இதுவல்ல அம்பேத்கரின் இந்தியா!
-டி ராஜா
G-20 நாடுகளின் அமைப்புக்கு இந்தியா, சுழற்சி முறையில், தலைமை ஏற்றுள்ளது. இந்த நிகழ்வை, இந்தியா மீதான மதிப்பு மற்றும் அதன் பொறுப்புணர்வு என்று கூறாமல், பிரதமர் நரேந்திர மோடியின் சாதனை என்று ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க அணி முன்னிறுத்துகிறது. ‘ஒரே பூமி – ஒரே குடும்பம் – ஒரே வருங்காலம்’ என்ற விளம்பரம் நாடெங்கிலும் பரவலாக இருக்கிறது. “G-20 அமைப்பிற்கான இந்தியாவின் செயல்திட்டம் தீர்மானகரமாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், இலக்கை அடையும் இலட்சிய நோக்குடையதாகவும், நடைமுறை சாத்தியமுடையதாகவும் இருக்கும். மனிதநேயத்தை மையமாகக் கொண்ட உலகமயம் எனும் ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி பெயரில் விளம்பரப்படுத்தப்படுகிறது.
சர்வதேச சமூகத்திற்கு இப்படி ஒரு மாபெரும் போதனை! ஆனால், இன்றைய இந்தியா எப்படி இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 2022 ஆம் ஆண்டில் உலக பசி குறியீட்டில் உலக நாடுகளின் வரிசையில் இந்தியா 107 வது இடத்திலும், பத்திரிக்கை சுதந்திர குறியீட்டில் 150 வது இடத்திலும், உலக மகிழ்ச்சி குறியீட்டில் 136 வது இடத்திலும், லஞ்ச ஊழல் குறியீட்டில் 85 வது இடத்திலும், உணவு பாதுகாப்பு குறியீட்டில் 71 வது இடத்திலும், சட்டத்தின் ஆட்சி குறியீட்டில் 77 வது இடத்திலும், ஜனநாயகத்திற்கான குறியீட்டில் 46 வது இடத்திலும் இருக்கிறது. இன்றைய அரசாங்கம் மூர்க்கத்தனமாக நடைமுறைப்படுத்திவரும் நவீன-தாராளமய பொருளாதார கொள்கைகள் தான் இந்தப் பேரழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது.
மோடி தலைமையிலான இன்றைய அரசாங்கம் அனைவரையும் உள்ளடக்கிய மனிதநேயமிகு செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால், அதற்கு மாறாக, ஒரு பிரிவினைவாத, பிற்போக்கான மற்றும் வகுப்புவாத செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. இன்றைய இந்தியா எவ்வாறு உள்ளது என்பதைச் சர்வதேச சமூகம் புரிந்துகொள்வதற்கு ஏற்றபடி நமது நாட்டில் உள்ள சமூக ரீதியாகப் புறக்கணிக்கப்படும் பிரிவினர் மற்றும் சிறுபான்மையினரின் நிலை நம் அனைவரின் முன் உள்ளது. இது குறித்த அம்பேத்கரின் முன்னுணர்வுடைய எச்சரிக்கைகள் நம் அனைவரின் முன் உள்ளது.
“சிறுபான்மைச் சமூகங்கள் ஒழிக்கப்படலாம். ஒருவேளை அவர்கள் ஒழிக்கப்படவில்லை என்றாலும், கொடுங்கோன்மைக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்படலாம். அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதும், பொதுவாழ்வில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு மற்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஆகியவை அவர்களுக்கு மறுக்கப்படுவதும் உறுதி ஆகும்.”
மோடி அரசாங்கம் பின்பற்றும் பொறுப்பற்ற பெரும்பான்மைவாதத்தின் காரணமாக அல்லலுறும் சிறுபான்மையினரின் துன்பத்தைப் பதிவு செய்வதற்காக, அரசியல் மற்றும் அரசியல் வளர்ச்சிப் போக்குகள் குறித்து எழுதக்கூடிய உணர்திறமுடைய விமர்சகர் ஒருவர் தான் இவ்வாறு எழுதியிருக்கக் கூடும் என்ற கருத்தை மேலே உள்ள வரிகள் உருவாக்குகின்றன. ஆனால், உண்மையில் இவ்வாறு எழுதியவர் வேறு யாருமில்லை…டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் ஆவார்! ‘மொழிவாரி மாநிலங்கள் குறித்த சிந்தனைகள்’ ( Thoughts on Linguistic States ) எனும் அவருடைய நூலில் பெரும்பான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் பற்றிய அத்தியாயம் ஒன்றில் அவர் இவ்வாறு எழுதியுள்ளார்.
அம்பேத்கரின் கூற்று மெய்யாகியுள்ளது என்பதை அவர்தம் நினைவு நாளான டிசம்பர் 6 -ல் நாம் வருத்தத்துடன் நினைவுகூர வேண்டியிருக்கிறது. வகுப்புவாதம் தோய்ந்த தேர்தல் நடைமுறையைக் கொண்டுள்ள அரசியல் உள்ளிட்ட அனைத்து தளங்களில் இருந்தும் சிறுபான்மையினர் விலக்கப்படுவர்; பாதுகாப்பற்றவர்களாக உணருவர் என்றும் அவர் எச்சரித்தார்.
அதிர்ச்சியளிக்கக்கூடிய முறையில், இந்தியாவில், வகுப்புவாதம் தோய்ந்த தேர்தல் நடைமுறையானது, அச்சுறுத்தக்கூடிய ஒரு எதார்த்தமாக உருவெடுத்துள்ளது. மத நம்பிக்கை, உணவு, உடை, காதல் மற்றும் தங்கள் விருப்பப்படியான திருமணம் ஆகியவற்றின் பெயரால், பா.ஜ.க தலைவர்கள் சிறுபான்மையினரைக் குறி வைக்கிறார்கள். இது பா.ஜ.கவிற்குச் சாதகமான தேர்தல் முடிவுகளுக்கான ஒரு தீர்மானிக்கும் காரணியாக உள்ளது. சிறுபான்மையினர் குறித்த அம்பேத்கரின் சிந்தனையில் முஸ்லீம்கள், கிறித்துவர்கள் மற்றும் இதர மதச் சிறுபான்மையினர் மட்டுமின்றி தலித்துகள் மற்றும் சமூகத்தின் இதர நலிவடைந்த பிரிவினரும் அடங்குவர்.
அவர் மறைந்து 66 ஆண்டுகளுக்குப் பின், சிறுபான்மையினரைக் குறிவைக்கும் அரசியல் நிலை காரணமாக உருவாகியுள்ள மோசமான சூழலை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. மக்கட்தொகையில் 12 முதல் 14 சதவிகிதம் வரை உள்ள முஸ்லீம்களை, விரிவான சமூக மற்றும் பொருளாதார ரீதியில் புறக்கணிக்க வேண்டும் என்று பா.ஜ.கவைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே!
சுதந்திர இந்தியாவில் சிறுபான்மையினர் சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் புறக்கணிக்கப்படுவதற்கான சாத்தியப்பாட்டை தொலைநோக்கு பார்வை கொண்ட அம்பேத்கரால் முன்பே கண்டுணர முடிந்தது. எனவே தான், 1945 ஆம் ஆண்டில் இந்திய ஐக்கிய மாகாணங்களுக்காக அவர் தயாரித்த அரசியலமைப்பு முன்வடிவில் சிறுபான்மையினர் புறக்கணிப்பு பிரச்சனையை அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் இடம்பெறச் செய்தார். அந்த அரசியலமைப்பு முன்வடிவில், சொல், செயல் என்று எந்த வடிவத்தில், எவ்வகையில் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்பட்டாலும், அவற்றைத் தடுக்கும்படியான தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும் என்றும், அத்தகைய குற்றங்களுக்கு எதிராகக் கடும் தண்டனைகளை அளிப்பதற்கான வழிவகைகளைக் கொண்ட சட்டங்களை இந்தியாவின் வருங்கால சட்டமன்றம் இயற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். சிறுபான்மையினரை மிகக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய இந்தப் புறக்கணிப்பு பிரச்சனையை உள்ளடக்கிய மனு ஒன்றை 1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் சமர்ப்பித்தார்.
அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதங்களும், அங்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களும் அந்தச் சபையின் சட்டமியற்றும் நோக்கத்தை ( Legislative Intent ) வடிவமைக்கின்றன. அந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தான் உச்ச நீதிமன்றமானது, சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்களை ஆராய்ந்து அறிந்து உறுதிப்படுத்துகிறது. அம்பேத்கரின் நினைவு நாளில், 75 வது இந்திய விடுதலைத் திருநாளைக் கொண்டாடும் இந்த 2022 ஆம் ஆண்டில், சிறுபான்மையினர் புறக்கணிப்பு பிரச்சனை குறித்த அம்பேத்கரின் கருத்துகளை நாம் மீண்டும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
சிறுபான்மையினர் பிரச்சனை குறித்து வெகுண்டெழுந்து முழங்கிய அம்பேத்கரைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளத் துடிக்கும் பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், சிறுபான்மையினரைப் புறக்கணிக்க வேண்டும் என்று பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் துணிச்சலாகக் கூச்சலிடும் போது, மவுனமாக இருப்பது ஏன்? உண்மையில், அம்பேத்கரின் இலட்சியம் மற்றும் அரசியல் நிர்ணய சபையின் சட்டமியற்றும் நோக்கம் ஆகியவற்றுடன் பிரதமர் இசைவு கொண்டவரில்லை என்பதையே அவரின் மவுனம் எடுத்துக்காட்டுகிறது.
அரசியலமைப்பு நெறிமுறைகளை அம்பேத்கர் உணர்வுப்பூர்வமாக உயர்த்திப் பிடித்தார். மதச்சார்பின்மை, பன்மைத்துவம், அனைவரையும் அரவணைத்துச் செல்வது ஆகிய அரசியலமைப்பின் மாண்புறு இலட்சியங்களை உயர்த்திப் பிடித்திட, ஒவ்வொரு குடிமகனும் அரசியலமைப்பு நெறிமுறைகளை உள்வாங்கி வளப்படுத்திக் கொள்ள வேண்டியது திட்டவட்டமான அவசியக் கடமை ஆகும் என்ற கருத்தை அவர் அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தியுள்ளார். ‘உங்கள் முன்னேற்றம் உங்கள் கரங்களில்’ என்று பிரதமர் வாய்ஜாலம் செய்து வருகிறார். ஆனால், நடைமுறையில் அவரும், அவரது கட்சியும் சிறுபான்மையினரைக் குறிவைத்து தாக்குகிறார்கள். அவரது கட்சிக்காரர்களும், கட்சியைச் சார்ந்தவர்களும் முஸ்லீம்களைப் புறக்கணிக்கவும், அழித்தொழிக்கவும் அறைகூவல் விடுக்கும் போது கள்ள மவுனம் சாதிக்கிறார்.
இது போன்ற மோசமான போக்குகளால், இந்தியாவின் பெருமை சர்வதேச அரங்கில் சீர்குலைந்து வருகிறது. பா.ஜ.க வின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் முகமது நபி குறித்து வெளியிட்ட இழிவான கருத்து காரணமாக, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக, வளைகூடா நாடுகளில் இந்திய பொருள்கள் புறக்கணிப்பு நடந்தது; இந்தியா மன்னிப்பு கோர வேண்டும் என்று அந்நாடுகள் மிகவும் அழுத்தமாக வலியுறுத்தின. இது போன்ற நிகழ்வுகள் அனைத்தும் இந்தியாவில் நிகழும் மனித உரிமை மீறல்களை எடுத்துக்காட்டுகின்றன.
இந்தியாவின் ஜனநாயக, மதச்சார்பற்ற மாண்புகள் சர்வதேச அளவில் மங்கி மறைந்து வருகிறது. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட எதேச்சதிகார நாடு என்றும் ஓரளவு சுதந்திரம் உள்ள நாடு என்றும் நமது நாடு வர்ணிக்கப்படுவது வேதனைக்குரியதாக இருக்கிறது. நமது நாட்டின் அரசுப் பொறுப்பில் உள்ளவர்களே அரசியலமைப்பு, அரசியலமைப்பின் நெறிமுறைகள் மற்றும் அரசியல் நிர்ணய சபையின் சட்டமியற்றும் நோக்கம் ஆகியவற்றைத் திட்டமிட்டு மதிப்பிழக்கச் செய்வதைக் கண்டு அம்பேத்கர் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கக் கூடும். அரசியலமைப்பின் நோக்கங்களை வென்றெடுக்க அரசியலமைப்பு ரீதியிலான வழிமுறைகளை ஏற்க வேண்டும் என்று அவர் அறைகூவல் விடுக்கிறார். வேறு வகையான எந்தவொரு வழிமுறையும் அராஜகத்திற்கான இலக்கணத்தையே இயற்றும் என்றும் அவர் எச்சரித்தார்.
முஸ்லீம்களை அழித்தொழிப்பது, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக அவர்களைப் புறக்கணிப்பது, அவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் கொடுமைகளுக்கான அறைகூவல்கள் ஆகியவை அராஜகப் போக்கிற்கே இட்டுச் செல்லும் என்பதோடு மட்டுமின்றி, எந்தவொரு அதிகார பலத்தாலும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நிரந்தரமான சமூக மற்றும் பொருளாதார பேரழிவை உண்டாக்கும். எனவே, அம்பேத்கர் எழுப்பிய அந்தப் பிரச்சனைகள் குறித்து இந்தியாவை ஆட்சி செய்பவர்கள் கவனமாகச் சிந்திக்க வேண்டும்; வரவிருக்கும் பேரிடரில் இருந்து இந்தியாவைப் பாதுகாக்க அரசியலமைப்பு ரீதியிலான வழிமுறையை ஏற்க வேண்டும்.
தமிழில் – அருண் அசோகன்