தமிழகம்
அம்பேத்கர் பிறந்தநாள் – சமத்துவ நாளாக அறிவிப்பு : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பில் வரவேற்கிறோம்.
டாக்டர் அம்பேத்கர் இந்தியச் சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை களைய அயராது சிந்தித்தவர், போராடியவர். சமூக நீதியும் சாதிகளற்ற சுரண்டலற்ற ஓர் சமத்துவ சமூகம் அவரது கனவாக இருந்தது.
மேலும் மானுட விழுமியங்கள் மிளிரும் மெய்யான ஜனநாயகத்திற்கான சிறந்த அரசியல் சாசனத்தையும் நாட்டுக்கு அளிக்க அவர் பெரும் பங்காற்றினார்.
இத்தகைய தலைவரின் பிறந்தநாளை சமத்துவ நாளாக கடைப்பிடிப்பதென்பது இன்றைய காலச் சூழலில் மிகப் பொருத்தமானதென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.