ஆளுநரின் அத்துமீறலைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிப்ரவரி 28-ல் ஆர்ப்பாட்டம்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
பிப்ரவரி 28 – ஆளுநரின் அத்துமீறலை எதிர்த்து கண்டன முழக்கம்!
தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என். ரவி, அரசியல் அமைப்புச் சட்டத்தை அலட்சியம் செய்தும், அத்துமீறியும், சிறுமைப்படுத்தியும் செயல்பட்டு வருவதை ஒட்டுமொத்த மக்களும் கண்டித்து வருகின்றனர்.
அரசியலமைப்பு அதிகாரப் பொறுப்பில் இருந்து வரும் ஆளுநர், அரசியல் கட்சியின் சேவகராகச் செயல்பட்டு வருவது எதிர்மறை நடவடிக்கையாகும். அண்மைக் காலமாக கம்யூனிஸ்டுகள் மீதும், காரல் மார்க்ஸ் குறித்தும் விஷமத்தனமான கருத்துக்களைத் தெரிவித்து ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டு வருகிறார்.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைப் பண்பான மதச்சார்பின்மையைத் தகர்த்து, இந்தியாவும் மதம் சார்ந்த நாடு தான் எனப் பேசி வருகிறார். ஆளுநரின் நடவடிக்கை எல்லை மீறிச் சென்று, தமிழ்நாட்டின் அமைதி நிலையைச் சீர்குலைத்து வருகிறார். ஆளுநரின் அத்துமீறல்களைக் கண்டிக்கும் முறையில், கட்சி அமைப்புகள் மாவட்ட வட்ட, வட்டார அளவில் வரும் 28.02.2023 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு முழுவதும் கண்டன முழக்க ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.