அறிவித்தபடி, டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்கள் நாடு தழுவிய அளவில் வங்கிகள் வேலை நிறுத்தம் நடைபெறும் – அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்
வங்கிகள் தனியார்மயமாக்கல் சட்ட முன்வடிவை எதிர்த்து டிசம்பர் 16 மற்றும் 17 ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம் – அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறைகூவல்!
அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்கள் வங்கித்துறை வேலை நிறுத்தத்திற்கான நோட்டீசை வழங்கியதையடுத்து, இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் துறை ஆணையர் டெல்லியில் வங்கித்துறை சங்க பிரதிநிதிகள், நிதி அமைச்சகம் மற்றும் இந்திய வங்கிகள் அமைப்பின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசினார்.
இக்கூட்டத்தில் சாதகமான முடிவு ஏற்படாததால் வரும் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்கள் நாடு தழுவிய அளவில் வங்கிகள் வேலை நிறுத்தம் அறிவித்தபடி நடைபெறும் என்று யு.எப்.பி.யு. (UFBU) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்யும் வகையில் வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை மார்ச் 15 மற்றும் 16 ஆகிய இரு நாட்கள் மேற்கொண்டார்கள்.
வங்கித்துறை ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் எதிர்ப்பையும் புறக்கணித்துவிட்டு, வங்கிகள் தனியார் மயமாக்கல் சட்ட முன்வடிவை அரசாங்கம் நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரில் கொண்டுவர முயல்கிறது. எனவே தான் நாடு தழுவிய இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்து உள்ளோம்.
நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வங்கிகள் தனியார் மயம் பற்றிய சட்ட முன்வடிவை கொண்டு வராது என்றுஅரசாங்கம் உறுதிமொழி வழங்குமேயானால் வேலைநிறுத்தப் போராட்டத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று யு.எப்.பி.யு. சார்பில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசாங்கம் அல்லது இந்திய வங்கிகள் அமைப்பு (IBA) தரப்பிலிருந்து எந்த ஒரு உறுதிமொழியும் வழங்கப்படாததால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.