அமெரிக்கா தலைமையில் ஜனநாயக மாநாடு…! ஏற்க இயலுமா ?
மு. வீரபாண்டியன்.
மாநிலத் துணை செயலாளர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.
அமெரிக்க ஏற்பாட்டில் அதன் தலைமையில் டிசம்பர் 9, 10 ஆகிய இரு தினங்கள் ஜனநாயக மாநாடு நடைபெற்றுள்ளது. ரஷ்யா, சீனா இரு பிரதான நாடுகளைத் தவிர்த்து மாநாடு நடந்துள்ளது. இது இன்னொரு பனிப்போரின் துவக்கமாகவே கருதப்படும்.
இருநாடுகளும் தவிர்க்கப்பட்டிருப்பது அல்லது புறக்கணிக்கப்பட்டிருப்பதன் நோக்கம் அங்கு ஜனநாயகம் நிலவவில்லை என்பதுதான். அப்படி எனில், பங்கேற்ற அனைத்து நாடுகளிலும் ஜனநாயகம் நிலவுகிறதா ? சரி. அமெரிக்காவிலாவது முழு நிறை ஜனநாயகம் நிலவுகிறதா ? ஜனநாயகம் உள்நாட்டில் ஒரு முறைமையிலும், உலகநாடுகள் மீது வேறு முறையிலும் நிலவ முடியுமா ?ஆனால், அமெரிக்கா எனும்போது அப்படிதான் நிகழ்கிறது.
அமெரிக்க ஜனநாயகத்தை இந்திய ஜனநாயகத்தோடு ஒப்பிட முடியாது. அதுவும் அரசியல் ஜனநாயகம் எனும்போது ஒப்பிடவே இயலாது. பலகட்சி இயங்குமுறை, பன்முகம், மதச்சார்பின்மை, சட்டத்தின் ஆட்சிமுறை, எதிர்க்கட்சிகள், விவாதமுறை எனும் நாடாளுமன்ற ஜனநாயகம் இப்படி இந்திய ஜனநாயகத்தின் சிறகுகள் மகத்தானவை! செனட் போன்ற செல்வ அதிகாரசபை இந்தியாவில் இல்லை.
இந்திய அரசியல் ஜனநாயகத்தின் திசைவழி சமத்துவம் தான். அமெரிக்க அரசியல் ஜனநாயகத்தின் திசைவழி முதலாளித்துவம்தான், இரண்டுக்கும் இடையிலான மிகப்பெரிய இடைவெளியை அறியமுடியும் அல்லவா ?
அமெரிக்காவில் கறுப்பின மக்கள் மீதான பாகுபாடுகள் இன்னமும் நீடித்தபடிதான் இருக்கிறது. வசிப்பிடங்களில் கறுப்பின மக்களோடு சேர்ந்து வாழ வெள்ளையர்கள் விரும்புவது இல்லை. கல்விச்சாலைகளிலும் கூட கறுப்பின மக்கள் அதிகம் உள்ள பள்ளி கல்லூரிகளைக் கடந்துவிடுகிறார்கள் வெள்ளையர்கள். சமூக ஜனநாயகம் அவ்வளவு தாழ்வில் இருக்கிறது அமெரிக்காவில்.
அதிகாரம், நிலம், சொத்து, உணவு, இருப்பிடம் இவைகளோடு அடக்குமுறைகள், உளவியல் ரீதியிலான தாக்குதல்களுக்கும் உள்ளாகிறார்கள். இன்னமும் கூட கறுப்பின மக்கள் அடிமையின் குறியீடு வெள்ளையர்கள் ஆதிக்கக் குறியீடு எனும் உளவியல் தொடர்வது எந்த வகை ஜனநாயகம்?
சார்லி சாப்பலின் துவங்கி மார்டின் லூதர்கிங் வரை, அதேபோல் ஆஞ்சிலோ டேவிட் துவங்கி தொலைக்காட்சி புகழ் ஒப்ரா வரை நேர்ந்த கதி உலகறியும். அமெரிக்கா வியட்நாம் மீது தொடுத்த யுத்தத்தோடு உடன்பட மறுத்த காரணத்திற்காவே முகமது அலி மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளை உலகறியும். இவையெல்லாம் ஜனநாயக வழிதானா ?
இரண்டாம் உலக யுத்தத்தில் நாகசாகி, ஹிரோசிமா மீது வீசப்பட்ட அணுகுண்டு அதிர்ச்சியைக் காட்டிலும் அமெரிக்க நாளுமன்றம் அதை நியாயப்படுத்தியதே அதுதான் ஜனநாயகமா?
1948 ல் கிரீஸ் நாட்டில் அப்பட்டமான ராணுவத் தலையீடு, பின்னர் கௌதமாலா, ஹாண்டுராஸ், நிகராகுவா, ஆப்கன், ஈராக், லிபியா என அப்பட்டமான ராணுவ அடக்குமுறைகள் ஜனநாயகம் தானா ?
உலகமே கண்டித்தபோதும் ஆப்ரேஷன் பீனிக்ஸ் எனக் கூறி, சின்னஞ் சிறிய வியட்நாம் மீது நாபாம் உள்ளிட்ட லட்சக் கணக்கான குண்டுகளை வீசியதை உலகம் மறந்துவிடுமா என்ன ?
தென்னாப்பிரிக்க விடுதலைக்காக பல்லாண்டுகள் சிறையில் வாடிய நெல்சன் மண்டேலா, ஆலிவர் டாம்போ, வால்ட்டர் சிசுலு உள்ளிட்ட அரசியல் தலைவர்களை ரோபன் சிறைத் தீவில் இருந்து விடுவிக்க வேண்டுமென ஐ.நா. சபை தீர்மானம் நிறைவேற்றியபோது, அதை அப்பட்டமாக மீறியதோடு, தென்னாப்பிக்க இனவெறி போத்தா அரசுக்கு அப்பட்டமான ஆதரவைத் தந்தது யார் ? பிரிட்டனும், அமெரிக்காவும்தானே.
பாலஸ்தீனத்திற்கான ஆதரவு தீர்மானங்களைப் பலமுறை தொடர்ந்து மீறியது யார்? கியூபா மீதான பொருளாதாரத் தடையை நீக்க வேண்டுமென பலமுறை ஐநா சபை தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை அதற்கு மதிப்பளிக்காதது யார் ? அமெரிக்காதானே.
இத்தகைய நாடு ஜனநாயகம் குறித்துப் பேசுவதும் மாநாடு நடத்துவதும் உலகம் ஏற்க இயலுமா ?
அதே நேரத்தில் சீனா மீதான ஜனநாயகம் குறித்த கேள்விகளைக் கடந்து செல்ல முடியாது. இந்திய வகை அரசியல் ஜனநாயகம் குறித்து சீனா நிறைய கற்க வேண்டும். அதே நேரத்தில் இந்தியாவில் சமூக ஜனநாயகமும், பொருளாதார ஜனநாயகமும் இன்னமும் கூட தாழ்வு நிலையில் இருப்பதை ஒப்புக் கொள்ளவேண்டும்.
பிறப்பால் தாழ்வு எனக் கூறி காதலையும் திருமணத்தை ஏற்க மறுத்து கொலைகள் செய்வது எவ்வகை சமூக ஜனநாயகம்.
நாற்பது கோடி மக்களுக்குத் தேவையான செல்வ வளங்களை நான்கு பேர்கள் பறித்துக் கொண்டு இருப்பது எவ்வகை பொருளாதார ஜனநாயகமாகும்?
எனவே, கற்க வேண்டியது சீனா மட்டுமல்ல; அமெரிக்காவும் இந்தியாவும் கூடத்தான்.
தென்சீன கடலாதிக்கம் பற்றி அதிகம் பேசப்படுகிறது. கடல் ஆதிக்கத்தின் மூலம்தான் உலக நாடுகளைக் காலனிகளாகக் கைப்பற்றின பிரஞ்ச், பிரிட்டன், டச்சு உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள். சூயஸ் கால்வாய் துவங்கி குவாண்டமோ கடல் தீவுச் சிறை, டீக்கோகார்சியாவின் ராணுவத் தளம் என பல கடல் தளங்கள் அமெரிக்காவின் ஆதிக்கத்தில்தானே இருக்கிறது. சீன ஆதிக்கம் எனக் கூறி ஏகாதிபத்திய ஆதிக்கங்களை மறைப்பது ஏன்?
மேலும் சீனாவின் பொருளாதார ஆதிக்கம் பற்றி பேசப்படுகிறது. இறுதிக் கோட்பாடு எனக் கூறி புதிய பொருளாதாரக் கொள்கைகளை உலகின் மீது திணித்தது யார் ? அமெரிக்காவும் பிரிட்டனும்தானே. இந்தப் பொருளாதார முறைமைதானே சீனா. ஏன் சீன ஆதிக்கம் என குற்றம் சாட்டப் படுகிறது, என்ன நியாயம் இது? பொருளாதாரத்தில் சீன ஆதிக்கம் என்றால், ஏன் அதிகமான வர்த்தக உறவுகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் சீனாவிடம் கொண்டுள்ளன?
ஒட்டுமொத்த ஆப்ரிக்க நாடுகளோடு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஏன் குறிப்பிட்டு சொல்லும்படியான வர்த்தக உறவுகளை கொள்வதில்லை ? குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிநுட்ப உதவிகளை செய்வதில்லை ? இதை ஆய்ந்தாலே போதும் அமெரிக்க ஐரோப்பிய ஜனநாயகம் வெட்டவெளிச்சமாகும்.
ஆக, சீன ஜனநாயகத்தைச் சுட்டிக்காட்டி அதன் பொருளாதார ஆதிக்கத்தைச் சுட்டிக்காட்டி அமெரிக்க ஜனநாயகத்தை, அதன் ஆதிக்கத்தை நியாப்படுத்டுவதை ஏற்க இயலாது.
16 ம் நூற்றாண்டு துவங்கி நாம் வாழும் இந்த நூற்றாண்டு வரை இந்தப் புவிப்பரப்பை ஆட்சி செய்வது முதலாளித்துவம்தான். காலனித்துவம், இரண்டு உலகப் போர்கள் என்னும் சோகம், இயற்கை மீதான சூறையாடல் எனும் வரலாற்றுத் துயரங்களை உலகுக்களித்தது முதலாளித்துவம்தான்.
ஒரு புதிய உலகம் கோருபவர்கள், ஏகாதிபத்தியங்களைக் கடந்தாக வேண்டும். எனவே, ஏகாதிபத்தியங்கள் பேசும் ஜனநாயகம் ஏற்புடையதல்ல.