இந்தியா

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு: சீனா, வியட்நாம் மற்றும் கியூப கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாழ்த்து செய்தி.

கியூபா, வியட்நாம், ரஷ்யா, போர்ச்சுகல், தென் ஆப்பிரிக்கா, கிரேக்கம், இலங்கை, பங்களாதேஷ், பாலஸ்தீனம் உட்பட 16 நாடுகளில் இருந்து 17 கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டில் வாழ்த்துரை வழங்கினர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்த்து செய்தி

அன்பார்ந்த தோழர்களே,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது தேசிய மாநாடு அக்டோபர் 14 முதல் 18 வரை நடைபெறுவதை அறிந்து உவகை அடைகிறோம். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசிய துறையின் சார்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியாவில், ஒரு முக்கியமான அரசியல் சக்தியாக, இந்தியாவின் தேசிய சூழலுக்கு உகந்த ஒரு சோஷலிச பாதையை நிர்மாணிப்பதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி பூண்டுள்ளது; இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளது.

இந்த மாநாடு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நிச்சயம் ஒரு புதிய உந்துவிசையை வழங்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது தேசிய மாநாடு இன்னும் இரு தினங்களில் (16.10.2022) கூட உள்ளது. அனைத்து வகையிலும், ஒரு நவீன சோஷலிச நாட்டைக் கட்டமைக்கும் புதியதொரு பயணத்தைச் சீனா மேற்கொண்டுள்ள இந்த முக்கியமான நேரத்தில் நடைபெறும் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். நமது இரு கட்சிகளின் மாநாடுகளை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடனான நட்புறவைப் பலப்படுத்தவும், நடைமுறை அனுபவங்களில் இருந்து பரஸ்பரம் படிப்பினைகளைப் பெறுவதைத் தீவிரப்படுத்தவும், நமது இரு நாடுகள் மற்றும் கட்சிகளைப் புதுப்பிக்கவும், மேம்படுத்துவதற்குமான ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ளச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆயத்தமாக இருக்கிறது.

இந்த நூற்றாண்டில் நாம் கண்டிராத பெருத்தொற்று மற்றும் மாபெரும் மாற்றங்கள் ஆகிய இரண்டின் ஒன்றுபட்ட தாக்கத்தின் போக்கில் இன்று உலகம் இயங்கி வருகிறது. மாற்றம் மற்றும் கொந்தளிப்பான காலகட்டத்தில் உலகம் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான கூட்டு முயற்சி மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பு இரு நாடுகளின் பொதுவான நலன்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் நலனையும் பாதுகாக்கும். இத்தகையதொரு புதிய சூழலில், இந்திய-சீன நட்புறவை மேலும் சீராக மேம்படுத்த, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், இந்தியாவில் உள்ள இதர பெரும் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து பணியாற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு முழு வெற்றியடைய வாழ்த்துகள்!

சர்வதேசிய துறை – மத்திய குழு – சீனக் கம்யூனிஸ்ட் கட்சி

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்த்துச் செய்தி

அன்பார்ந்த தோழர்களே,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாட்டை முன்னிட்டு, வியட்நாம் மக்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் சார்பாக உங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எண்ணற்ற சவால்கள் இருப்பினும், மார்க்சிய-லெனினியத்தை உறுதியுடன் பின்பற்றுவதிலும், விவசாயிகள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் நலன்கள், நியாயப்படியான அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதிலும், இந்தியாவில் இடதுசாரி, ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளை முனைப்புடன் பலப்படுத்துவதிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சீரிய முறையில் தொடர்ந்து இயங்கி வருவது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்திய மற்றும் உலக அரசியல் அரங்கில் உங்கள் கட்சியின் நிலை மற்றும் பாத்திரத்தை நீங்கள் உயர்த்துவீர்கள் என்பதோடு 24 வது மாநாட்டு தீர்மானங்களின் நோக்கங்களை வென்றெடுப்பதுடன், மேலும் பல மாபெரும் வெற்றிகளைப் பெறுவீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

நமது இரு நாடுகள் மற்றும் கட்சிகளுக்கு இடையிலான நேர்த்தியான ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமை மேலும் முன்னெடுக்கப்பட்டு, மேம்படுத்தப்பட வேண்டும்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநாடு வெல்லட்டும்!

மத்திய குழு – வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி

கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்த்து செய்தி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்பார்ந்த தோழர்களே!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநாடு நடைபெறும் இந்தத் தருணத்தில் கியூப கம்யூனிஸ்ட் கட்சி அதன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

தற்போது உலகம் எதிர்கொண்டு வரும் சிக்கலான சூழலுக்கு இடையில், அமைதி மற்றும் நீதி நிறைந்த ஒரு உலகத்திற்கான போராட்டங்களில் இந்தியக் கம்யூனிஸ்டுகள் பூண்டிருக்கும் உறுதிப்பாட்டை இந்த மாநாடு எடுத்துக் கூறுகிறது .

நமது இரு நாடுகளின் கட்சிகள் மற்றும் மக்களுக்கு இடையிலான சகோதரத்துவத்தைத் தொடர்ந்து பலப்படுத்துவதற்கான உங்களின் விருப்பத்தை நாங்கள் உறுதிப்படுத்தும் அதே சமயத்தில், மாநாட்டுப் பணியில் வெற்றி பெற உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கியூபாவிற்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள வணிக, பொருளாதார மற்றும் நிதி தடைகளை எதிர்த்து கியூபா நடத்தி வரும் போராட்டங்கள் மற்றும் கியூப புரட்சிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்து வரும் நிலையான ஆதரவுக்கு எமது நன்றியை நாங்கள் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மத்திய குழு – கியூப கம்யூனிஸ்ட் கட்சி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button