இந்தியா-ரஷ்யா நட்புறவைப் போற்றும் நடை நிகழ்ச்சி!
செய்தித்தொகுப்பு: வி.கே.கோபாலன்
இந்தியா -ரஷ்யா இடையேயான அரசு முறையிலான நட்புறவின் 76 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் வகையில் 15-04-23 காலை 7 மணியளவில் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நட்புறவு நடை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரஷ்யக் கலாசார மையம் செய்திருந்தது.
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நட்புறவு நீண்ட காலமாகவே பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம், இராணுவம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரம் ஆகிய பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாகத் தொடர்ந்து வருகிறது. இக்கட்டான நேரங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் ஆழமான நட்புறவின் அவசியம் தற்போது மேலும் அதிகரித்துள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடை நிகழ்ச்சி
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரஷ்ய கலாசார மையத்தின் கான்சல் ஜெனரல் மேதகு அலைக் என் அவ்தீவ், இயக்குநர் மற்றும் துணை கான்சல் கென்னடி ரோகலெவ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ரஷ்யாவுடன் நட்புறவை விரும்பும் இஸ்கஃப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றன. இஸ்கஃப் சார்பாக சென்னை பெருநகர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தலைவர் தமிழ்மது, தலைமைக் குழுத் தோழர்கள் தேசிங், விகேஜி மற்றும் தோழர்கள் டிபிஜே, கராத்தே சீனிவாசன், துரைபாபு, G.D. குமார், கண்ணதாசன், காமாட்சி, பிரபாகரன், நாகராஜன், வீரபாண்டியன், அருண் அசோகன் மற்றும் ராஜவேலு உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கலந்துகொண்ட அனைவரும் இந்திய-ரஷ்ய நட்புறவைப் போற்றும் வகையில் தொப்பி அணிந்து இரு தேசங்களின் கொடிகள் ஏந்தி வண்ணமயமாக அணிவகுத்துச் சென்றனர். இஸ்கஃப் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். கான்சல் ஜெனரல் நன்றி நவின்றார்.