அம்பானி, அதானி போன்ற முதலாளிகளை இந்த நாடே வணங்க வேண்டும்!
புதுதில்லி, பிப். 11 – அம்பானி, அதானி போன்ற முதலாளி கள் நாட்டில் வேலைவாய்ப்பை உரு வாக்கி வருவதால் அவர்களை நாம் வணங்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாஜக எம்.பி.யுமான கே.ஜே. அல்போன்ஸ் மாநிலங்களவையில் பேசியுள்ளார். 2022-23 நிதியாண்டிற்கான மோடி அரசின் பட்ஜெட், முழுக்க முழுக்க பெரு முதலாளிகளுக்கானது என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில், கே.ஜே. அல்போன்ஸ் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “அம்பானி மற்றும் அதானி போன்ற முதலாளிகளை வழிபட வேண்டும் என்று நான் சொல்வதால், ‘முதலாளிகளின் ஊதுகுழல்’ என்று நீங்கள் என்னைக் குற்றம் சாட்டலாம். ஆனால், அவர்கள் இந்த நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கியவர்கள். ரிலையன்ஸ், அம்பானி, அதானி என யாராக இருந்தாலும் சரி, வேலைவாய்ப்புகளை வழங்குவதால் அவர்கள் வணங்கப்பட வேண்டும். இந்த நாட்டில் பணத்தை உருவாக்கும் ஒவ்வொரு முதலாளியும் வேலைவாய்ப்பை உருவாக்குகிறார்கள் என்பதால் அவர்கள் மதிக்கப்பட வேண்டும். இந்தியாவில் இரண்டு பேரின் சொத்துக்கள் மட்டும் உயர்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன. ஆனால், உலக அளவில் எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 1016 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கூகுள் நிறுவனர் லாரி பேஜின் சொத்து மதிப்பு 126 சதவிகிதம் உயர்ந்துள்ளது. பெசோஸின் சொத்து மதிப்பு 67 சதவிகிதம் உயர்ந்துள்ளது. பில் கேட்ஸ் சொத்து 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதேநேரம், உலகில் மூன்று பில்லியன் மக்கள் (300 கோடிப் பேர்) ஒரு நாளைக்கு ஐந்து டாலர்களை வைத்து வாழ்கின்றனர். இந்த ஏற்றத்தாழ்வுகள் என்பது உலகளாவிய உண்மை. நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், இல்லாவிட்டாலும் சமத்துவமின்மை உலகளாவியது. இவ்வாறு அல்போன்ஸ் முதலாளி களுக்காக வரிந்து கட்டியுள்ளார்.