கட்டுரைகள்

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரிபாய் பூலே

-ஆனந்த் பாசு

‘கல்வி’ என்பது ஒரு சில ‘உயர்சாதி மற்றும் சலுகை பெற்றவர்களின் பாதுகாப்பு’ என்று சொல்லப்பட்ட காலகட்டத்தில், உயர் சாதிப் பெண்கள் உள்ளிட்ட அனைத்து பெண்களுக்கும் கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவிலேயே முதல் பெண்கள் பள்ளியை நிறுவுவதன் மூலம் கல்விக்கோட்டையின் இரும்புக் கதவுகள் பெண்களுக்கும் திறந்து விடப்பட்டன. இந்தச் செயற்கரிய செயலை செய்த பெருமைக்குரியவர் சாவித்திரிபாய் பூலே எனும் ஒரு பெண் ஆசிரியர். பாத்திமா ஷேக் எனும் பெண்மணியுடன் இணைந்து சாவித்திரிபாய் பூலே இந்தியாவில் பெண் கல்வியின் முன்னோடியாக இருந்தார்.

விவசாய சமூகத்தில் பிறந்த சாவித்திரிபாய், 1831 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி பிறந்தார். அவருடைய ஒன்பதாவது வயதிலேயே, ஜோதிபா பூலே என்பவருடன் அவருக்குத் திருமணம் நடந்தது. ஜோதிபா பூலே, அன்றைய பம்பாய் பிரசிடென்சி மாகாணத்தில் அளப்பரிய பணியாற்றிய, இந்தியாவின் முதல் சமூக சீர்திருத்தவாதி ஆவார். அவர் வறுமை, சாதி வேற்றுமை மற்றும் சமூக இழிவு ஆகியவற்றிலிருந்து
தாழ்த்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட வகுப்பினருக்குக் கல்வி கற்பிப்பதன் மூலம், அவர்களுக்கு அர்த்தமுள்ள வாழ்க்கையை அமைக்க வழி செய்தார்.

தம் குடும்ப உறுப்பினர்கள், உயர் சாதியினர் மற்றும் அந்தக் காலத்துப் பிற்போக்கு சிந்தனை கொண்டிருந்த சமூகத்தின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்ட ஜோதிபா பூலே, சாமான்ய மக்களுக்கும் கல்வி கற்பிப்பதற்கான தனது பணியில் நெஞ்சுறுதி மிக்கவராக இருந்தார். அவர் இந்த போற்றுதலுக்குரிய சமூகப் பணியை மேற்கொண்ட போது, தனது உயிருக்கே குறி வைத்து விடப்பட்ட அச்சுறுத்தல்கள் உட்பட எண்ணற்ற இன்னல்களை எதிர்கொண்டார். ஆயினும், அவர் ஒரு கல்வியறிவு பெற்ற சமுதாயத்தை
உருவாக்குவதற்கான தனது அரும்பணியைத் தொடர்ந்து மேற்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, அவர் தனது குழந்தை மனைவி சாவித்ரிபாய் பூலேவுக்கும் கல்வியறிவு கிடைக்கச் செய்தார். காலப்போக்கில், சாவித்ரிபாய் பூலே தம் கல்வியறிவைப் பெருக்கிக் கொண்டு, தனது சொந்த முயற்சியில் ஒரு ஆசிரியராகவும்
உருவெடுத்தார்.

பூலே தம்பதியினர் தங்கள் வீட்டையே ஏழை மற்றும் விளிம்புநிலை வகுப்புக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கும் மையமாக மாற்றினர். அவர்களது இந்தப் பணிக்கு உயர் சாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பூலே தம்பதியரை அந்த வீட்டை விட்டே வெளியேற்றுவதற்கு, அந்த வீட்டு உரிமையாளருக்கு அழுத்தம் கொடுத்தனர். எனவே, பூலே தம்பதியினர் தம்முடன் நட்புறவு கொண்டாடிய உஸ்மான் ஷேக்கின் உதவியை நாடினர். பூலே தம்பதியினரின் உன்னதமான பணிக்கு ஆதரவுக் கரம் நீட்ட ஷேக் முன் வந்தார். அவர்கள், தனது வீட்டிலேயே தங்குவதற்கு இடம் அளித்தது மட்டுமின்றி, முதல் பெண்கள் பள்ளியைத் தொடங்குவதற்கு இடவசதியும் வழங்கினார்.

உஸ்மான் ஷேக்கின் சகோதரி பாத்திமா ஷேக், சாவித்திரிபாய் பூலேவுடன் இணைந்து, 1848 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியை நிறுவினார். மேலும், இருவரும் அப்பள்ளியின் முதல் பெண் ஆசிரியர்களாகவும் ஆனார்கள். சாவித்ரிபாய் பூலே இந்த முதல் பெண்கள் பள்ளியைத் திறந்தபோது தனது பதின்ம வயதிலேயே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர், 1852ல் சாவித்திரிபாய் பூலே புனேவில் மூன்று முழுமையான பெண்கள் பள்ளியை நிறுவினார். உயர் சாதியினரின் எதிர்ப்பையும் மீறி, நம் இந்திய நாட்டை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயர்களின் ஆதரவுடன் பள்ளிகள் தொடர்ந்து இயங்கின. இதனால், பல தாழ்த்தப்பட்ட பெண்கள் பள்ளிகளில் படிக்க முன்வந்தனர். சாவித்திரிபாய் புலே மற்றும் பாத்திமா ஷேக் ஆகியோர் 1852 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி பிரிட்டிஷ் நிர்வாகத்தால் வெகுஜனங்களுக்குக் கல்வியைப் பரப்பிய மகத்தான சேவைக்காக கௌரவிக்கப்பட்டனர்.

1857 ஆம் ஆண்டு, சிப்பாய்க் கிளர்ச்சியின் காரணமாக அனைத்து பள்ளிகளும் செயல்படுவதை நிறுத்திவிட்டன. இருப்பினும், இந்த இரு பெண்களும் சற்றும் தயங்காமல் தங்கள் பணியைத் தொடர்ந்தனர். பிற்காலத்தில், சாவித்ரிபாய் பூலே அனைத்து சமூகத்தினரின் குழந்தைகளும் கல்வி கற்பதற்காக ௧௮ பள்ளிகளைத் திறந்தார். அந்தப் பள்ளிகளில், குறிப்பாக சமூகத்தின் நலிந்த பிரிவினர், தாழ்த்தப்பட்ட மற்றும் தீண்டத்தகாதவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தார்.

பூலே தம்பதியினர், கல்வி பெறாத தொழிலாளர்கள் மற்றும் விவசாய சமூகத்தினர் பகல் நேரத்தில் வேலையில் மூழ்கியிருந்ததால், அவர்கள் கல்வி கற்க உதவுவதற்காக ஒரு இரவுப் பள்ளியையும் நிறுவினர். ஜோதிபா பூலே ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதி மட்டுமல்ல; அவர் வாழ்ந்த காலத்தின் ஆகச் சிறந்த சிந்தனையாளராகவும் விளங்கினார். அவர் தாழ்த்தப்பட்ட சாதியினர் மற்றும் தீண்டத்தகாதவர்களின்
நிலையை மேம்படுத்துவதற்காக சமூகத்தில் புரையோடிக் கிடந்த தவறான கருத்துக்கள், கட்டமைப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை எதிர்த்துப் போராடினார். தீண்டத்தகாதவர்களை ஒடுக்கப்பட்ட மனிதர்கள் என்று குறிப்பிடும் ‘தலித்’ என்ற சொற்பதத்தை உருவாக்கியவர் ஜோதிபா பூலே என்பது
குறிப்பிடத்தக்கது. இவர் தம் மனைவி சாவித்திரிபாய் பூலேவின் கல்விப் பணிகளுக்கு ஆதாரமாய் இருந்தது போலவே, சாவித்திரிபாயும் தன் இணையருடைய சமூகப் பணிகளுக்கு ஆதரவாய் இருந்தார்.

பெண்களுக்கான பள்ளியை நிறுவிய பிறகு, ஜோதிபா பூலே தனது மனைவி சாவித்ரிபாய் பூலே பள்ளிக்குச் செல்லும்போது பாதுகாப்பிற்காக உடன் செல்வார். அவர் தனது மனைவியின் கூடுதல் ஆடைகளுடன் ஒரு பையையும் எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தம்பதிகள் தங்கள் வீட்டை விட்டுப் பள்ளிக்கு செல்லும் வழியில், ​​சகிக்க முடியாத அவச்சொல்கள், அவமானங்கள் போன்றவை மட்டுமின்றி உயர் சாதியினரால் அவர்கள் மீது கற்கள் மற்றும் மாட்டு சாணம் வீசப்படுதல் போன்ற தாக்குதல்களை எதிர்கொண்டார்கள். ஆகவே, அவர்கள் பள்ளி சென்று சேருவதற்குள், சாவித்ரிபாய் பூலேவின் ஆடை, மாட்டுச் சாணத்தால் அழுக்கடைந்திருக்கும். ஜோதிபா புலே தான் எடுத்துச் சென்ற சாவித்திரிபாயின் கூடுதல் ஆடைகளை, அழுக்கடைந்த ஆடையை மாற்றுவதற்காகக் கொடுப்பார்.

இதேபோல், பாத்திமா ஷேக்கும், இஸ்லாமிய சமூகத்தினர் மற்றும் உயர் சாதி இந்துக்களின் கோபத்தை எதிர்கொண்டார். அவரும், தனது வீட்டிலிருந்து பள்ளியை அடைவதற்குள், அவர் மீது வீசப்பட்ட பசுவின் சாணத்தால் நனைக்கப்பட்டார். இத்தகைய இடையறாத இன்னல்களை எதிர்கொண்ட போதிலும், இந்த இரண்டு பெண்களும் தயங்காமல், விளிம்புநிலை சமூகங்களுக்கு எழுத்தறிவு மற்றும் கல்வியைப் புகட்டுவதற்கான உறுதிப்பாட்டுடன், தங்கள் பணியைத் தொடர்ந்தனர்.

இந்து சமுதாயத்தில் சீர்திருத்தங்களை ஏற்படுத்த சாவித்திரிபாய் பூலே போராடியது போலவே, பாத்திமாவும் ஒரு முஸ்லீம் பெண்ணாக, இஸ்லாமியப் பெண்களுக்குக் கல்வி பயிற்றுவித்ததற்காகத் தம் சமுதாயத்தினரின் எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இவர்களுடைய சற்றும் சளைக்காத கல்விப்பணி, உயர் சாதியினரிடையே நிலவிய, ஆண்டாண்டு காலமாக நன்கு நிறுவப்பட்ட, பழமையான நடைமுறைகள் மற்றும் மரபுகளால், அவர்களை மிகவும் கோபப்படுத்தியது. பெண்கள் கல்வி கற்பதற்கு எதிராக இந்து மற்றும் இஸ்லாமிய சமூகங்கள் இரண்டிலும் அந்த நேரத்தில் நிலவிய ஆழமான சிந்தனைப் போக்கு மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி கற்பிப்பதற்கான எதிர்ப்பு ஆகிய இரண்டும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக இவ்விரு பெண்களையும் துளைத்துக் கொண்டே இருந்தன. 1885ஆம் ஆண்டு பாலகங்காதர
திலகர் கூட, பெண்களுக்கான பூர்வீகப் பள்ளியைத் திறப்பதை எதிர்த்தார் என்பது எவ்வாறு அறிவுஜீவிகளும் பெண்களுக்கான கல்வியை ஏற்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இந்த இரண்டு பெண்களும் தங்கள் பணியில் எதிர்கொண்ட எண்ணற்ற சோதனைகளையும், தடைகளையும் தாண்டித் தயங்காமல் மேற்கொண்ட பெண் கல்வி புகட்டுதல், இன்று பெரிதும் பேசப்படுகின்ற ஒரு முக்கிய தேசியப் பணியாக உருவெடுத்திற்கும் பெண் கல்வியின் அடித்தளம் என்றால் மிகையாகாது.

1863 ஆம் ஆண்டில் சிசுக்கொலையினைக் கட்டுப்படுத்த ‘பால்பட்கா பிரதிபந்தக் கிரிஹா’ எனும் அமைப்பைத் தொடங்கினார் சாவித்திரிபாய். மேலும், ‘சதி’ எனும் உடன்கட்டை ஏறும் முறை மற்றும் குழந்தைத் திருமணத்தின் தீமைகளுக்கு எதிராக பூலே தம்பதியினர் போராடினர்; விதவை மறுமணத்தை ஊக்குவித்தனர். 1873 ஆம் ஆண்டு ‘சத்யசோதக் சமாஜ்’ எனும் அமைப்பை நிறுவி, கைம்பெண்களின்
பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தங்குமிடங்களைக் கட்டி, ஆதரவற்ற பார்ப்பன சமூகத்து குழந்தை விதவைகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு, புலே தம்பதியினர் அடைக்கலம் அளித்தனர்.

தங்களுக்குக் குழந்தையே இல்லாத புலே தம்பதியினர் இளம் பார்ப்பன விதவையிடமிருந்து ஒரு குழந்தையைத் தத்தெடுத்தனர். அந்த வளர்ப்பு மகனுக்கு யஷ்வந்த் ராவ் என்று பெயரிட்டனர். பின்னாளில், யஷ்வந்த் ஒரு மருத்துவராகப் பணி செய்தார். 1897 ஆம் ஆண்டில் புனேவில் ‘பிளேக்’ எனும் கொடிய தொற்றுநோய் தாக்கியபோது, ​​சாவித்திரிபாய் பூலே மற்றும் யஷ்வந்த் ராவ் புலே ஆகிய இருவரும், பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கடுமையான தொண்டு புரிந்தனர். யஷ்வந்த் ராவ் புலே, ஏழை மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க ஒரு கிளினிக்கைத் தொடங்கினார். ஆனால், துரதிருஷ்டவசமாகத் தாயும் மகனும் பிளேக் தொற்று ஏற்பட்டு, நோயை எதிர்த்துப் போராடி இறந்தனர்.

கல்விக்கான சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், 1998 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதியன்று, அப்போதைய ஒன்றிய அரசு சாவித்ரிபாய் பூலேயின் நினைவாக ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டது. மகாராஷ்டிரா மாநில அரசும் புனே பல்கலைக்கழகத்திற்கு, ‘சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகம்’ என்று பெயர் சூட்டி கௌரவித்தது. “கல்வியும் எழுத்தறிவும் சமுதாய வளர்ச்சிக்கான முதல் படியாகும். ஒரு எழுத்தறிவு பெற்ற பெண் தன் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கிறாள். எனவே, அந்தக் குடும்பமே கல்வியறிவு பெறுகிறது. இது சமூகத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதனால், இறுதியில் தேசத்திற்கும் நன்மை பயக்கும்” என்றார் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர். புலே தம்பதியரின் கொள்கைகளில் இருந்து உத்வேகம் பெற்ற அம்பேத்கர், மக்கள் கல்வி கற்காத வரையில் சமுதாயம் முன்னேற முடியாது என்று உணர்ந்து, அரசியலமைப்பில் குழந்தைகளுக்கான கல்வி உரிமைக் கோட்பாட்டை அடிப்படை உரிமையாக முன்மொழிந்தார். ஆனால், அவர் இதற்காக உறுப்பினர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார். இருப்பினும், அவருடைய உறுதியான நிலைபாட்டினாலும், வலியுறுத்தலாலும், 2002 ஆம் ஆண்டு நம் அரசியலமைப்பில் கல்விக்கான உரிமை, அடிப்படை உரிமையாக மாற்றப்பட்டது. ஆனால், டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையும், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பூலே தம்பதியினரின் கல்வியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அளப்பரிய சேவையும், இன்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையால் திட்டமிட்டு சிதைக்கப்பட்டுள்ளது.

இந்த தேசம் அவரது பிறந்த நன்னாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினாலும், கொண்டாடாவிட்டாலும், இந்தியாவின் ஒரு மூலையில், ஒரு சிறிய கிராமத்தின் எளிய விவசாய சமூகத்தில் பிறந்து, ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே, ஏழை, எளிய மக்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு, கல்விக் கண்ணைத் திறந்த, சாவித்திரிபாய் பூலே எனும் ஆசிரியையை இந்த ஆசிரியர் தினத்தன்று நினைவு கூர்ந்து போற்றிடுவோம்!

ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே அவர்களுக்கு வீர வணக்கம்!

தொடர்புக்கு – 73584 42610

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button