தமிழகம்

இந்தியா மதச்சார்பற்ற நாடா? மதரீதியாக பிளவுபட்டதா?

சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை,பிப்.10- நாட்டில் சிலர் ஹிஜாப்க்காகவும், சிலர் வேட்டிக்காகவும் போராடுவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், நாடு முக்கியமா அல்லது மதம் முக்கியமா என்றும் கேள்வி எழுப்ப்பியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த பொது நல மனுவில், கடந்த 1947 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு ஆலய பிரவேச சட்டத்தில், இந்துக்கள் அல்லாதோர் கோயில்களுக்குள் நுழைய அனுமதியில்லை எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த 1970 ஆம் ஆண்டு இந்துக்கள் அல்லாதோரும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம், 1972-இல் ரத்து செய்த போதும், பிற மதத்தைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

எந்த சட்டப்பூர்வமான உரிமையும் இல்லாத நிலையில், இந்துக்கள் அல்லாதோர் கோயில்களுக்குள் நுழைய அனுமதியில்லை என்ற விளம்பர பலகைகளை, கோயிலின் நுழைவு வாயில்களில் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் அந்த விளம்பரப் பலகையில் கோயிலுக்கு வரும் போது இது போன்ற ஆடைகள் அணிந்து வரவேண்டும் என்று சுட்டிக்காட்ட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், கோயில்களுக்கு வருபவர்கள் மரபுப்படி உடை அணிந்து வர வேண்டும். தஞ்சை, மதுரை போன்ற கோயில்களில் பிற மதத்தவர்கள் லுங்கி, டவுசர் அணிந்து வருகின்றனர்.

கோயில்களுக்குள் வெளிநாட்டவர்களை அனுமதிக்கக் கூடாது என்று வாதிட்டார். அப்போது நீதிபதிகள், பல கோயில்களில் உரிய நடைமுறைகளும் மரபுகளும் பின்பற்றப்படுவதாக சுட்டிக்காட்டினர். நாட்டில் ஹிஜாப் அணிவதற்காகவும், கோயில்களில் வேட்டி கட்டுவதற்காகவும் போராடுவது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடா அல்லது மத ரிதியாக பிளவுபட்டதா என கேள்வி எழுப்பினர்? மேலும், அனைத்து கோயில்களிலும் ஒரே மாதிரியான மரபு பின்பற்றப்படுகிறதா? , ஆகம சாஸ்திரத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது ?, குறிப்பிட்ட உடை தான் அணிய வேண்டும் என மரபு உள்ளதா? எந்த கோயிலில் உள்ளது எனவும் கேள்வி எழுப்பினர். அநாகரிகமாக உடை அணிந்து வருவதாக புகார்கள் உள்ளதா? , ஆகம சாஸ்திரத்தில் வேட்டி தான் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதா?

என நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கோயில் களில் ஆடைக் கட்டுப்பாடு விதித்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் ரத்து செய்ததாகவும், நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடாது. மனுதாரரின் கோரிக்கை மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்துவது போன்றதாக உள்ளதாக கருத்து தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button