அயல்நாட்டு பல்கலைக்கழகங்களை அனுமதிக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் முடிவு: இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி முறையைப் பாதிக்கும்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
அயல்நாட்டு பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் அவற்றின் கிளைகளைத் திறந்திட அனுமதிக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் முடிவுக்கும், அது தொடர்பாக அண்மைக் காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் நடவடிக்கைகளுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஆலோசனைகள் வழங்குவதற்காக அளிக்கப்பட்ட கால அவகாசமும் போதுமானதாக இல்லை. இத்தகைய கொள்கை முடிவு, இந்திய உயர்கல்வி முறைக்கு ஊறு விளைவித்து, நீர்ந்து போகச் செய்து, இறுதியில் கல்வி வணிகமயத்திற்கு இட்டுச் செல்கிறது. இந்த முடிவானது, கல்வியை எட்டாக்கனியாக்கிவிடும்; தலித்துகள், பழங்குடி மக்கள், சிறுபான்மையினர் மற்றும் ஏழை மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுவர்.
அரசாங்கம் பல்கலைக்கழகங்களுக்கு நிதி அளிக்கும் என்று எதிர்பார்த்துச், சார்ந்திருப்பதை இந்தியர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கல்வியமைச்சர் கூறியுள்ளதன் பின்னணியில், இத்தகைய முடிவானது, அரசாங்கத்தின் பணக்காரர்கள் ஆதரவுப் போக்கின் பிரதிபலிப்பு ஆகும்.
கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டிய தேவை இருக்கும் போது, பட்ஜெட்டில் மூன்று சதவீதத்திற்கும் குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இட ஒதுக்கீடு கொள்கையும், சமூகநீதி கோட்பாடும் மிகப்பெரிய அளவில் பாதிப்பிற்கு உள்ளாகும். மாநில அரசாங்கங்கள் மீது இத்தகைய முடிவுகளைத் திணிப்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது ஆகும். மாநில அரசாங்கங்களின் அதிகாரத்தில் அத்துமீறி ஆக்கிரமிப்பதாகும்.
தேசம் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கக்கூடிய, இத்தகைய அவசர மற்றும் எதேச்சதிகார முடிவுகளை மேற்கொள்ளுவதற்கு முன் அத்தகைய பல்கலைக்கழகங்களை முறைப்படுத்தும் கட்டமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இந்தப் பிற்போக்குத்தனமான நடவடிக்கையை மாணவர் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் தடுத்து நிறுத்த வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.