இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன நாள் நிகழ்வு
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பாசிச வலதுசாரி சக்திகளை முறியடித்திட, தேசத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் டி. ராஜா அறைகூவல் விடுத்துள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 98 வது ஸ்தாபன நாள் நிகழ்வாக டிசம்பர் 26 அன்று கட்சியின் தலைமையகமான அஜாய் பவனில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்த பின்னர், அங்கு திரளாகக் கூடியிருந்த தோழர்களிடையே அவர் உரையாற்றினார்.
டிசம்பர் 26 – கொண்டாட்டங்களின் நாள் என்று குறிப்பிட்ட அவர், சுதந்திரப் போராட்டத்தில் நமது கட்சியும், அதன் தலைவர்களும் புரிந்த மாபெரும் பங்களிப்பை நினைவுகூர்ந்து பேசினார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் இப்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்கள். அவர்கள் ஜனநாயகக் கட்டமைப்பைத் தூக்கியெறியவும், அரசியலமைப்பைத் தகர்த்திடவும், நமது தேசத்தை இந்து தேசமாக மாற்றிடவும் முயலுகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க வினர் தங்களது மோசமான சூழ்ச்சிகளை நிறைவேற்றிட நமது கட்சித் தோழர்கள் அனுமதிக்கக் கூடாது என்று டி. ராஜா வலியுறுத்தினார்.
ஸ்தாபன நாள் நிகழ்வில், கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர் பாலச்சந்திர காங்கோ, தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆனி ராஜா, பி. சந்தோஷ் குமார் MP, தேசியக் குழு உறுப்பினர்கள் சுகுமார் தாம்லே, டாக்டர் அ அ கான், கிருஷ்ண ஜா, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.