ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை மேலும் முடக்காதீர்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
ஆன்லைன் சூதாட்டத்தில் பெருந்தொகையை இழந்துவிட்ட சென்னை பெருநகர், கே.கே நகரைச் சேர்ந்த சுரேஷ (40) என்பவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி வெளியாகியுள்ளது. இது போன்ற சாவுகள் தினசரி செய்தியாகி வருவது ஆளுநர் மாளிகையின் கண்ணை திறக்காதது மிகவும் வேதனையானது.
ஆன்லைன் சூதாட்டத்தின் விபரீத விளைவுகளை உணர்ந்த தமிழ்நாடு அரசு அவசர சட்டத்தின் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்தது. இந்த அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்க, சட்டப் பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளிக்கப்பட்டது. அரசின் விளக்கம் பெற்ற ஆளுநர் மேலும் காலதாமதப்படுத்தி வருவது சூதாட்டத்தை ஊக்கப்படுத்தி, குடிமக்களின் உயிரோடு விளையாடும் செயலாகும். இதற்கிடையில் சூதாட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆளுநரைச் சந்தித்து கலந்துரையாடியது ஆழமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தால் தினசரி குடிமக்கள் செத்து மடிவதைத் தடுக்க ஆளுநர் மாளிகை மக்கள் படும் துயரை கண்திறந்து பார்க்க வேண்டும். தமிழ்நாடு அரசின் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.