அழிவின் பிடியில் புவியின் ஆக்சிஜன் சிலிண்டர் முதலாளித்துவத்தின் கோரத் தாண்டவம்
சாவ் பாவ்லோ, பிப்.4- இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே மாதத்தில் பெரும் அளவில் பிரேசிலின் அமேசான் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. பிப்.2 அன்று வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, ஜனவரி 2022ல் அமேசான் காடுகளில் பெரும் அழிவு நிகழ்ந்திருக்கிறது. அமேசான் காடுகள்தான் உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளாகும். நாம் வாழும் பூமியின் ஆக்சிஜன் சிலிண்டர் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் காடுகள் அழிக்கப்பட்டால் உலகத் தட்பவெப்ப நிலையில் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். அமேசான் காடுகள் பற்றி தொடர்ந்து பிரேசிலின் தேசிய விண்வெளி ஆய்வு மையம் கண்காணித்து வருகிறது. ஜனவரி 2022 ல் முதல் 22 நாட்களிலேயே பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை ஆய்வு மைய வல்லுநர்கள் கண்டிருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 360 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. 2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு பெரும் மோசமான அழிவை தற்போது அமேசான் காடுகள் கண்டுள்ளன. 2019 ஆம் ஆண்டில் வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சானரோ பொறுப்பேற்றதில் இருந்து காடுகள் அழிவது வேகமெடுத்துள்ளது. காடுகளில் உள்ள இயற்கை வளங்களை பெரு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கவே காடுகள் அழிக்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்துள்ளன. தற்போதுள்ள நிலையைப் பார்க்கையில், 2022 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக இருக்கும் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
தற்போதுள்ள நிலைமை பற்றி பெரும் கவலையைத் தெரிவிக்கிறார் கிளாடியோ ஏஞ்சலோ என்ற ஆய்வாளர். “ஜனவரி மாதம் என்பது மழை உச்சத்தைத் தொடக்கூடிய காலமாகும். பொதுவாக, இந்தக் காலகட்டத்தில் காடுகள் அழிவது குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த மாதத்தில் இவ்வளவு வனப்பகுதி அழிந்திருப்பது கூடுதல் கவனத்தை ஈர்க்கிறது. பெரும் கவலையை உண்டாக்கியுள்ளது” என்கிறார்.