அவ்வாறாயின் மோடி!
“பஞ்சாப் வரலாறு கண்டிராத ஐந்து லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம்; மக்களைத் திரட்டி அழைத்து வர 3,485 பேருந்துகளும் 5000 இதர வாகனங்களும் ஏற்பாடு” எனப் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்திருந்தார் பஞ்சாப் பிஜேபி தலைவர் அஸ்வனி குமார் சர்மா.
மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றபின் முதலாவதாக, வரப்போகும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கட்டியம் கூறும் பிரதமர் பொதுக்கூட்டம்.
உள்நாடு, வெளிநாடு என எங்கு சென்றாலும், “மோடியே திரும்பிப் போ” என ஆர்ப்பாட்டங்களும் கருப்பு கொடிகளும் களம் காண்கின்றன. அவர் தலைமை தாங்கும் கார்ப்பரேட் ஆட்சியின் மாட்சி அப்படி!
ஜனவரி 2ல் கிராமங்களிலும், 5ம் தேதி நகரங்களிலும் பஞ்சாப் முழுவதும், ‘மோடியே திரும்பிப் போ’ என ஆர்ப்பாட்டங்களை நடத்த விவசாயிகள் ஐக்கிய முன்னணி முடிவு செய்தது.
ஃபெரோஸ்பூரிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் முயன்றனர். பஞ்சாப் மாநில அரசின் காவல்துறை தடுத்ததால், சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
ஆனால், ஹெலிகாப்டரில் செல்வதாக இருந்த மோடி திடீரென திட்டத்தை மாற்றி அந்த வழியாக சாலையில் வரப்போகிறார் என அவர்களுக்கு தெரியாது.
அவர்கள் மறியல் செய்த இடத்துக்கும், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளோடு பிரதமரின் கார் அணிவகுப்பு வந்து நின்று திரும்பிய பைராயனா மேம்பாலத்துக்கும் இடையே வெகு தூரம் இருந்தது.
மறியல் செய்த விவசாயிகள் மோடி கார் அணிவகுப்பு பக்கத்திலேயே வரவில்லை. அவர்களால் பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவும் இல்லை. மறியல் செய்தவர்களிடம் பேசி அப்புறப்படுத்த, மாநில அரசுக்கு சில நிமிடங்கள் அவகாசம் தந்திருக்கலாம். அதைவிட மோடியே நேரில் சென்றால் அவரைப் பார்த்த மகிழ்ச்சியில் தாமாக வழி விட்டிருப்பார்கள். அவர்களிடமும் இராஜதந்திரமாக வணக்கம் சொல்லி ஈர்த்திருக்கலாம். அவர்கள் நமது மக்கள்தானே, அன்னியர் அல்லவே!
பிரதமர் பயணம் செய்யும் சாலையை, பிரதமரின் தனிப்பாதுகாப்பு குழு (எஸ்பிஜி) எடுத்துக்கொண்டது. அவர் வந்து இறங்கிய பதிந்தா விமான நிலையத்தில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரம் பயணித்து இருக்கிறார். இடையில் வரவேற்பு நிகழ்வுகளும் நடந்துள்ளன. பாதுகாப்பு குறைபாடுகள் எதுவும் இல்லை.
பொதுக் கூட்டத் திடலில் மழையும் பெய்து, காற்றும் வீசி இருக்கிறது. மோடி உரையாற்ற இருந்த பொதுக் கூட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட 5 லட்சம் பேருக்கு பதிலாக 500 பேர் கூட வரவில்லை. போட்ட நாற்காலிகள் அனைத்தும் காலியாக இருந்திருக்கின்றன. அதனாலோ, அன்றி வேறு காரணங்களாலோ கூட்டத்தை ரத்து செய்து, பிரதமர் திரும்ப நினைத்திருக்கலாம். அது அவரது சொந்த முடிவு!
ஆனால் விமானம் ஏறும் முன்பு “உயிரோடு திரும்ப அனுமதித்தித்ததற்கு நன்றி” என்று கொளுத்திப் போட்டது தான் மோடியின் அரசியல்.
பஞ்சாப் மாநில பிஜேபி தலைவர்கள் பேசுவதைப் பார்த்தால் “மோடி உயிருக்கு ஆபத்து” என்பதுதான் தேர்தல் பிரச்சாரத் துவக்கம் எனத் துலக்கமாகிறது.
“ராகுல்காந்தி! மோடியின் உடலில் ஒரு சிறு கீறல் ஏற்பட்டு இருந்தாலும், 1984ஆம் ஆண்டு கலவரங்களை விட மிகப்பெரிய கலவரத்தை உருவாக்கி இருப்போம். அவர் 130 கோடி மக்கள் கொண்ட குடும்பத்தின் தலைவர்” என்று பிஜேபி தலைவர் சுஷில் கேடியா என்பவரும், “மோடிஜி, இந்திராகாந்தி அல்ல, உனக்கு எழுதுவதற்கு காகிதமும், படிப்பதற்கு வரலாறும் கிடைக்காது, நினைவில் வை” என பிஜேபி எம்எல்ஏ அபிஜித் சிங் சங்காவும் ராகுல்காந்திக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்!
இந்தியா விடுதலை பெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு கலவரம் நடந்துகொண்டிருந்த நவகாளிக்கு காந்தி சென்றார். கும்பல் கூடி அவர் தங்கியிருந்த வீட்டின் மீது கல் எறிந்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சன்னல் கதவு கண்ணாடிச் சில்லுகள் தெறித்து அவர் தலை மீது விழுந்தன. வெறி பிடித்து நின்ற அந்தக் கூட்டத்தை நோக்கி காந்தி வந்தார். “உங்களை நம்பி என் பாதுகாப்பை ஒப்படைக்க வந்துள்ளேன். நீங்கள் வேறு மாதிரியாக முடிவெடுத்தால் அதற்கும் நான் மகிழ்ச்சி அடைவேன்!” என்றார். அவர் தலைவர்!
அவரைச் சுட்டுக் கொன்றதற்காக பெருமைப்படுவது ஆர்எஸ்எஸ். எனவே அவர்களுக்கு பிடித்த சர்தார் வல்லபாய் பட்டேல் சொன்னதை பார்க்கலாம்:
“எவர் ஒருவர் தன்னுடைய அரசியல் பணியை விட தன்னுடைய உயிர்தான் முக்கியம் என்று நினைக்கிறாரோ, அவர் இந்த இந்தியா போன்ற நாட்டில் உயரிய பொறுப்பு எதையும் பெற்றுவிட கூடாது”. பட்டேலும் தலைவர்!
அவ்வாறாயின் மோடி?! …