இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜாவுடன் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் சந்திப்பு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜாவை புது டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகமான அஜாய் பவனில் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் 06.09.2022 அன்று சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தார். அது குறித்து கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:
2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.க வை முறியடித்திட, அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளை அணிதிரட்டுவதில் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு அதன் முழு ஆதரவைத் தெரிவிக்கிறது. பா.ஜ.க உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடம்பெற்றுள்ள மகா கூட்டணியில் அவர் இணைந்துள்ளார்.
இக்கூட்டணியில் இணைந்த பிறகு, முதல் முறையாக புது டெல்லிக்கு வந்துள்ள அவர், பல்வேறு தேசிய கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான அஜாய் பவனில் பொதுச் செயலாளர் டி. ராஜாவைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இருவரும், தேசத்தின் எதிர்காலம் மற்றும் நலன் கருதி பா.ஜ.கவைத் தேர்தலில் முறியடிக்க வேண்டியதே தற்போதைய அரசியல் தேவை என்று கூறினர். 2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பா.ஜ.க வை முறியடித்திட, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு டி. ராஜா தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.