ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: இரண்டாம் முறையாக நிறைவேற்றம் – வரவேற்கிறோம் – ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்துகிறோம்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
தமிழ்நாட்டில் தீவிரமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி வரும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யுமாறு ஒட்டுமொத்த மக்களும் வலியுறுத்தி வந்தனர். சென்னை உயர் நீதிமன்றம் சட்டம் இயற்றுமாறு ஆலோசனை கூறியது. இதனைத் தொடர்ந்து கடந்த 2022 அக்டோபர் முதல் தேதியில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. இதற்கு அப்போது உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் பிறகு, அவசர சட்டத்திற்கு பதிலாக நிரந்தர சட்டம் நிறைவேற்ற வழிவகுக்கும் சட்ட மசோதா சட்டமன்றப் பேரவையில் 2022 அக்டோபர் 19 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்த சட்டம் குறித்து சில விளக்கங்களையும், கேள்விகளையும் எழுப்பி, அதனை தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார். தமிழ்நாடு அரசு, ஆளுநரின் சந்தேகங்களை நீக்கும் வகையில் விளக்கங்களையும், பதிலும் தெரிவித்து உடனடியாக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைத்தது.
இதனைப் பெற்றுக் கொண்ட ஆளுநர், நீண்ட தாமதத்திற்கு பின்னர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு குறித்து சட்டம் நிறைவேற்ற தமிழ்நாடு அரசுக்கு உரிமையில்லை எனக் கூறி மீண்டும் திருப்பி அனுப்பிவிட்டார்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுந்த போது, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு குறித்து சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என்றும், அதன்படி சில மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கும் தகவலும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்யும் சட்டத்தை மீண்டும் (இரண்டாவது முறையாக) நிறைவேற்றி இருப்பதையும் “மனசாட்சியை உறங்க வைத்து விட்டு, ஆட்சி நடத்த முடியாது” என்று உறுதிபட தெரிவித்த மாண்புமிகு முதலமைச்சர் கருத்தையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.