கட்டுரைகள்

இந்தியக் குடியரசின் அடித்தளங்கள் தகர்க்கப்படுகின்றன – கூட்டாட்சி முறையைப் பாதுகாப்போம்

டி.ராஜா

நமது இந்தியத் திருநாட்டை இறையாண்மைமிகு ஜனநாயக குடியரசாகப் பிரகடனப்படுத்தும் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 72 ஆம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்கிறோம். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து நமது நாடு விடுதலைப் பெற்ற 75 ஆம் ஆண்டு இது. இன்றைய ஆட்சியாளர்கள் இந்த நிகழ்வை ‘விடுதலை நாள் பெருவிழாவாகக்’ (Azadi Ka Amrit Mahotsav) கடைபிடித்து வருகிறார்கள்!

வரலாற்றைத் திரிப்பதன் மூலம் ஆட்சியாளர்கள் தங்களது வகுப்புவாத செயல்திட்டத்தை மேலும் முன்னெடுக்க மேற்கொள்ளும் முயற்சிகள் காரணமாக, அவர்களின் இந்த விடுதலைத் திருநாள் கொண்டாட்டங்கள் சர்ச்சைகளில் சிக்கியுள்ளன.

விடுதலைப் போராட்ட இயக்கத்தில் எவ்வித பங்களிப்பும் செய்திராத ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் இதர அமைப்புகள் இன்று தேசப்பற்று மற்றும் தேசிய உணர்வுக்கான சான்றிதழ்களை வழங்கி வருகின்றன! விடுதலைப் போராட்ட இயக்கத்தின் பன்மைத்துவத்தை அவர்கள் தங்களின் ஒற்றைத்தன்மை கொண்ட இந்துத்துவ கட்டமைப்பிற்குள் அடைத்துவிட முயலுகிறார்கள். அவர்களின் இந்தச் செயல் நமது மாபெரும் விடுதலைப் போராட்டத்தின் சீர்மிகு பாரம்பரியத்திற்கும், அதன் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ள அரசியலமைப்பிற்கும் ஊறு விளைவித்து வருகிறது.

1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் நாள் நமது நாடு குடியரசாக உதயமானதும், அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட அந்தத் தருணமும், அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் மிளிரும் ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நீதி’ உள்ளிட்ட உயரிய இலட்சியங்களை வென்றெடுப்பதற்கான தணியாத தாகம் நிறைந்த பயணமும், நமது தேசத்திற்கான மிகப்பெரிய நடவடிக்கைகள் ஆகும்.

பிரிட்டிஷாருக்கு எதிரான ந மது போராட்டம் பின்னடைவுகளையும், பெரும் வெற்றிகளையும், எண்ணற்ற ஏற்ற இறக்கங்களையும் கொண்ட நீண்ட போராட்டம் ஆகும். காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்கள்  உறுதிப்பாட்டுடன் ஒன்றுபட்டு நின்றனர்.
ஒரு இறையாண்மைமிகு சமத்துவ மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசை நிர்மாணித்திட வேண்டும் என்ற அபிலாஷை (Aspiration) இந்திய மக்களிடையே நிலவியது. மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பிடம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு குடிமக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகள்(Fundamental Rights), அரசு கொள்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் (Directive Principles of State Policy) உள்ளிட்ட அம்சங்கள் மூலமாக இந்திய மக்களின் அபிலாஷைக்கு ஒரு தீர்மானகரமான வடிவத்தை வழங்க நமது அரசியலமைப்புச் சட்டம் முயன்றது.

பல்வேறு மொழிகள், பண்பாடுகள், பிரதேசங்கள், பருவகால நிலைகள்  மற்றும் அரசியல் பாதைகள் நிறைந்த, ஒரு துணைக் கண்டத்திற்கான ஸ்தூலமான பன்மைத்துவ அம்சங்கள் நிறைந்த, கூட்டாட்சி அமைப்புமுறை கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் வலியுறுத்தப்பட்டுள்ள இலட்சியங்கள் அரசாங்க நிர்வாகமுறையின் அனைத்து மட்டங்களிலும் எதிரொலிக்க வேண்டியது அவசியமாக இருந்தது; தற்போதைய அவசியமாகவும் இருக்கிறது.

கூட்டாட்சி முறை என்னும் கருத்து மற்றும் உணர்வை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இதர ஏற்பாடுகள் அனைத்திலும் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வகைப்பட்ட கூட்டாட்சி முறையானாலும், அது எழுத்து வடிவம் பெற்ற ஒரு அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் வல்லமை மீதே நிலைபெறும். நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மேதைகள் பல்வேறு மாநில மக்களின் பலதரப்பட்ட தேவைகளைக் கவனத்திற் கொண்டுதான் அரசாங்கத்தின் பல்வேறு நிலைகளில் சமச்சீரான அதிகாரப் பகிர்வுக்கான ஏற்பாடுகளையும் அவர்களே செய்துள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள பட்டியல் முறை இந்த அதிகாரப் பகிர்வுக்கான ஒரு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது. ஒன்றிய, மாநில மற்றும் பொதுப் பட்டியல் என்ற இந்தப்  பட்டியல் முறை அதிகாரத்தையொட்டி எழும் மோதல் போக்கை இல்லாமல் செய்வதோடு ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்கள் அவற்றின் அதிகார வரையறைக்கு உட்பட்டு முடிவுகளை மேற்கொள்ள வகை செய்கிறது. மேலும், முடிவுகள் மேற்கொள்வதில் வெகுமக்கள் பங்கேற்பை அதிகரிக்கவும், சமுதாயத்தின் கடைக்கோடி மட்டத்திலும் ஜனநாயகத்தை வலுப்படுத்தவதற்காகவும்  பஞ்சாயத்து மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகள் சேர்க்கப்பட்டன. இதற்கென 73 மற்றும் 74வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சரத்து 246 மற்றும் 243-ஜி அதிகாரப் பிரிவுக்கு வகை செய்கின்றன. ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்கள் இடையேயான நிதிப் பகிர்வு தொடர்பாகத் தெளிவாக வரையறை செய்திட, சரத்து 280 நிதி ஆணையத்தை உண்டாக்க வகை செய்கிறது. கூட்டுறவு மற்றும் கூட்டாட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கென இந்த அமைப்புகள் மற்றும் மாநிலங்களவை தவிர, கலந்தாலோசனைகள் மற்றும் விவாதங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னோடிகள் உருவாக்கியுள்ளார்கள்.

ஒன்றிய, மாநில அரசாங்கங்களுக்கு இடையே சுமூகமான முறையில் பணிகள் நடைபெறவும், அவற்றுக்கு இடையே எழும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் மாநிலங்களுக்கு இடையேயான குழுவை(Inter State Council) அமைத்திட சரத்து 263 வகை செய்கிறது. இந்தக் குழு, சர்க்காரியா கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் 1990 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆணையின்படி அமைக்கப்பெற்றது.

நமது அரசியல் அமைப்பில், கூட்டாட்சி முறை தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கான ஒரு தளமாகத் திட்டக்குழு இருந்து வந்தது. பல்வேறு மாநிலங்களின் வளர்ச்சிக்கானத் தேவைகள் குறித்து திட்டக்குழு மிகவும் கவனத்துடன் இருந்தது. ஒன்றிய, மாநில மற்றும் ஒன்றிய பிரதேச அரசாங்கங்கள் இடையே கலந்தாலோசனை செய்வதற்கான ஒரு ஊர்தியாக மாநிலங்களுக்கு இடையேயான குழு, தேசிய மேம்பாட்டு குழு உள்ளிட்ட பல அமைப்புகள் செயல்பட்டு வந்துள்ளன. ஒன்றிய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான கூட்டுறவு உணர்வைப் பராமரிக்கும் வண்ணம், கலந்தாலோசனைகள் ஊடாக ஜனநாயக முறையில் எண்ணற்ற பிரச்சனைகளைச்  சமாளிப்பதில் இந்த அமைப்புகள் முக்கிய பங்காற்றியுள்ளன.

கேசவானந்த் பாரதி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், கூட்டாட்சி முறையானது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு  அடிப்படையான அம்சம் என்று அங்கீகரித்தது. ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் மேம்பட, கூட்டாட்சி முறையின் சாரத்தை மேலும் உயர்த்திப் பிடித்திட சர்க்காரியா மற்றும் பூஞ்ச் கமிஷன் பல வழிமுறைகளைப் பரிந்துரைத்துள்ளன.

அரசின் பல்வேறு அங்கங்களுக்கு இடையே சமச்சீரான அதிகாரப் பகிர்வை வகுத்தளிக்கும் விதிமுறைகளை உறுதிப்படுத்துவதில் மேற்சொன்ன அமைப்புகளும், நடைமுறைகளும் வரலாற்று ரீதியிலான முக்கிய பங்காற்றியுள்ளன. அவ்வாறு உருவமைக்கப்பட்ட விதிமுறைகள் மிகவும் எளிமையானவை: அதிகாரவரம்புகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது, கருத்தொற்றுமை ஊடாக ஆட்சி நடத்துவது, பன்மைத்துவத்தை உரிய முறையில் உணர்ந்து பரஸ்பரம் மதித்துப் போற்றுவது.

அகில இந்தியப் பணிகள், ஆளுநர் பதவி, குடியரசுத் தலைவர் ஆட்சி, அவசரகால நெருக்கடி நிலை உள்ளிட்ட பல அம்சங்களை முன்னிறுத்தி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூட்டாட்சிக்கு எதிரான ஒற்றையாட்சியை நோக்கி இருப்பதாக சில அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நமது அரசியல் நிர்ணய சபையானது சட்டத்துறை நிபுணர்கள், ஜனநாயகத்தின் உயரிய இலட்சியங்களால் உந்தப்பட்ட ஆளுமைகளால் நிறைந்திருந்தது. ஆனால், அவர்கள் வரலாற்று வெற்றிடத்தில் இருந்து இயங்கவில்லை என்பதை நாம் உணர வேண்டும். வெகுமக்கள் மத்தியில் ஜனநாயக நடைமுறை குறித்த மிகக் குறைந்த அனுபவத்தை மட்டுமே கொண்ட ஒரு புதிய சுதந்திர நாடாக இந்திய இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அரசியலமைப்புச் சட்ட ரீதியிலான நெறிமுறைகளைச் செழுமைப்படுத்த வேண்டியதை அழுத்தமாக வலியுறுத்தும் வண்ணம், டாக்டர் அம்பேத்கர் சூழலைச் சுருக்கமாக எடுத்துரைத்தார்: “இந்தியாவில் ஜனநாயகம் என்பது, அடிப்படையில் ஜனநாயக விரோதமான தன்மை கொண்ட இந்திய நாட்டின் மீதான ஒரு மேல் பூச்சு மட்டும் தான்.”  மேலும், இரண்டாம் உலகப் போருக்குப் பின் மற்றும் பனிப்போர் தொடங்கிய காலகட்டத்தின் போது இந்தியா அதன் சுதந்திரத்தை அடைந்தது.

மேற்கத்திய ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம் மற்றும் பிராந்திய அளவில் எதிர் நிலையில் செயல்படும் சக்திகள், அவற்றின் பகையுணர்வு ஆகியவை இந்திய ஜனநாயக வளர்ச்சிப் போக்கைச் சீர்குலைத்திடும் அச்சுறுத்தல்களாகத் தொடர்ந்தன. எனவே, நமது அரசியல் அமைப்புச் சட்ட முன்னோடிகள், நீண்ட விவாதங்கள் மற்றும் எச்சரிக்கைகளுக்குப் பிறகு, அவசரகால அம்சங்கள் ஒருபோதும் பயன்படுத்தப்படாது என்ற உறுதியான எதிர்பார்ப்புடன்தான், அந்த அம்சங்களை அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்தனர்.

அவசரகால நெருக்கடி நிலை அம்சங்கள் குறித்த அரசியலமைப்புச் சட்டத்தின் 352 முதல் 360 வரையிலான சரத்துகள் மீதான அரசியல் நிர்ணய சபை விவாதத்தின் போது, ஜனநாயகத்தின் மீது பற்றுறுதி கொண்ட பல உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு பதில் அளித்துப் பேசிய டாக்டர் அம்பேத்கர், “அந்தச் சரத்துகள் ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்படாது என்ற உணர்வையே நானும் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு கூட்டமைப்பு முறையாக இயங்கும் வண்ணம் தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது” என்று அரசியலமைப்புச் சட்டத்தின் தன்மையைப் பறைசாற்றுகிறார்.

நமது அரசியலமைப்புச் சட்டம் கூட்டாட்சி முறை கொண்ட ஒரு அரசியலமைப்புச் சட்டம் என்று டாக்டர் அம்பேத்கர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, நமது காலத்தில் அவ்வாறு இல்லை என்பதோடு, கூட்டாட்சி முறை மற்றும் அமைப்புகளின் மீது மோசமான தாக்குதல்கள் நடத்தப்படுவதை இன்று நாம் பார்த்து வருகிறோம்.

மோடி அரசாங்கத்தின் தொடக்ககால நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக திட்டக்குழு கலைக்கப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளில், மோடி தலைமையில் ஒருமுறை மட்டுமே மாநிலங்களுக்கு இடையேயான குழு கூடியது. அவரது ஆட்சிக்காலத்தில் தேசிய மேம்பாட்டுக் குழு இதுவரையில் கூட்டப்படவில்லை. 15வது நிதி ஆணையத்தின் பதவிக் காலம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.பல மாநிலங்கள் நிதிப் பகிர்வு குறித்து கவலை தெரிவித்துள்ளன. ஜிஎஸ்டி மூலமாக மாநிலங்களின் நிதி ஆதாரம் மற்றும் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, தேசத்தின் மறைமுக வரிவிதிப்பு முறை ஒற்றைத்தன்மை கொண்டதாக சீர்குலைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் கலந்து ஆலோசிக்காமல் அரசியல் ரீதியிலான பல முக்கியமான முடிவுகளை மோடி அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. சரத்து -370, அம்மாநில சட்டமன்றத்துடன் ஆலோசிக்கப்படாமல் திடீரென்று நீக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலில் 14வது இடத்தில் ‘விவசாயம்‘ குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், மத்திய அரசாங்கம் அதன் அதிகார வரம்பை மிகத் தெளிவாக மீறி, சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை இயற்றி, அவற்றை மாநிலங்கள் மீது திணித்தது.

அது போலவே, மாதிரி ஏ.பி.எம்.சி சட்டமும்(Model APMC Act) மாநிலங்கள் மீது திணிக்கப்பட்டது. பாரபட்சமான நீட் தேர்வு முறையால் தமிழ்நாட்டில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். மத்திய அரசுத் தேர்வுகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள, பல்வேறு பாடத்திட்டத்தில் பயின்ற, பிற மொழி பேசும் மக்களுக்கு சாதகமாக இருப்பதில்லை. புதிய கல்விக் கொள்கையும் நமது அரசியல் அமைப்பின் கூட்டாட்சி முறையில் ஆக்கிரமிப்பு செய்வதாக உள்ளது.

அஸ்ஸாம், மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைக் கலந்து ஆலோசிக்காமல் அந்த மாநிலங்களில் எல்லைப் பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு விரிவுபடுத்தப்பட்டது. ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், மாநில சட்டமன்றங்கள் மற்றும் நிர்வாகத்துறைகளின் அதிகாரத்தில் தலையிடுவதால் அண்மைக்காலங்களில் அத்தகைய அரசியலமைப்பு சட்டப் பொறுப்புகள் கூட பலமுறை கண்காணிப்புக்கு உள்ளாயின. மேலும் சில மாநில ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்டப்படியான முதன்மைத் தலைவர்களாக தங்கள் பணிகளை மேற்கொள்ளாமல், ஒன்றிய அரசாங்கத்தின் நீள்கரங்களாக இருந்து வருகிறார்கள் என்று  குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளார்கள்.
பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் ஒன்றிய அரசாங்கத்திற்கு இணக்கமான புதிய அரசாங்கங்களை நிறுவிட, ஆளுநர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது செல்வாக்கு செலுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைச் சீர்குலைகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

அண்மையில், கேரளம், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறுவதை ஒன்றிய அரசு மறுத்துவிட்டதை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

நமது தேசத்தின் பன்மைத்துவத்திற்கும், அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களுக்கும் கிஞ்சித்தும் மதிப்பளிக்காது அவமதிக்கும் ஒரு சித்தாந்தத்தில் இருந்துதான் இத்தகைய நிகழ்வுப் போக்குகள் தோன்றுகின்றன. இத்தகைய போக்குகள் அனைத்தும் நமது நாட்டை ஒற்றைத்தன்மை கருத்தியலுக்குள் பொருத்திப் பார்க்கும் சிந்தனைப் போக்கில் வேரூன்றி உள்ளன. அத்தகைய கருத்தியல்தான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.கவின் முத்திரை ஆகும்.

இந்தி-இந்து-இந்துஸ்தான் என்ற கருத்தும், ஒற்றைத்தன்மை மீது அவர்கள் கொண்டுள்ள நாட்டமும், நமது தேசத்தின் பன்மைத்துவம் வழங்கி வரும் நற்பலன்களைக்  கண்டுணர முடியாத குருடர்களாக அவர்களைத் தடம் புரளச் செய்துவிட்டது. அதற்கு மாறாக, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு நுட்பமான பரிமாணத்தையும் கட்டுப்படுத்தும் வகையில், வாழ்க்கை இணையர் முதல் ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது வரை, மதம், மொழி, சாதி மற்றும் பாலினம் என்று அனைத்து தளங்களிலும் தங்களின் குறுகிய சிந்தனையைத் திணிக்கவே முயலுகிறார்கள்.

பன்மைத்துவத்தைப் பாழாக்கும் இந்தச் சித்தாந்தம் நமது குடியரசு, சமுதாயம் மற்றும் வாழ்க்கை முறைகள் மீது  அபாயகரமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.
‘ஒரு நாடு, ஒரு வரி’ என்று தொடங்கிய ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.கவின் போர் முழக்கம் தற்போது ‘ஒரு நாடு, ஒரு தேர்தல்’ என்றாகிவிட்டது. ஒற்றைத்தன்மையின் மீது அவர்கள் கொண்டுள்ள நாட்டத்தைப் பார்க்கும் போது, அந்த முழக்கம் எந்நேரத்திலும் ‘ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம்‘ என்ற அபாய கட்டத்தை அடையக்கூடும். இந்தப் போக்கு, முற்போக்கு இலட்சியங்களான மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை கிள்ளி எறிந்து விடும்; நமது தேசத்தை மீண்டும் ஜனநாயகத்துக்கு எதிரானதாக மாற்றிவிடும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 1, “இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றியம் ஆகும்.” என்று பிரகடனப்படுத்துகிறது. இந்தப் பின்னணியில், மாநிலங்கள் உள்ளிட்ட அனைத்து அங்கங்களுக்கும் அதிகாரப் பகிர்வு என்பது அவசியமாகிறது.

நமது அரசியலமைப்பின் கூட்டாட்சி முறையை உணர்வுப் போதத்துடன் அங்கீகரித்து, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கனவு காணும் ஒற்றைப்பரிமாண அதிகாரப் பாய்ச்சலுக்கு எதிராகப் போராடுவது தான் நமது தேசத்தின் பண்பு, அதன் அனைத்து அங்கங்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்ட உத்தரவாதங்களைப் பாதுகாத்திட அவசியமாகும்.

ஒன்றிய அரசின் ஆக்கிரமிப்புத் தன்மைக்கு எதிராக அனைத்து மட்டங்களிலும் ஒரு போராட்டம் நடைபெற வேண்டும். வகுப்புவாத-பாசிச சக்திகளை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவதாக நமது போராட்டம் அமைந்திட வேண்டும்.

அரசாங்கத்தை மக்களுடைய, மக்களுக்கான மற்றும் மக்களால் நிர்வகிக்கப்படும் அரசாங்கமாக உருவாக்கிட நாம் பாடுபட வேண்டும். நமது குடியரசை மீட்பதற்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்துமாறு சமகால வரலாறு குடிமக்களை அறைகூவி அழைக்கிறது.

தமிழில்: – அருண் அசோகன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button