அரசியலுக்காக மதத்தை பயன்படுத்துகிறார் பாஜக நிர்வாகி மீது அரசு குற்றச்சாட்டு
சென்னை, பிப். 11 – அரசியலுக்காக மதத்தை பயன்படுத்துவதாக தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது. நீதிமன்ற உத்தரவுப் படிஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இந்து கோவில்கள் மட்டுமே இடிக்கப்படுவதாக தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி. செல்வம் டிவிட்டர் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அவர் மீது, கலகத்தை ஏற்படுத்துதல், இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதனையடுத்து முன் ஜாமீன் கோரி வினோஜ் பி.செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர். பொங்கியப்பன் முன்பு வெள்ளியன்று (பிப்.11) விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பான ஆவணங்களும், டிவிட்டர் பதிவுகளும் நீதிபதி முன்பு சமர்பிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவி யல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, வினோஜ் பி.செல்வம், பொது அமைதியை குலைக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளதாகவும், அரசியலுக்காக மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆராயவும், வழக்கில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் விசாரணையை பிப்15ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.