இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைமையகத்தில் ரஷ்ய புரட்சி தின கொண்டாட்டம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைமையகமான அஜாய் பவனில் 105வது அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி தினம் கொண்டாடப்பட்டது.
கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவரான தோழர் பல்லப் சென் குப்தா இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
தோழர்களின் வீரமார்ந்த முழக்கங்களுக்கிடையில், கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவரான தோழர் அமர்ஜீத் கவுர் கட்சிக் கொடியை ஏற்றினார். கட்சி அலுவலகத்தில் உள்ள மாமேதை தோழர் லெனின் சிலைக்கு தோழர்கள் அமர்ஜீத் கவுர் மற்றும் பல்லப் சென் குப்தா மாலை அணிவித்தனர்.
பின்னர், அங்கு கூடியிருந்த தோழர்கள் மத்தியில் தோழர் அமர்ஜீத் கவுர் பேசியது பின்வருமாறு:
1917 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற்ற மாபெரும் அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி உலகின் முதல் சோசலிஸ்ட் அரசு அமைந்திட வித்திட்டது. அனைத்துவித சுரண்டல்களில் இருந்தும் தங்களை விடுவித்துக் கொள்ள, உலகமெங்கும் போராடிக் கொண்டிருக்கும் சக்திகளுக்கு வழிகாட்டும் ஒளியாக மாபெரும் அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி திகழ்ந்து வருகிறது.
மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு முடிவு கட்ட, உழைக்கும் வர்க்கம் போராட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த காலம் அது. உலகம் முழுவதிலும் இருந்த புரட்சிகர அமைப்புகளைப் பலப்படுத்துவதற்காக மார்க்சிய கொள்கையைப் பரப்புவதில் சோவியத் ரஷ்யா உதவி புரிந்தது.
உலகம் முழுவதிலும் நடைபெற்ற விடுதலை இயக்கங்களுக்கு லெனின் தலைமையிலான புரட்சிகர அரசு ஆதரவளித்தது. நமது தேசத்தின் விடுதலைப் போராட்டமும் மாமேதை லெனினுடைய முழு ஆதரவைப் பெற்றது.
உலகம் ஏகாதிபத்திய நாடுகளின் போர் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் இந்தக் கால கட்டத்தில், உலக அமைதிக்கான லெனினுடைய பிரகடனம் சிறப்புடன் நினைவுகூரத்தக்கதாகும்.
தோழர்களே, நமது கட்சியின் 24 வது அகில இந்திய மாநாட்டில் தீர்மானித்துள்ளபடி, நமது தேசத்தைப் பாசிசத்தை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கும் மோடி அரசாங்கத்தை 2024 ல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.
இவ்வாறு தோழர் அமர்ஜீத் கவுர் உரையாற்றினார்.