அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவினர் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்! – சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் ஆதரவு
தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் நியாயமான ஊதியக் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!
காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டுள்ள, அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவினரையும், இதர அரசு மருத்துவர்கள் சங்கங்கள் அனைத்தையும் அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர். ஜி.ஆர். இரவீந்திரநாத் இன்று (30/06/2022) வெளியிட்டுள்ள ஊடகங்களுக்கான செய்திக்குறிப்பு பின்வருமாறு:
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவினர், அக்குழுவின் தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அவர்கள் தலைமையில் , மருத்துவப் போராளி, தியாகி டாக்டர் என்.லெட்சுமி நரசிம்மன் அவர்களின் நினைவிடத்தில் காலவரையற்ற உண்ணாநிலை அறப்போராட்டத்தை நேற்று (29/06/2022) முதல் தொடங்கியுள்ளனர்.
அரசு மருத்துவர்கள், ஊதிய உயர்வு,பதவி உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். பலகட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
எனினும், கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
போராடிய மருத்துவர்கள் இடமாறுதல் செய்யப்பட்டு பழிவாங்கப்பட்டனர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தி.மு.க உறுதியளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, தி.மு.க அரசு இதுவரை அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இதனால் அரசு மருத்துவர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, தவிர்க்க முடியாமல் , காலவரையற்ற உண்ணாநிலை அறப் போராட்டத்தை அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவினர் துவக்கியுள்ளனர். எனவே, அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட முன்வர வேண்டுமென, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு உட்பட, அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் தலைவர்களையும் அழைத்துப் பேசி, கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு காலவரையற்ற உண்ணாநிலை அறப்போராட்டத்தை , சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர்.ஜி.ஆர். இரவீந்திரநாத் மற்றும் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி ஆகியோர் இன்று ( 30/06/2022 வியாழக் கிழமை ) நண்பகல் 12.00 மணி அளவில் நேரில் சென்று வாழ்த்தி ஆதரவு தெரிவித்துள்ளனர்.
போராட்டம் நடைபெறும் இடம்:
Dr.என்.லெட்சுமி நரசிம்மன் அவர்களின் நினைவிடத் தோட்டம்,
மல்லப்பனூர் பிரிவு, நங்கவள்ளி
மெயின் ரோடு, மேட்டூர் தாலுகா,
சேலம் மாவட்டம்.
Pin :636404
இவண் ,
டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத்,
பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.
99406 64343
94441 81955