவமானமாக கருதுகிறது. வீட்டை விட்டு துரத்துகிறார்கள். தற்கொலை செய்துகொள்வேன் என பெற்றோர்கள் மிரட்டி அவர்கள் விருப்பத்திற்கு விரோதமாக, திருமணம் செய்து வைக்கிறார்கள். இது அவர்களுக்கு, கூடுதலாக மன அழுத்தங்களைத் தருகிறது. பொதுக்கருத்தை உருவாக்கும் வெகு மக்கள் ஊடகங்கள், தன்பாலின உறவு கொண்டவர்களை மோசமாக காட்சிப்படுத்துகின்றன. உதாரணமாக, ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வரும் வில்லனை தன்பாலின உறவு கொண்டவனாக காட்டியிருப்பார்கள். பத்திரிகைகளில் எழுதும் போது ‘கூடா நட்பு’ என்று எழுதுவார்கள். இது போன்ற சொல்லாடல்களாலும், காட்சி அமைப்புகளாலும் இவர்களுக்கு எதிரான மனநிலை கட்டப்படுகிறது. இவர்கள் நல்லவிதமாக காட்சிப்படுத்தி ஒரு பாடல் வைக்கலாம். படம் எடுக்கலாம். அவர்களும் நம்மைப் போல உணர்வு கொண்டவர்கள் என்பதை எழுதலாம். இப்போதுதான் ஆண், பெண் என்பதைத் தாண்டி, திருநங்கை, திருநம்பி என்ற சொல்லாடல்களைப் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள்.

இன்னும் வரவேண்டிய வார்த்தைகள் நிறைய உள்ளன. தன்பாலின திருமணத்திற்கு சட்டம் கொண்டு வருவது தவறில்லை. 2018 ல், உச்சநீதிமன்றம் தன்பாலின உறவு குற்றமில்லை என்ற தீர்ப்பு ( நவ் தேஜ் சிங் ஜோகர் எதிர் இந்திய அரசு) வர வாதாடிய வழக்கறிஞர்கள் மேனகா குருசாமி, அருந்ததி கட்ஜூ ஆகிய இருவரும், தங்களை சேர்ந்து வாழும் தம்பதியினர் என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டனர் ” என்றார் பத்திரிகையாளரான பிருந்தா சீனிவாசன்.
தேசியவாத கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான சுப்ரியா சுலே, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதை சட்டமாக்க, தனிநபர் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது சட்டமானால், சேர்ந்து வாழும் இருவரில் ஒருவர் இறந்து போனால் அவரது உடலை பெறும் உரிமை, நட்ட ஈடு பெறும் உரிமை, சொத்தில் உரிமை, தத்தெடுக்கும் உரிமை போன்றவைகளை பெற இயலும்.
தில்லி உயர்நீதிமன்றத்தில், ஒரே பாலினத்தைச் சார்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு சட்டம் இயற்றக் கோரி தாக்கல் செய்யப்படுள்ள வழக்கு விசாரணையில் உள்ளது. இதற்கு எதிராக ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. முடிவு எப்படி இருக்கும் என தெரியவில்லை.
இராணுவத்தில் இருந்து தன்பாலின விழைவு காரணமாக மேஜர்.சுரேஷ் என்பவர் ஓய்வுபெற்றார். அதனை மையமாக வைத்து ஒனிர் என்பவர் இயக்கிய படத்தை வெளியிட இராணுவம் அனுமதிக்கவில்லை. உச்சநீதிமன்றம் தன்பாலின உறவு குற்றமற்றதாக ஆக்கியும், இந்தப் படத்திற்கு அனுமதியளிக்கப்படவில்லை.
ஒரே பாலின விருப்பம் உள்ளவர்கள் எத்தனை பேர் என்பது போன்ற புள்ளி விபரங்கள் ஏதுமில்லாத சூழலில், நமது பொறுப்பு அதிகமாகிறது.
அரசாங்கமானது தனி நபர் உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். குறிப்பாக சிறுபான்மையினர் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்; அது மொழி சிறுபான்மையினராக இருக்கலாம்; இன சிறுபான்மையினராக இருக்கலாம்; மத சிறுபான்மையினராக இருக்கலாம்; பாலியல் சிறுபான்மையினராக இருக்கலாம். இவர்களின் உரிமைகளுக்காக முனைப்பு காட்ட வேண்டியது அவசியமாகும். அனைவராலும் நீதிமன்றங்களுக்கு செல்ல முடியாது. எனவே ஒன்றிய அரசு இதற்காக சட்டம் இயற்ற வேண்டும். தில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு பாலின திருமணத்தை எதிர்த்து கருத்து தெரிவிக்கக் கூடாது. இதற்கேற்ற வகையில் திருமணச் சட்டங்களை திருத்தி குடும்பம் என்ற வரையறையில் உரிய மாற்றங்களை செய்ய வேண்டும்.
விநோதமாக, இதுபோன்ற சட்டங்களை எதிர்ப்பதில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் தலைமைகள் ஒரே நிலை எடுக்கின்றன. நெதர்லாந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பாக, முதன்முதலில் ஒரே பாலினத்தைச் சார்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்ள சட்டம் இயற்றியது. தற்போது இது போன்ற சட்டங்களை 31 நாடுகள் இயற்றியுள்ளன. செக்கோஸ்லோவியா நாட்டிலிருந்து பிரிந்த நாடான ஸ்லோவேனியா, கடந்த வாரம் இப்படி ஒரு சட்டத்தை இயற்றி உள்ளது. எனவே இந்தியாவும் தன் பாலின திருமணத்தை ஒத்துக்கொள்ள சட்டம் இயற்ற வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டபடி, தனி நபர் உரிமைகளை உறுதி செய்ய வேண்டிய கடமை பாராளுமன்றத்திற்கும் உள்ளது; நீதிமன்றத்திற்கும் உள்ளது; அரசிற்கும் உள்ளது. எனவே, பாலின சிறுபான்மையினர் உரிமையைப் பாதுகாக்கும் வகையில், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதை அங்கீகரிக்க சட்டம் இயற்ற வேண்டும். இந்தியாவில் இயற்றப்படும் சட்டங்களின் தாக்கம், மற்ற நாடுகளிலும் எதிரொலிக்கும்.