இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.அழகுமுத்து பாண்டியன் மறைவு – செவ்வணக்கம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர், வழக்கறிஞர் எஸ்.அழகுமுத்து பாண்டியன் (72) இன்று (04.04.2022) பிற்பகல் 03.50 மணிக்கு மதுரை, மருத்துவமனையில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் உள்ள சங்கரலிங்கபுரத்தில் வசித்து வந்த சண்முக தேவர்-சீதையம்மாள் தம்பதியருக்கு 1949 அக்டோபர் 14 ஆம் தேதி ஐந்தாவது குழந்தையாக, ஐந்து சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகளுடன் பிறந்தவர் எஸ்.அழகுமுத்து பாண்டியன். சண்முக தேவர் கோவில்பட்டியில் இயங்கி வந்த நூற்பாலை தொழிலாளியாக பணியாற்றியவர். தொழிற்சங்க இயக்கத்தில் முனைப்பாக செயல்பட்டு வந்தவர்.
எஸ். அழகுமுத்துபாண்டியன் குடும்ப சூழலில் இடதுசாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பள்ளியில் பயின்று வந்த காலத்தில் மாணவர் பெருமன்ற அமைப்பில் இணைந்து செயல்படத் தொடங்கியவர். இளைஞர் பெருமன்றத்திலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.சட்டக் கல்வி பயின்று வழக்கறிஞராக பணியாற்றியவர். கூட்டுறவு அமைப்பில் பணியில் சேர்ந்து பணிபுரிந்த காலத்தில், பணியாளர்களை அணிதிரட்டி. மாநில அளவில் சம்மேளனம் அமைப்பதில் முக்கியப் பங்காற்றியவர்.ஏஐடியூசி தொழிற்சங்க அமைப்பில் செயல்பட்டு, தொடர்ந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பொறுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறார் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் பொறுப்பிலும் செயல்பட்டு வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூச்சிரைப்பு காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ். அழகுமுத்து பாண்டியன் வாழ்விணையர் காசிபாரதி ஒய்வு பெற்ற ஆசிரியர். இவர் மூத்த தலைவர்இரா.நல்லகண்ணுவின் மூத்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு திருமணமான கண்ணம்மா என்ற மகள் இருக்கிறார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை வழியில் உறுதியாக பயணித்த நல்ல செயல்வீரரை கட்சி இழந்து நிற்கிறது. தோழர் எஸ்.அழகுமுத்து பாண்டின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை பிரிந்து வாடும் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு உள்ளிட்ட குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நாளை (05.04.2022) மாலை 4 மணிக்கு 15, பி, பசுவந்தனை சாலை, கோவில்பட்டி என்ற முகவரியில் உள்ள பாரதி – கண்ணம்மா இல்லத்தில் இருந்து தொடங்கும்.தோழர் எஸ்.அழகுமுத்து பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் முறையில் தமிழ்நாடு முழுவதும் கட்சிக் கொடிகள் அரைக் கம்பத்திற்கு தாழ்த்தி அஞ்சலி செலுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது.