இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
நடப்பாண்டு 2021 இன்றுடன் விடை கொடுத்து 2022ஆம் ஆண்டை நம்பிக்கையோடு வரவேற்கும் தருணத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
இரண்டாண்டுகளாக தொடர்ந்து நீடிக்கும் கொரோனா நோய்த் தொற்றுப்பரவல் ஒமைக்கரான் வடிவத்தில் உருமாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மறுவாழ்வு அமையாமல் துயர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வரும் 2022ஆம் ஆண்டு பரவி வரும் புதுப்புது நோய்களை ஆரம்ப நிலையிலேயே தடுக்கும் மருந்துகளையும், சிகிச்சை முறைகளையும் கண்டறிய வழிவகுக்கட்டும்.
கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கையை கடைப்பிடித்துவரும் பாஜக ஒன்றிய அரசு நிறைவேற்றிய விவசாய நிலங்களை பெரும் நிறுவனங்களுக்கு கைமாற்றிவிடும் விவசாயிகள் விரோத, வேளாண் வணிக சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்று விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக நடத்தியப் போராட்டத்தில் மகத்தான வெற்றி கண்டு வரலாறு படைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சட்ட மன்றத் தேர்தலில் திமுக தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் தொடர்வது, வங்கத்தில் பாஜக படுதோல்வி கண்டது என மகிழ்ச்சி அளிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
ஜனநாயக உரிமைகள் மீட்கும் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன.அடித்தட்டு மக்களின் மருத்துவக் கல்விக் கனவை அடியோடு பறிக்கும் ‘நீட்’ தேர்வு முறைக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டம் தொடர்கிறது. அதில் வெற்றிபெற உறுதியேற்போம்.
அண்மையில் வெளியான சர்வதேச அமைப்பின் அறக்கை ஒன்று – இந்திய மக்களின் வாழ்க்கை நிலையில் நிலவும் சமனற்ற நிலை எவரஸ்ட் சிகரம்போல் ஒரு சில பேர் செல்வங்கள் குவிப்பதும், கடல் பரப்புபோல் மக்கள் துயரக் கடலில் வீழ்வதுமான மேடு, பள்ளங்கள் உருவாகியிருக்கின்றன என்று கூறுகிறது. இது எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறும் ‘‘எரிமலை’’ மீது நாடு அமர்ந்திருக்கும் அபாயத்தை உணர்த்தியுள்ளது.
இந்தச் சூழலில் வரும் 2022ஆம் ஆண்டு மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் மேலும் வலிமை பெற்று நாட்டின் அதிகாரத்தில் நீடிக்கும் வகுப்புவாத மத வெறி சக்திகளையும், ஜாதி ஆதிக்க வெறித்தனத்தையும் முறியடித்த நீடித்த அமைதிக்கு வழிகாணும் என்ற நம்பிக்கையோடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறது.