ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தி டிசம்பர் 29 ல் ஆளுநர் மாளிகை முற்றுகை! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கொண்ட கூட்டம் 14.11.2022 ஆம் தேதி சென்னையில் உள்ள மாநிலக் கட்சி அலுவலகத்தில் எம்.ஆறுமுகம் முன்னாள் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, மு.வீரபாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சுப்பராயன் எம்.பி., எம்.செல்வராசு எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் (தளி), க.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
ஆளுநரை திரும்பப் பெறு! டிசம்பர் 29 ல் ஆளுநர் மாளிகை முற்றுகை!
மோடியின் ஒன்றிய அரசு தான் நியமிக்கும் ஆளுநர்களைக் கொண்டு, எதிர்கட்சி மாநில அரசுகளுக்கு எதிராக ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உயிர் மூச்சு ஜனநாயகம் இங்கே ஒரு ஜனநாயக அரசை நிறுவுவதற்காகவே, ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக நமது முன்னோர்கள் ரத்தம் சிந்தி, அளப்பரிய தியாகம் செய்து விடுதலையை வென்றெடுத்தனர்.
இந்திய நாட்டுக்குத் தலைவராக குடியரசுத் தலைவரையும், மாநில அரசுக்கு தலைவராக ஆளுநரையும் நமது அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கித் தந்திருக்கிறது. ஆளுநர் என்பவர் களங்கமற்ற நேர்மையுடன், பாரபட்சம் இல்லாதவராகக் கடமை ஆற்ற வேண்டும். ஆளுநருக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் மீது விசுவாசமும் நம்பிக்கையும் இருந்தாக வேண்டும். அது இல்லாவிட்டால், அந்தப் பொறுப்பை வகிக்க அவர் பொருத்தமற்றவர் ஆவார்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் ஒரு மாநில அரசின் பெயரளவிலான தலைவராக இருப்பதால் மாநில அரசின் அனைத்து நடவடிக்கைகளும் அவரது பெயரால் எடுக்கப்படுகிறது. அவர் மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் அல்லர்; ஒன்றிய அரசால் நியமிக்கப்படுபவர் மட்டுமே. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசின் கருத்தியலையும், செயல்பாடுகளையும் ஆளுநர் எதிர்ப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது மட்டுமல்ல; ஜனநாயகத்திற்கு சாவு மணி அடிப்பதும் ஆகும்.
தமது பரந்த அனுபவத்தையும், ஆற்றலையும் ஒன்றிணைத்து நுணுக்கமாக அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய அறிஞர்கள், பிற்காலத்தில் ஒரு ஆளுநர், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக் கொள்கைகளை எதிர்ப்பார்; அது இயற்றிய சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் நிறைவேற்ற முடியாமல் தடுப்பார்; மதச்சார்பின்மைக்கு எதிராக நடப்பார் என்று கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவை மாநில மக்களின் நலன்களை காக்கும் வகையில் 20 முக்கியமான சட்டங்களை இயற்றியிருக்கிறது. இதில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் நிறைவேற்றப்பட்டுள்ள கூட்டுறவு சங்கங்களின் சட்டம், சாமானிய குடும்பங்களின் குழந்தைகளும் மருத்துவ படிப்பில் நுழைவதை உறுதிப்படுத்தும் வகையில் ‘நீட்’ விலக்குச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பல மாதங்களாக அந்தச் சட்டங்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்.
பல்வேறு மதங்கள் மொழிகள் சாதிகளைக் கொண்ட மக்கள் இணைந்து வாழும் தமிழ்நாடு ஒரு நல்லிணக்க அமைதி பூங்காவாகும். ஆனால், ஆளுநர் மதச்சார்பின்மை கோட்பாட்டில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை பொது நிகழ்வுகளில் பேசி சமூகப் பிரிவினைகளைத் தூண்டி வருகிறார். சமூகத்தை துண்டாடக் கூடிய, அபாயகரமான, மத வெறியூட்டும் விஷயங்களை தொடர்ந்து அவர் பரப்புகிறார். இந்த மாநில மக்களின் மனதில் வெறுப்பை விதைத்து வகுப்புவாத அமைதியின்மையை தூண்டும் வகையில், திட்டமிட்டதாக அவரது பேச்சுகள் அமைந்துள்ளன. அண்மையில் உலகத்தின் மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் ஒரு மதம் சார்ந்த நாடு தான் என்று பேசினார். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு நேர் விரோதமானதாகும்.
இந்தியா அதன் அரசியலமைப்புச் சாசனத்தையும் இதர சட்டங்களையும் சார்ந்துள்ளதே தவிர, எந்த மதத்தைச் சார்ந்தும் நிற்கவில்லை. பிறப்பால் உயர்வு தாழ்வு, தீண்டாமை, பெண் அடிமைத்தனத்தைப் பேசும் சனாதன தர்மத்தைப் போற்றுவது, தமிழ் இலக்கியத்தின் ரத்தினமாகச் சுடர்விடும் திருக்குறளுக்கு சமயச் சாயம் பூசுவது, தமிழ்ப் பெருமிதத்துக்கும், திராவிடப் பாரம்பரியத்திற்கும் எதிரான கருத்துக்களை வெளியிடுவது என்ற வகைகளில் அவர் தொடர்ந்து பேசி வருவது தமிழ்நாட்டு மக்களிடையே ஆழமான மனக்காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திறன், நேர்மை, பாரபட்சமற்ற தன்மை மற்றும் அரசியல் மேதைமை போன்ற பண்புகளை வெளிப்படுத்திய ஆளுநர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது. அண்மை காலங்களில் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், ஒன்றிய அரசை ஆளும் கட்சியோடு இருக்கும் நெருக்கத்தின் காரணமாக ஆளுநர் பொறுப்புக்கு நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு ஆளுநர் பதவி வகிப்பதற்குரிய நேர்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மை பற்றி எந்த ஞானமும் இல்லை. மாநில மக்களுக்கும் அரசுக்கும் மனவேதனை தரும் வகையில் நடந்து கொள்கிறார்கள்.
ஒன்றிய அரசை ஆளும் கட்சிக்கு அல்லாத வேறு கட்சி ஆளும் மாநிலங்களின் தலைநகரங்களில் அமர்ந்து கொண்டு, ஒன்றிய ஆளும் கட்சியின் முகவர்களைப் போல மாநில அரசியலிலும், நலன்களிலும் தேவையற்ற தலையீடுகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். இது இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையைப் பாதிக்கும், ஜனநாயகத்தைச் சீரழிக்கும். இத்தகைய நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு ஆளுநர்
திரு.ஆர்.என்.ரவி மிகச்சிறந்த உதாரணமாக தனது நடத்தையை அமைத்துக் கொண்டிருக்கிறார். திரு.ஆர்.என்.ரவி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதாகவும் தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக சேவையாற்றுவதாகவும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 159 வது பிரிவின் கீழ் எடுத்துக் கொண்ட உறுதி ஆணைக்கு நேர் விரோதமாகச் செயல்படுகிறார்.
எனவே, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற ஆளுநர் பதவியில் தொடர்ந்து நீடிக்க அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவர் உடனடியாக அப்பொறுப்பிலிருந்து விலக்கப்பட வேண்டியவர் ஆகிறார். இந்திய குடியரசு தலைவர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு தமிழ் நாட்டின் ஆளுநர் திரு.ஆர்.என்.ரவியை அந்தப் பொறுப்பில் இருந்து உடனே அகற்ற தக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.
மோடி அரசே! தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவியை உடனடியாகத் திரும்பப் பெறு! என தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வடிவங்களில் பரப்புரைகள் மேற்கொள்வது என்றும், டிசம்பர் 29ஆம் தேதியன்று இந்த முழக்கத்தை முன்வைத்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதென்றும் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.
வெள்ளப் பாதிப்புக்கு நிவாரணம் வழங்குக!
வடகிழக்கு பருவமழை பெரும் தொடர் மழையாக பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள், சாலைகள் பாதிப்படைந்துள்ளன. காவிரி பாசனப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த இயற்கைப் பேரிடரை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறது. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை முதலமைச்சரும், அமைச்சர்களும் பார்வையிட்டு மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்கள்.
பயிர் காப்பீடு செய்ய 15.11.2022ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை இந்த கால அவகாசத்தை நவம்பர் 30 வரை நீடிக்க வேண்டும். இந்த இயற்கை பேரிடரில் வசிப்பிடம் இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு மாற்று இடத்தில் பாதுகாப்பான வீடுகளும், வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் நிவாரணமும் வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.