அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற/சட்டமன்றங்களின் அதிகார வரம்பிற்குள் தேர்தல் ஆணையத்தின் அத்துமீறல்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கண்டனம்
அரசியல் கட்சிகள் மற்றும் சட்டமன்றங்களின் அதிகார வரம்பிற்குள் தேர்தல் ஆணையம் அத்துமீறி தலையிட்டு இருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கண்டித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் தேசிய செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:
அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியை அக்கட்சிகள் எவ்வாறு திட்டமிடப் போகின்றன என்பதை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்பதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யும் நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையானது, செயல்திட்டங்களை வகுப்பதற்கான அரசியல் கட்சிகளின் சுதந்திரத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்கும்.
நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கான அதிகாரத்தைத் தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கிறது. அரசியல் கட்சிகளின் கொள்கைகளை முறைப்படுத்துவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்படவில்லை. எனவே, தேர்தல் ஆணையத்தின் இது போன்ற நடவடிக்கைகள் விதிமுறை மீறல் ஆகும்; அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாகும்; அரசியல் கட்சிகளின் சட்டப்படியான உரிமைகளைப் பறிப்பதாகும்.
தேர்தல் ஆணையத்தின் இது போன்ற நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிப்பதோடு, அவற்றைக் கைவிடுமாறு வலியுறுத்துகிறது.
இவ்வாறு தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.