ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.கவை வீழ்த்துவதே பிரதான நோக்கம்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா 27.10.2022 அன்று புதுடெல்லியில் செய்தி ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்திக்குறிப்பு பின்வருமாறு:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அக்டோபர் 14 முதல் 18 வரை நடைபெற்றது. தற்போதைய அரசியல் சூழலைக் கட்சிக் காங்கிரஸ் ஆய்வு செய்தது; எதிர் வரும் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய அரசியல் நடவடிக்கைகளை முடிவு செய்தது.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அணியை முறியடிப்போம்:
மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் தேசத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜா.க அணி அச்சுறுத்தலை உண்டாக்கி வருகிறது.
தேசத்தை மிக மோசமான நெருக்கடியில் ஆழ்த்தி வரும் பேரழிவுகரமான கொள்கைகளை நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜா.க அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
தேசத்தின் பொருளாதாரம் சீர்குலைந்து வருகிறது. தேசத்தின் மாண்பையே சிதைக்கும் அளவிற்கு இந்திய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
உலக பசி குறியீட்டில், தேசம் மிகவும் கீழ் நிலையில் இருப்பது வெட்கக்கேடானது. பொருள்களின் விலையும், பணவீக்கமும் அதிகரித்துள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்கள் தேசத்தின் சொத்துகளையும், செல்வ வளங்களையும் கொள்ளையடிக்க அனுமதிக்கப்படுகின்றன. அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களை முடக்கி, அவற்றைத் தனியார்மயமாக்கிடத் துடிக்கிறது.
அரசியல் அமைப்புச் சட்டத்தின்படியான, மதச்சார்பின்மை, கூட்டாட்சி மற்றும் மக்கள்நல அரசு உள்ளிட்ட இந்திய அரசின் கூறுகளையும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையான கோட்பாடுகளையும் தகர்த்தெறிய ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அணி முயன்று வருகிறது.
தலித்துகள், பழங்குடி மக்கள் மற்றும் சிறுபான்மையோர் மீதான அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றன. குடிமக்களின் அரசியல் அமைப்புச் சட்ட ரீதியான, ஜனநாயக ரீதியான உரிமைகள் நசுக்கப்படுகின்றன. நாடு தற்போது கார்ப்பரேட் வகுப்புவாத பாசிசத்தை எதிர்கொண்டு வருகிறது.
மக்களைப் பேரழிவில் இருந்து பாதுகாத்திட, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அணியை வீழ்த்துவதே பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்று தற்போதைய சூழல் கோருகிறது. எனவே, 2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை வீழ்த்திட இடதுசாரி, மதச்சார்பற்ற, ஜனநாயக, பிராந்திய கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் ஓரணியாகத் திரள வேண்டும் என்று கட்சிக் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ள அரசியல் தீர்மானம் அறைகூவல் விடுக்கிறது.
நாட்டு மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்திட, அடிப்படையான வாழ்வாதாரப் பிரச்சனைகளான உணவு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வீட்டுவசதி மற்றும் நிலம் ஆகியவை முன்னெடுக்கப்பட வேண்டும்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பலப்படுத்துவோம்:
மார்க்சிய-லெனினியத்தை இந்தியச் சூழலுக்கு நடைமுறைப்படுத்தும் போது, வர்க்க ரீதியிலான சுரண்டல், சாதியம் மற்றும் ஆணாதிக்கம் ஆகியவற்றை ஒழித்திட, கட்சி அதன் போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்.
கட்சியின் நூற்றாண்டு 2025 ஆம் ஆண்டு கொண்டாடப்பட இருக்கிறது. உறுப்பினர் எண்ணிக்கை 10 இலட்சமாக அதிகரிக்க வேண்டும். நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கட்சியின் பலம் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்க வேண்டும்.
கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி ஒற்றுமையைப் பலப்படுத்துவோம்:
இடதுசாரி ஒற்றுமையைப் பலப்படுத்திட அனைத்து இடதுசாரி கட்சிகளுக்கும் கட்சிக் காங்கிரஸ் அறைகூவல் விடுத்துள்ளது. கார்ப்பரேட் வகுப்புவாத பாசிச சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒற்றுமை மிகவும் முக்கியமானது ஆகும். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ‘கொள்கை அடிப்படையிலான ஒற்றுமை’ என்ற அதன் நிலைப்பாட்டை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மீண்டும் வலியுறுத்துகிறது.
இவ்வாறு கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.