அம்பேத்கரின் இலட்சிய முழக்கமே அரசியல், சமூக விடுதலைக்கான நமது பாதை!
– டி.ராஜா
“கற்பி – புரட்சிசெய் – ஒன்றுசேர்” என்ற அம்பேத்கரின் இலட்சிய முழக்கமே அரசியல், சமூக விடுதலைக்கான நமது பாதை!
சிறுபான்மைச் சமூக மக்கள் கொடுமைகளுக்கு உள்ளாவார்கள் என்ற டாக்டர் அம்பேத்கரின் கவலைகள் இன்று எதார்த்தமாகி உள்ளன. இதற்கு இந்துக்கள் தீர்வு காண முன்வர வேண்டும் என்ற அவர்தம் கருத்தின் மீது இன்றைய சூழலில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
“சிறுபான்மைச் சமூகத்தவர்கள் அழிக்கப்படலாம். சிறுபான்மைச் சமூகத்தவர்கள் ஒருவேளை அழிக்கப்படவில்லை என்றாலும் கூட, அவர்கள் ஒடுக்குமுறைகளுக்கும், கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்படுவார்கள்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் பொதுத்தளத்தில் சமவாய்ப்பு ஆகியவை அவர்களுக்கு மறுக்கப்படும். அவர்கள் பாகுபாடுகளுக்கு நிச்சயம் உள்ளாக்கப்படுவார்கள்.” இத்தகைய அறிவார்ந்த தீர்க்கதரிசன வரிகளை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் “மொழிவாரி மாநிலங்கள் மீதான சிந்தனைகள்” எனும் நூலில் “பெரும்பான்மையோர் மற்றும் சிறுபான்மையோர்” என்னும் அத்தியாயத்தில் எழுதியுள்ளார். வகுப்புவாத அடிப்படையில் வாக்குப்பதிவு நடைபெறுவது மற்றும் பெரும்பான்மைச் சமூகத்து வேட்பாளர்கள் வழக்கமாகத் தேர்ந்தெடுக்கப்படுவது ஆகிய தேர்தல் பின்னணியைக் கருத்தில் கொண்டு அவர் இவ்வாறு எழுதியுள்ளார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் பொது தளத்தில் சமவாய்ப்பு ஆகியவை நமது நாட்டின் சிறுபான்மைச் சமூகத்தவர்க்கு மறுக்கப்பட்டு வருவது வேதனைக்குரியதாகும். வாக்காளர்களை மத அடிப்படையில் ஒன்றுதிரட்டி, தேர்தலில் வெற்றி பெற்றிட வேண்டும் என்ற நோக்கத்துடன் பெரும்பான்மைச் சமூகத்தவரிடையே இது குறித்து அதிகமாக பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. அண்மையில், உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வகுப்புவாத அடிப்படையில் பேசியது சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான, இழிவுபடுத்தும் பேச்சின் மூலம் பெரும்பான்மைச் சமூக மக்களிடம் உத்தர பிரதேச முதலமைச்சர் விடுத்த வேண்டுகோள் ஆகியவை டாக்டர் அம்பேத்கர் தீர்க்கதரிசனமாக எழுதியதைத் தெள்ளத் தெளிவாக நிரூபணம் செய்வதாக உள்ளன.
சுதந்திர இந்தியாவில் சிறுபான்மைச் சமூகத்தவரின் நிலையானது, டாக்டர் அம்பேத்கர் கவலை கொண்டது போலவே, பாஜக ஆளும் மாநிலங்களில் மிகவும் மோசமாக இருப்பதை நாம் பார்த்து வருகிறோம். ஹிஜாப் அணிந்திருக்கும் காரணத்திற்காக, கர்நாடகத்தின் சில பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களில் கல்வி கற்பதற்கான அடிப்படை உரிமைகள் பெண்களுக்கு மறுக்கப்பட்டு இருப்பது, மத நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் மீது ஏவப்படும் பாகுபாட்டை வெளிக்கொண்டு வந்துள்ளது.
கர்நாடகத்தில், இந்துமத திருவிழாக்களின் போது நடைபெறும் விற்பனை கண்காட்சிகளில், இஸ்லாமிய வணிகர்கள் பங்கேற்பது தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. இது மத நம்பிக்கையின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் பொருளாதாரப் பாகுபாடு என்பதும் தெளிவாகிறது. இது தொழில் மற்றும் வணிகத்தில் பங்கேற்பதற்கான அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானதாக இருக்கிறது.
இந்துத்துவ செயல்திட்டமான இந்து தேசியத்திற்கு ஒத்திசைவற்ற, பெரும்பான்மைச் சமூக மதத்திலிருந்து வேறுபட்ட இதர மதங்களைப் பின்பற்றி ஒழுகுவதாலேயே, அத்தகைய குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மோடி அரசாங்கமும், பா.ஜ.க ஆளும் மாநில அரசாங்கங்களும் ஊறு விளைவித்து வருகின்றன. மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்துக்களைக் கேலிக்குரியதாக்கும் செயலின் முழு வெளிப்பாடின்றி இது வேறொன்றுமில்லை.
இந்துத்துவா மீதான ஆளுங்கட்சியின் சார்புத்தன்மையிலிருந்து ஊற்றெடுக்கும் அரசியல் மற்றும் இந்துத்துவ கொள்கைகளையே அரசாங்கத்தின் பொதுவான கொள்கைகளாக உருவாக்கியிருப்பது ஆகியவை அம்பேத்கர் கூறியிருப்பது போல மதவாதத்தை நடைமுறைப்படுத்துதல் ஆகும். தற்போது, இந்தியாவில் வளர்ச்சி என்பது வழக்கமான அரசியல் போக்காக அன்றி, அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்ட அறநெறி ஆகியவற்றுடன் முற்றிலும் தொடர்பற்ற ஒரு பிரத்யேகமான மதவாதத்தின் ஒன்றிணைந்த அம்சமாக உள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதிமொழி ஏற்று பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட மோடி, தனது ஆட்சியானது, “குறைந்தபட்ச அரசாங்கம் மற்றும் அதிகபட்ச ஆளுகை” என்ற கருத்தாக்கத்தில் வேரூன்றியிருக்கும் என்று பெருமைபட பிரகடனப்படுத்தினார். ஆனால், இப்போது தேர்தல் லாபத்திற்காக அரசாங்கமும், ஆளுகையும் பிரிவினைவாத அரசியல் மற்றும் மதவெறி பேச்சுக்கள் எனும் பாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.
புதிய இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் பெரும்பான்மைவாதம் எனும் ஆர்.எஸ்.எஸ்-ன் தாரக மந்திரமானது, சாவர்க்கரின் சித்தாந்தம் மற்றும் இந்து-முஸ்லீம் இடையேயான இணைக்க முடியாத வேறுபாடுகளில் நிலைபெற்ற அவரது இலட்சியத்தின் விளைவாகும். இந்தியாவில் பிறந்தவர்கள் மட்டுமே இந்நாட்டைத் தங்கள் தந்தையர் நாடு என்று கருதுவர்; இந்தியாவிற்கு வெளியே தங்களது புனித தலங்களைக் கொண்டுள்ளவர்கள் இந்நாட்டைத் தங்களின் புனித பூமியாகக் கருத மாட்டார்கள் என்று சாவர்க்கர் பிரிவினைக்கான விஷ விதைகளை ஊன்றினார். இவ்வாறாகக் கூறுவதன் மூலம், இஸ்லாமியர்கள் மற்றும் இதர சிறுபான்மையினரைக் குடியுரிமைக்கான தளத்திலிருந்து அவர் திறம்பட ஒதுக்கினார்.
“இந்து தேசியம் அதற்கே உரித்தான மேலாதிக்க நிலையை அடைந்திட வழி வகை செய்யப்படும். இஸ்லாமிய தேசியம் இந்து தேசியத்துடன் ஒத்துழைக்கும் ஒரு கீழான நிலையில் இயங்கிட ஏற்பாடு செய்யப்படும்.” என்று சாவர்க்கர் உருவகப்படுத்தியிருந்த அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளதாக அம்பேத்கர் எழுதியுள்ளார். இத்தகையதொரு ஏற்பாட்டினை வலியுறுத்துவதன் மூலமாக, சாவர்க்கர் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஒரு மாபெரும் அபாயகரமான சூழலை உருவாக்கி இருக்கிறார் என்று அம்பேத்கர் எச்சரித்தார்.
சாவர்க்கரைப் போலவே, ஆர்எஸ்எஸ-ன் தலைமை குருவான கோல்வால்கர் இஸ்லாமியர்களுக்கு இரண்டாம் தர குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். துரதிருஷ்டவசமாக, இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களை வெவ்வேறு பிரிவுகளாகக் கட்டமைக்கும் அதே இலட்சியத்தை தான் இப்போது மோடி அரசாங்கமும், பாஜக தலைமையிலான மாநில அரசாங்கங்களும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. பெரும்பான்மை மற்றும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு இடையே உள்ள பிரிவு, சிறுபான்மைச் சமூகத்தவர்க்கு கண்ணியம் மற்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஆகிய உரிமையை இந்துத்துவத்தின் முன்னணி தலைவர்கள் மறுத்திட வழிவகை செய்கிறது.
இஸ்லாமியர்கள் மற்றும் இதர சிறுபான்மைச் சமூகத்தவர்களை மோடி அரசாங்கம் கீழ்த்தரமாக நடத்துவதுடன், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குடிமக்கள் எனும் தரத்திற்கு கீழான நிலைக்குத் தள்ளியுள்ளது. மோடி அரசாங்கத்தின் இந்தச் செயல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் இலட்சியங்களைக் காட்டிலும் வெறிகொண்ட வகுப்புவாதத்திற்கே முன்னுரிமை அளித்து வருவதை மிகத் தெளிவாக நிரூபணம் செய்கிறது. அம்பேத்கர் முன்னரே கூறியது போல, இந்தியாவின் பாதுகாப்புக்கு மாபெரும் அபாயகரமான சூழலை நாம் இப்போது நேரடியாக எதிர்கொண்டு வருகிறோம்.
இந்நாட்டின் வரலாற்றில், இதுவரையில் பொருளாதார ரீதியாக, இஸ்லாமியர்கள் ஒருபோதும், எந்நிலையிலும் புறக்கணிக்கப்பட்டது இல்லை. ஆனால், இதுபோன்ற, அறிவுக்குப் பொருந்தாத நடவடிக்கைகள் பா.ஜ.க தலைவர்களால் ஊக்கப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றன. இதுபோன்ற கொள்கைகளும், லவ் ஜிகாத் போன்ற கட்டுக்கதைகளும் இந்தியாவை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்துகின்றன. மேலும், இவை பகைமை மற்றும் வெறுப்புணர்வு ஆகியவற்றுக்கு உகந்த நிலைகளை உருவாக்குகின்றன. இஸ்லாமியர்களைக் கொன்றழிக்க சாமியார்கள் விடுத்த வெளிப்படையான அறைகூவலைக் கண்டித்து பிரதமரோ, ஒன்றிய அரசாங்கத்தின் மூத்த தலைவர்களோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது, துரதிருஷ்டவசமானது. ஆனால், அதற்குப் பதிலாக, அவர்களுக்கு மோடி அரசாங்கம் பாதுகாப்பு அளித்தது.
மத நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு மாபெரும் பிளவை உருவாக்கும் வஞ்சக நடவடிக்கைகளில் அரசு எந்திரத்தை ஈடுபடுத்திய தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை இந்திய திருநாடு இதுவரையிலான அதன் வரலாற்றில் ஒருபோதும் கண்டதில்லை. மனுவாத-ஆர்எஸ்எஸ் போதனையின் கீழ் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்கள் மற்றும் பாகுபாடுகள் நடைபெற்று வருகின்றன; வன்முறையாளர்கள் மீது நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை. பிரதமராக, ஒரு ஆர்எஸ்எஸ் ஊழியர் அதிகார பீடத்தில் இருப்பது வன்முறையாளர்களுக்கு மேலும் தைரியம் ஊட்டுகிறது. பன்மைத்துவத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களையும் போற்றிக் கொண்டாடும் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் போக்கை நாம் கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும்.
டாக்டர் அம்பேத்கர் எழுதியதாவது:
“நாம் ஒற்றுமையை உருவாக்க விரும்புவோமேயானால், இந்துக்களும் முகமதியர்களும் ஒரே வாக்குச்சாவடிக்கு வரவேண்டும். ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான சில வழிமுறைகளை உருவாக்கிட உண்மையில் நாம் விரும்புவோமேயானால், சமூகத் தடைகளை நாம் உடைத்தெறிய வேண்டும். இந்த விஷயத்தில் இந்து சமூகம் தான் முயற்சியைத் தொடங்கிட வேண்டும். ஏனென்றால் இந்து சமூகம் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே உரித்தான சமூகமாகும். இந்து சமூகம் அதன் சொந்த நலன்களாக சில குறிப்பிட்ட நலன்களை மட்டுமே கருதுவதால் இதர சமூகங்கள் தனித்த வாழ்வை மேற்கொள்கின்றன. எனவே, இந்து சமூகமே தவறுக்கான முழு பொறுப்பேற்க வேண்டும்.”
மேற்கூறிய கருத்தின் அடிப்படையில், எவரொருவர் வகுப்புவாதத்தை விடுத்து ஜனநாயகத்தையும், ஏற்றத்தாழ்வுகளை விடுத்து சமத்துவத்தையும், இறையியலை விடுத்து அரசியலமைப்பையும் நாடுகிறாரோ, அத்தகையோர் அனைவரும் ஆர்எஸ்எஸ்-பாஜக வின் செயல்திட்டத்தைத் திறம்பட முறியடிப்பதற்கான நீடித்த, முற்போக்குத் தன்மை உடைய ஒற்றுமையை உருவாக்கிட ஒன்றுபட வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்தியா என்னும் கருத்தாக்கத்தைப் பாதுகாத்திட நமது மக்களிடையே ஒற்றுமை உணர்வு ஓங்க வேண்டும். அத்தகைய ஒற்றுமையை உருவாக்கிட விடுதலைப் போராட்ட இயக்கத்தைப் போன்ற ஒரு இயக்கம் நமக்கு தேவையாகும்.
நமது விடுதலைப் போராட்டத்தில், சமூக சீர்திருத்தமும், அரசியல் விடுதலையும் ஒன்றோடொன்று பிணைந்திருந்தது. சமூக சீர்திருத்தவாதிகளான ராம்மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், ஜோதிபா பூலே, ஸ்ரீ நாராயண குரு மற்றும் ஈ வெ ரா பெரியார் ஆகியோர் சமுதாயத்தில் மேற்கொண்ட மகத்தான சீர்திருத்தங்களை நாம் விருப்பத்துடன் நினைவு கூருகிறோம்.
ஆர்.எஸ்.எஸ்-ன் ஒற்றைத்தன்மையில் இருந்து சமுதாயத்தை விடுவிக்க வேண்டும் என்பதிலும் ஜனநாயகவாதிகள் இடையே அரசியல் ஒற்றுமை இருந்திடல் வேண்டும். இந்து மதம் என்பது ஒரு மத்தியத்துவப்பட்ட நிறுவனம் இன்றி, பிராந்திய அளவிலான மாபெரும் வேற்றுமைகள், பல்வேறு பழக்க வழக்கங்கள் மற்றும் வழிபாட்டு நடைமுறைகளை உடைய ஒரு மதமாகும். இந்துக்கள் அனைவரின் ஒற்றைப் பாதுகாவலன் என்று தன்னைத் தானே நியமித்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்-ஐ இந்துக்கள் தாமாகவே முன்வந்து நிராகரித்திட வேண்டும். இதர அமைப்பு ரீதியான மதங்களும் சீர்திருத்தங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும். அவற்றின் நடைமுறைகளை ஜனநாயகப்படுத்திட வேண்டும். இப்பிரச்சனைகள் குறித்து வெகுமக்களுக்கு அறிவூட்டுவது, பெரும்பான்மைவாதம் எனும் இருளுக்கு எதிரான போராட்ட உணர்வு மற்றும் வலுவான ஜனநாயக ஒற்றுமை ஆகியவற்றின் மூலம் இந்த நோக்கங்களை நாம் வென்றெடுக்க முடியும்.
இந்தப் போரில், கற்பி புரட்சிசெய் ஒன்றுசேர் எனும் டாக்டர் அம்பேத்கரின் லட்சியம் முழக்கமே, அரசியல் மற்றும் சமூக விடுதலைக்கான நமது பாதை ஆகும்.
தமிழில்: – அருண் அசோகன்