இங்கிலாந்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்!
அண்மைக் காலத்தில், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான செவிலியர்கள் இங்கிலாந்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராயல் காலேஜ் ஆப் நர்சிங் (Royal College of Nursing) தொழிற்சங்கத்தின் 106 ஆண்டு கால போராட்ட அனுபவத்தில் இந்த வேலைநிறுத்தப் போராட்டமே மிகப்பெரிய வேலைநிறுத்தப் போராட்டம் ஆகும்.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான மருத்துவமனை மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் வாகன ஓட்டுநர்களும் ஹார்ன் ஒலியெழுப்பி உற்சாகப்படுத்தினார்கள். ஆர்ப்பாட்டக் களத்தில் பொதுமக்களும் சாக்கலேட் உள்ளிட்ட இனிப்புகளை போராட்டக்காரர்களுக்கு வழங்கி ஆதரவு தெரிவித்தனர்.
இந்தப் போராட்டம் அடுத்த செவ்வாய்க்கிழமை அன்று மீண்டும் நடத்தப்படும் என்று RCN பொதுச் செயலாளர் பேட் குல்லேன் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: அதிகரிக்கும் பணவீக்கம், குறைவான ஊதியம், நோயுற்றவர்களின் பாதுகாப்பு மற்றும் பெருகி வரும் காலிப் பணியிடங்கள் ஆகிய பிரச்சனைகள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தவிர்க்க முடியாததாக்கி விடுகிறது. “நெருக்கடி தீவிரமானதால் தான், வேறு வழியின்றி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கிறது.” என்று RCN குழு தலைவர் டென்னிஸ் கெல்லி கூறினார்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது, ஆர்ப்பாட்டம் நடைபெற்ற ஓர் இடத்தில், அவ்வழியே சென்ற நான்கு போலீஸ் வாகனங்களில் இருந்த காவலர்களும் தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் சைரன் மற்றும் விளக்குகளை ஒளிர விட்டு, போராட்டக்காரர்களை நோக்கி கையசைத்துச் சென்றனர் என்று மார்னிங் ஸ்டார் இதழ் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இந்தச் சூழலில், தொழிற்சங்க நடவடிக்கைகளை ஒழித்துக்கட்ட கொண்டு வரப்படும் கடுமையான புதிய சட்டங்களைத் தான் ஆதரிப்பதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பேசிய அவர், சுகாதாரம் மற்றும் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட முக்கியமான துறைகளில் நடைபெறவுள்ள தொடர் வேலைநிறுத்தப் போராட்டங்கள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, முக்கிய தொழிற்துறைகளில் வேலைநிறுத்தத்தைத் தடுப்பதற்குத் தேவையான எந்த நடவடிக்கையையும் எடுக்க உள்ளதாகக் கூறினார்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ள அச்சுறுத்தல் கருத்து இங்கிலாந்து நாட்டு தொழிலாளி வர்க்கத்தைத் தடுத்து நிறுத்தும் வல்லமையற்றது என்றே தெரிகிறது. டிசம்பர் 21 மற்றும் 28 ஆகிய இரு நாட்களிலும் 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருங்கிணைந்த போராட்டங்களை நடத்தவுள்ளதாக தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. வரவிருக்கும் நாட்களில் இரயில், பேருந்து, அஞ்சல் மற்றும் கல்வித்துறையில் எண்ணற்ற போராட்டங்கள் நடைபெறவுள்ளன என்பது கவனிக்கத் தகுந்தது ஆகும்.