தமிழகம்

அறிவியல் மனப்பான்மையை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளைக் கைவிடுக! – தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தல்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் த. அறம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:

சமீபத்தில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (National Council of Education Research and Training – NCERT) பன்னிரண்டாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் மாற்றங்களை கொண்டு வருகிறோம் என்ற பெயரில் மத வெறுப்பு அரசியலை பாடத்திட்டத்தில் புகுத்தியுள்ளது.

பனிரெண்டாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் இந்திய வரலாற்றின் கருப்பொருள்கள் பகுதி-2ல் ( Themes of Indian History- Part-2), ‘மன்னர்களும், வரலாறுகளும் – முகலாயர்களின் அரசாட்சி’ ( ‘Kings and Chronicles: The Mugal Courts’) பாடங்களை வரலாற்று நூலிலிருந்து நீக்கியுள்ளனர்.

இதுகுறித்து NCERT இயக்குனர் திரு. தினேஷ் பிரசாத் சக்லானி அவர்கள் ‘கொரனோ காலத்தில் மாணவர்களின் படிப்பு சுமையை குறைப்பதற்காகவும், மன உளைச்சலை குறைப்பதற்காகவும் பாடத்திட்டங்களை குறைக்க முடிவு செய்தோம்,அதன் அடிப்படையிலேயே இந்த மாற்றங்கள் நடைபெற்றுள்ளன என்றும், பாடத்திட்டங்களை பகுத்தறிவு பூர்வமானதாக மாற்றுவதற்காக இதை செய்ததாகவும், தேசிய கல்விக் கொள்கை 2020 வழிகாட்டிய படி பாடச் சுமையை குறைப்பதற்காக செய்ததாகவும், இதில் வேறு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல் பத்தாவது வகுப்பில் ஜனநாயக அரசியல்-2 ( ‘Democratic Politics -2’) என்ற பாடத்தில் ‘ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவம்’ (‘Democracy and Diversity’), ஜனநாயகத்தின் சவால்கள் (‘ Challenges of Democracy’), பற்றிய பாடங்களும், ‘பிரபலமான போராட்டங்களும், இயக்கங்களும்’ (‘Popular Struggles and Movements’) என்ற பாடமும் நீக்கப்பட்டுள்ளது.

மேலும் பதினொன்றாம் வகுப்பு பாடத்திட்டத்தில் ‘உலக வரலாற்றின் கருப்பொருள்கள்’ (‘Themes in World History’) என்ற பகுதியில் உள்ள ‘மத்திய இஸ்லாமிய நாடுகள்’ ( ‘Central Islamic Lands’) என்ற பாடமும்,’தொழில் புரட்சி’ (‘Industrial Revolution’) என்ற பாடமும் ‘கலாச்சாரங்களுக்கு இடையிலான மோதல்’ (‘Clash of Cultures’) என்ற பாடமும் நீக்கப்பட்டுள்ளது.

மேலும் உத்தரப்பிரதேச மாநிலப் பாடத்திட்டத்தில் ‘உயிரின பெருக்கம்’ (‘Reproduction of Organisms’) என்ற பாடமும் நீக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே ஒரு மதம் குறித்த வரலாறுகளை மறைப்பதாக உள்ளது, ஜனநாயகம், சகிப்புத்தன்மை மற்றும் பன்மைத்துவத்தை மாணவர்களிடையே வளர்ப்பதற்குப் பதிலாக அதைச் சிதைப்பதாக உள்ளது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையாக உள்ளது. எனவே, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக கைவிடுமாறு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக்கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button