இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்படைப் பேரணி: விஜயவாடா சிவந்தது!
இந்தியத் திருநாட்டை சூழ்ந்து வரும் காவிப் பேரபாயத்தை எதிர்கொண்டு முறியடிக்க, கார்ப்பரேட் முதலாளித்துவ சதித் திட்டங்களை வீழ்த்தி, மக்கள் நலன் காக்க, சமத்துவ, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசைப் பாதுகாக்க, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு (அக்டோபர் 14-18) ஆந்திர மாநிலம் விஜயவாடா மாநகரில் நடைபெற்று வருகிறது.
இம்மாநாட்டின் தொடக்கமாக அக்டோபர் 14 அன்று விஜயவாடா மாநகரில் நடைபெற்ற செம்படைப் பேரணியில், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான தோழர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையில் தோழர்கள் பங்கேற்றனர்.
எழுச்சிமிகு செம்படைப் பேரணியால் விஜயவாடா மாநகரம் சிவந்தது.
வடகிழக்கு பருவமழை காலத்தின் மாலை நேர மழையைக் கூட பொருட்படுத்தாமல் சங்கமித்த செம்படை வீரர்களின் அணிவகுப்பு, விஜயவாடா மாநகரைச் செங்கடலின் குறியீடாகத் தோற்றமளிக்கச் செய்தது. மீசல ராஜா ராவ் பாலம் அருகில் இருந்து தொடங்கிய பேரணி மாலை 5 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் எம். பசவ புன்னையா ஸ்டேடியம் வந்தடைந்தது. மாநாட்டு பொதுக்கூட்டத்தைக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி இராஜா தொடங்கி வைத்தார். பல்லாயிரக்கணக்கான தோழர்கள் திரண்டிருந்த இந்தப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தோழர்கள் உரையாற்றினார்கள்.
15.10.2022 அன்று பிரதிநிதிகள் மாநாடு தொடங்கியது. மாநாட்டு அரங்கத்தின் அருகில் காலை 10.30 மணியளவில், விடுதலைப் போராட்ட வீரர் எடுகுரி கிருஷ்ண மூர்த்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
பிரதிநிதிகள் அமர்வை பொதுச் செயலாளர் டி. இராஜா தொடங்கி வைத்து உரையாற்றினார். இதில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவர் ஜி.தேவராஜன் ஆகியோர் உரையாற்றினார்.
இந்த அமர்வில், கட்சியின் பொதுச் செயலாளர் டி. இராஜா அரசியல் வரைவுத் தீர்மானம் மற்றும் அரசியல் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார். தோழர் அதுல் குமார் அஞ்சான் ஸ்தாபன அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
அடுத்து நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான, ஒரு பரந்துபட்ட இடதுசாரி, மதச்சார்பற்ற, ஜனநாயக மாற்றைக் கட்டியெழுப்புவதைப் பற்றிய விவாதம் இந்த அமர்வில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் செல்வாக்கைப் பலப்படுத்துவது குறித்து ஸ்தாபன அறிக்கையில் விரிவாக ஆய்வு செய்யப்படுகிறது.
✊✊✊