இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கே கஜேந்திரன் உள்ளிட்ட 66 பேரை உடனடியாக விடுதலை செய்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் இருந்து:
26.09.2022 இரவு 11 மணிக்கு, 15 பெண்கள் உட்பட 66 பேரை, காவல்துறை கைது செய்துள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கஜேந்திரனும் கைது செய்யப்பட்டுள்ளார். பிணையில் வர இயலாத வகையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மாண்புமிகு அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கூறும் ஆலோசனைகள் பரிந்துரைகள் எதையும் கேட்க மறுத்து, அடாவடியாக நடந்து கொள்ளும் பிரான்ஸ் கார்ப்பரேட் கம்பெனிக்கு அப்பட்டமாக, ஆதரவாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை செயல்படுகிறது.
விவசாய நிலத்தையும் வேலையையும் இழந்து தவிக்கிற குடும்பங்களுக்கு, நிவாரணம் கிடைக்க உதவுவதற்குப் பதிலாக, கடும் குற்றங்களைச் செய்தது போல கைது செய்து சிறையில் அடைப்பது மனிதாபிமானமற்ற கொடூர செயலாகும்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இதனை வன்மையாகக் கண்டிக்கிறது.