ஆளுநரின் பொறுப்பற்ற பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
கோவை இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் மாணவர்கள மத்தியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு தாமதம் செய்ததாகப் புகார் கூறியுள்ளார். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு இன்று (29.10.2022) விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு தாமதம் செய்ததாகப் புகார் கூறியுள்ளார். கோவை இயற்கை மருத்துவக் கல்லூரி, மாணவர் விடுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில், மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர் எதன் அடிப்படையில் புகார் கூறினார்?
கோவையில் கடந்த 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்ததில் ஜமேஷ் முபின் என்பவர் தீயில் கருகி மரணமடைந்தார். அதிகாலையில் இந்தச் சம்பவம் நடந்த நிலையில், சட்டம் – ஒழுங்கு கூடுதல் தலைமை காவல்துறை இயக்குநரும், காவல்துறை தலைமை இயக்குநரும் ஒரு சில மணி நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை செய்துள்ளனர். கோவை மாநகரக் காவல் ஆணையர் மற்றும் தனிப்படைக் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான முதல் கட்ட விசாரணையைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர், உயர்நிலைக் கூட்டம் நடத்தி, கோவை குற்றச் சம்பவத்தின் விசாரணை எல்லைகளைக் கருத்தில் கொண்டு வழக்கை தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) விசாரணைக்கு வழங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அலுவல்சார் நடைமுறைகள் உடனடியாகத் தொடங்கின. இது தான் நிலை என்கிற போது, எங்கே தாமதம் ஏற்பட்டது? சாட்சியங்கள் மறைக்கப்படும், அழிக்கப்படும் வாய்ப்பு எங்கே ஏற்பட்டது? ஆளுநர் புகாருக்கு ஆதாரம் என்ன?
கார் சிலிண்டர் வெடிப்பில் மரணமடைந்த ஜமேஷ முபினிடம் 2019 ஆம் ஆண்டு என்ஐஏ விசாரணை அதிகாரிகள் விசாரித்துள்ளனர். என்ஐஏ விசாரணை வளையத்தில் இருந்து, கண்காணிப்பு எல்லைக்குள் இருந்தார். அவர் எப்படி சுதந்திரமாக நடமாட முடிந்தது? என்ற வினாவிற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் தான் விளக்கம் கூற வேண்டும்.
இது போன்ற வினாக்களைக் கருத்தில் கொள்ளாமல், அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட, உயர் பொறுப்பில் இருக்கும் ஆளுநர், பொறுப்பற்ற முறையில் பேசி, மலிவான அரசியலில் ஈடுபட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.