கட்டுரைகள்

அரசியலமைப்புச் சட்டத்தையும் தேசத்தையும் பாதுகாப்போம்

டி ராஜா

தேச விடுதலைக்காக நாம் போராடிக் கொண்டிருந்தபோது, பிரிட்டிஷாரின் கொடுங்கோன்மையைத் தூக்கியெறிவது மற்றும் நம் தேசத்துக்கான ஒரு வளமான வருங்காலம் குறித்து சிந்திப்பது ஆகிய இரண்டு நோக்கங்களும் நமது நூற்றாண்டு கால விடுதலைப் போராட்டத்தில் பின்னிப் பிணைந்து இருந்தன.

வருங்கால இந்திய குடியரசை வடிவமைத்திட, சீர்திருத்தவாதிகள் அரசியல் தலைவர்கள், சித்தாந்தவாதிகள், எழுத்தாளர்கள் மற்றும் புரட்சியாளர்கள் ஆகியோரின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் மையப்புள்ளியில் சங்கமித்துக் கொண்டிருந்தன. இறுதியாக, 75 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷாரிடம் இருந்து நாம் விடுதலை அடைந்தபோது, பிரிட்டிஷாரின் மோசமான ஆட்சியின் கீழ் ஆதரவற்ற ஏழைகளாகப் பீடிக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான மக்களின் அபிலாஷைகளுக்கு ஒரு தெளிவான வடிவத்தை வழங்கிட நாம் முயன்றோம்.

தேசப் பிரிவினை ஏற்படுத்திய கொடூரமான விளைவுகள் நமது சிந்தையில் நிலைகொண்டிருந்தது. மத அடிப்படையிலான அணிதிரட்டலின் விளைவுகள் குறித்து தலைவர்களும், வெகுமக்களும் ஒத்த கருத்து கொண்டிருந்தனர். மத அடிப்படையிலான அணிதிரட்டல், பொதுநலம் குறித்த பார்வையற்றவர்களாகப் பொதுமக்களை மாற்றியது.

காலத்தின் தேவையை உணர்ந்து, வெகுமக்களின் விருப்பங்களையும், நமது விடுதலைப் போராட்ட இயக்கத்தின் இலட்சியங்களையும், நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்திட டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் சீரிய தலைமையின் கீழ், நமது அரசியல் நிர்ணய சபை முயன்றது. சுமார் மூன்றாண்டு கால கடின உழைப்புக்குப் பின், 1949ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையின் ( Preamble ) மூலமாக இந்தியாவை ஒரு இறையாண்மைமிக்க ஜனநாயக குடியரசாகக்  கட்டமைப்பதற்கான நமது உறுதிப்பாட்டை நாம் பிரகடனப்படுத்தினோம். சுதந்திர இந்தியாவில் வருங்கால தலைமுறையினர் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்காகப் போராடி இன்னுயிர் ஈந்த லட்சக்கணக்கான மக்களின் செங்குருதியை, நமது அரசியலமைப்பின் இலட்சியங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

நமது அரசியலமைப்புச் சட்டம் உயர்த்திப் பிடித்து வரும் மெய்கோள்களில் ( Premise ) இருந்து, கடந்த 8 ஆண்டுகளில், குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவிற்கு பின்னோக்கிய நகர்வு ஏற்பட்டிருப்பதை நாம் பார்த்து வருகிறோம். அனைத்து மதப் பிரிவுகளிடமிருந்தும் அரசு சமதொலைவில் விலகி நிற்பதான ஒரு மதச்சார்பற்ற அரசியலமைப்புக்கான கட்டமைப்பை நமது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கியது. சிறுபான்மையினரைப் பாதுகாத்திடவும், அனைத்து தரப்பு மக்களும் நியாயமான முறையில் நடத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய மதச்சார்பற்ற கட்டமைப்பு இன்று திட்டமிட்டு தகர்க்கப்பட்டு வருகிறது.

ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு அரசின் அதிகாரப்பூர்வ மதம் எனும் சிறப்பு நிலையை வழங்கி அந்த மதத்தை உயர்த்திடுவதற்காக அனைத்துவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பிரதமர் உள்ளிட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் உயர் பொறுப்புகளை வகிக்கும் அரசாங்கத்தின் மூத்த பிரமுகர்கள் மதச்சடங்குகளில் பங்கேற்று வருகிறார்கள். அயோத்தியில் இராமர் கோயில் கட்டுமானத்தின் அடிக்கல் நாட்டு விழா, காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தின் தொடக்க நிகழ்வு ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். நிலைமை மேலும் மோசமாகி, அரசு நிகழ்ச்சிகளுக்கு கூட, பெரும்பான்மை மதத்தின் சடங்கு மற்றும் சம்பிரதாயங்களின் சாயல் கொடுக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் போதும், அந்தக் கட்டடத்தின் உச்சத்தில் தேசியச் சின்னத்தைப் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைத்த போதும் அத்தகைய சாயல் கொடுக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கைகளை ஒரு பிரிவினர் போற்றிக் கொண்டாடி வருகிறார்கள். எனினும், இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகள் சிறுபான்மை சமூகத்தவரின் சம்பிரதாயங்களை ஒத்திருந்தால், ஒருவேளை, அந்தக் கூட்டத்தார் சினம் கொண்டு எழுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

இந்த முயற்சிகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவை அனைத்தும் நமது மதச்சார்பற்ற ஜனநாயக அரசியலமைப்பைத் தூக்கியெறிந்துவிட்டு, ஆர்.எஸ்.எஸ்-ன் சமூகப் படிநிலைகள் கொண்ட இந்து தேசியத்தை நிறுவிட வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு தீட்டப்பெற்ற சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த முயற்சிகள் யாவும் புதியவையன்று. ஆனால், தற்போது இந்த முயற்சிகள் வீரியத்துடன் மேற்கொள்ளப்படுவது, அவற்றுக்கான ‘அரசின் ஆதரவைத்’ தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

சிறுபான்மையினர் மற்றும் விளிம்புநிலை மக்களின் பாதுகாப்பு, மதச்ச்சார்பின்மை, சமத்துவம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. தொடக்கத்திலிருந்தே, அவர்கள் ஜனநாயக கட்டமைப்பை எதிர்த்து வந்தனர் என்பதோடு பிரிட்டிஷாருக்கு ஆதரவாக உறுதிபூண்டு நின்றனர். அரசியலமைப்புச் சட்டத்தை அவர்கள் இகழ்ந்துரைப்பதும் புதியதன்று. அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் பாஜக முதல் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றபோது, அரசியலமைப்புச் சட்டத்தை மறுஆய்வு செய்திட, ஒரு குழுவை அமைக்க  விருப்பம் கொண்டது, ஆனால், அப்போதைய குடியரசுத் தலைவர் கே ஆர் நாராயணனின் கடுமையான எதிர்வினை காரணமாக, அந்த முயற்சியில் இருந்து பின்வாங்க நேரிட்டது. ஆர்.எஸ்.எஸ்-ன் முன்னாள் பிரச்சாரக்கான நரேந்திர மோடியின் ஆட்சியில், இந்து தேசத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றிட, மிகுந்த செயல்முனைப்புடன், அனைத்து வழிகளிலும் முயன்று வருகிறார்கள்.

அண்மையில், இந்து மதத் தலைவர்களின் கூட்டமொன்று ( Religious Sansad ) வாரணாசியில் நடைபெற்றது. இந்து தேசம் ஸ்தாபிக்கப்பட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வரைவை இந்தக் கூட்டம் தயாரித்தது. இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களிடமிருந்து அவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட வேண்டும் என்று இந்தச் சபை பரிந்துரைத்தது. புதுடெல்லிக்குப் பதிலாக வாரணாசியைத் தலைநகரமாக அறிவிக்க வேண்டும்; சாதியமுறை சட்டபூர்வமாக்கப்பட வேண்டும்; பாகுபாடுகள் மற்றும் சமூகப் படிநிலைகள் ஆகியவை அந்த வரைவின் ஒரு பகுதியாகும். அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான இதுபோன்ற முன்மொழிவுகள் குறித்து அரசாங்கம் கடைப்பிடிக்கும் ‘மவுனம்’ நம்மைத் திகைப்படையச் செய்கிறது. வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, விருப்பு வெறுப்பின்றி, அச்ச உணர்வின்றி, அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்கள் நலனுக்காக கடமையாற்றுவேன் என்று பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்ட பிரதமரும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான இதுபோன்ற முன்மொழிவுகள் குறித்து மவுனமாக இருப்பது நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது. ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு முற்றிலும் முரணான இந்த அலட்சியப் போக்கு, இந்துத்துவ சக்திகளுக்கு அரசாங்கம் உடந்தையாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அரசாங்கம் மற்றும் பாஜகவின் இந்த திட்டமிட்ட மவுனம் இது போன்ற நிகழ்வுகளை இங்கொன்றும் அங்கொன்றுமாக எங்கோ நடக்கும் எதேச்சையான சம்பவங்கள் என்று அரசாங்கத்  தரப்பிலிருந்து அறிவிக்கச் செய்யக்கூடும் என்பதையே எடுத்துக்காட்டுகிறது. ஆனால், இதுபோன்ற ஒவ்வொரு நிகழ்வின் போதும், குடிமக்கள் இவற்றை எதிர்த்துக் குரல் எழுப்ப வேண்டும்.

நமது அரசியலமைப்புச் சட்டம், மதச்சார்பற்ற ஜனநாயக கட்டமைப்புடன், குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவிற்கு, மக்கள்நல நோக்குநிலையையும் ( Welfare Orientation ) கொண்டு விளங்கியது. வறுமை மற்றும் நோய் ஆகியவற்றிலிருந்து குடிமக்கள் விடுதலையடைந்து, ஒட்டுமொத்த மேம்பாடு காண,  அத்தியாவசியமான வசதிகளை அவர்களுக்கு வழங்கிட அரசின் தலையீடு ( State Intervention ) அவசியம் என்று கருதப்பட்டது. அப்போது தான் சமவாய்ப்பு மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றை அடைய முடியும். இவ்வாறாக, அரசியலமைப்புச் சட்டம், அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும் வழங்கியதோடு மட்டுமின்றி,  வருங்கால அரசாங்கங்கள் கொள்கைத் திட்டங்களை வகுத்துக் கொள்வதற்கு உதவிகரமாக ‘அரசு கொள்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும்’ ( Directive Principles of State Policy ) வழங்கியுள்ளது. தேசம் மற்றும் மக்களின் ஒட்டுமொத்த நலன்களை உறுதிப்படுத்திடவே இதுபோன்ற வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டன. “சட்டங்களை இயற்றும் போது இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பொருத்திப் பார்க்க வேண்டியது அரசின் கடமையாகும்” என்று அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி 4-ல் உள்ள ஷரத்து 37 பிரகடனப்படுத்துகிறது. தேசத்தின் நிர்வாக ஆளுகைக்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையானவை என்று அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பிகள் கருதினர்.

இத்தகைய கோட்பாடுகளில் இருந்து குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவிற்கு பின்னோக்கிய நகர்வு ஏற்பட்டிருப்பது கண்கூடாகத்  தெரிகிறது. கட்டற்றுப் பெருகி வரும் தனியார்மயம், சமத்துவமின்மை, வேலைவாய்ப்பின்மை, சமூக பாதுகாப்பின்மை, பசி இவை அனைத்தும் மோடி ஆட்சிக்காலத்தின் முத்திரைகள் ஆகும். அறிவியல் மற்றும் விவாத மனப்பான்மை வலதுசாரி சக்திகளால் நொறுக்கப்படுகின்றன. நாடாளுமன்றம் கூட குறைமதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் நேரத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக சமத்துவ கட்டமைப்பைப் பாதுகாப்பது மற்றும் மக்களின் பொதுவான பொருளாதார மேம்பாட்டுக்காகப் போராடுவது ஆகியவையே நமது இரட்டை நோக்கங்கள் ஆகும். நமது அரசியலமைப்புச் சட்டத்தைச் சீர்குலைத்திட மற்றும் விடுதலைப் போராட்ட இயக்கத்தின் பாரம்பரியத்தை மறுவரையறை செய்திடுவதற்கான முயற்சிகள்  அனைத்து வழிகளிலும் மேற்கொள்ளப்படுவதை நாம் பார்க்கிறோம். அவற்றை முறியடிப்பதற்கான நமது எதிர்த் தாக்குதல் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், தத்துவ ரீதியாக வெகுமக்களின் பிரச்சனைகளை எழுப்புவதாகவும் இருந்திட வேண்டும். ஒரு தத்துவார்த்த போராட்டத்தின் மூலமாக வலதுசாரி சக்திகளை முறியடிப்பதற்கான வரலாற்றுக் கடமை இடதுசாரிகளுக்கு இருக்கிறது. அத்தகையதொரு தத்துவார்த்த போராட்டமானது, தேச விடுதலைக்கான தியாகத்தின் பெருமைமிகு பாரம்பரியம், மதச்ச்சார்பின்மை மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் மேம்பாடு குறித்த சீரான உறுதிப்பாடு ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான கடும் தாக்குதலுக்கு எதிராக நாம் சமத்துவ பதாகையை உயர்த்திப் பிடிப்போம். தேசத்திற்காகவும், மக்களுக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் உறுதிப்பாட்டுடன் தொண்டாற்றும் நாம், அரசியலமைப்புச் சட்டத்தையும் தேசத்தையும் பாதுகாத்திட வேண்டும்.

தமிழில் – அருண் அசோகன் 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button