தமிழகம்

ஆளுநரின் கருத்து அறியாமையின் உச்சம்: மார்க்ஸ் பற்றிப் பேசுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:

ஆயிரமாண்டுகளில் தோன்றிய அறிஞர்களில் தலைசிறந்த பேரறிவாளர் காரல் மார்க்ஸ் என அறிவுலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனை அறியாத தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, “காரல் மார்க்சின் சிந்தனை இந்தியாவைச் சிதைத்தது” என பேசியிருப்பது அவரது அறியாமையின் உச்சத்தை காட்டுகிறது.

தமிழ்மொழி மற்றும் சமூகம் குறித்தும், இந்திய ஒன்றியத்தில் இணைந்துள்ள மாநிலங்களில் நிலவி வரும் தனித்துவம் வாய்ந்த சமூக உறவுகள் குறித்தும் அடிப்படை புரிதல் இல்லாதவர் தமிழ்நாட்டின் ஆளுநராக வந்திருப்பது வரலாற்றுத் துயரமாகும்.

சமூகப் பொருளாதார வாழ்வில் முற்றி வரும் நெருக்கடியில் இருந்து வெளியேற வழி தேடி, உலகம் முழுவதும் காரல் மார்க்ஸ் மறுவாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார் என்பதை ஆளுநர் கருத்தில் கொள்ள வேண்டும்.

சாதி அடுக்குமுறை சமூக அமைப்பில், மனிதர்களைப் பிளவுபடுத்துவதற்காகவே, மதவெறியை மூட்டிவிடும் மூடத்தனத்தின் “முகவர்கள்”, சமூக பொருளாதார விடுதலைக்கு வழிகாட்டிய அறிவு ஆசான் காரல் மார்க்ஸ் மீது அவதூறு பொழிவது புதிதல்ல! அவர், “உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள், இழப்பதற்கு ஏதுமில்லை, அடிமை விலங்குகளைத் தவிர” என்ற உண்மையை உலகுக்கு அறிவித்த அடி நாள் தொட்டு, அதன் மீது பொழியப்பட்ட அவதூறுகளையும், அடிப்படையில்லாத குற்றச்சாட்டுக்களையும், அடக்குமுறைகளையும் முறியடித்து முன்னேறி வருவதை வரலாறு உறுதி செய்துள்ளது.

வர்க்க பேதமில்லாத, சாதி, மத வேற்றுமைகள் இல்லாத, நிகரற்ற மனிதநேய சமூகம் அமைக்க முடியும் என்ற அறிவியல் உண்மையை உலகத்திற்கு அறிவித்த மேதை காரல் மார்க்ஸ் குறித்து விஷமத்தனமாகப் பேசுவதை ஆளுநர் ரவி இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு எச்சரிக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button