தமிழகம்

அனைத்து கட்சி கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆற்றிய உரை

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:

தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 12.11.2022ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆற்றிய உரைக்குறிப்பு:

தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாண்புமிகு அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வணக்கம்!

பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக மாண்பமை உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு 07.11.2022ஆம் தேதி வழங்கியுள்ள தீர்ப்பு சமூகநீதிக் கொள்கைக்கு எதிரானது. இதன் விளைவுகளை உணர்ந்து உடனடியாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் ஏணிப்படி முறையில் அமைந்த சாதிய அடுக்குமுறை சமூகத்தில், பெரும் பகுதி மக்களின் கல்வி மற்றும் பொருளாதார உரிமைகள் மறுக்கப்பட்டு வரும், வரலாற்று உண்மையை மறந்து விடமுடியாது. இந்தச் சமூக அநீதி களையப்பட்டு சமூக தளத்தில் அனைவருக்கும் சமூக நீதி வழங்கப்பட வேண்டும் என்ற போராட்டம் நூறாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

கடந்த 1950 ஜனவரி 26, நாம் ஏற்றுக் கொண்ட அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு அரசியல் தளத்தில் சம உரிமை வழங்கியுள்ளது. சமூக, பொருளாதாரத் தளத்தில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வுகளையும், பாகுபாடுகளையும் களைந்து சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்று வழிகாட்டுகிறது. இதற்காகத் தான் இட ஒதுக்கீடு முறை நடைமுறைக்கு வந்தது. அரசியலமைப்புச் சட்டத்தின் இந்த அடிப்படையான உணர்வுகளை உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு சரியாக பிரதிபலிக்கவில்லை என்பதே உண்மையாகும்.

நாட்டின் விடுதலைக்கு முன்பாக, காலனி ஆட்சி காலத்தில் சமூகத்தில் தீண்டாமை, சாதிய பாகுபாடுகள் நிலவி வந்த நிலையில், மிகச் சிறிய எண்ணிக்கையிலான உயர்சாதியினர் அனைத்து வாய்ப்புகளையும் பெற்று, சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்தி வருவதை சென்னை மாகாணத்தில் வாழ்ந்த சமூகநீதி உணர்வாளர்கள் உணர்ந்து, சமூக நீதிக்கான கோரிக்கைகளை முன்னெடுத்ததையும், அதில் வெற்றி பெற்றதையும் நாம் பெருமையுடன் நினைவு கூர்ந்து, அவர்கள் தொடங்கிய போராட்டம் இன்றும் முற்றும் பெறவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

சமூகத்தின் உயர்தட்டில் முன்னேறிய, குறிப்பிட்ட ஒரு வகுப்பார் மட்டுமே அதிகார மையத்தில் நிறைந்து மேலாதிக்கம் செய்து வந்ததை எதிர்த்து தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் தொடங்கிய சமூக நீதிப் போராட்டம் 1921, செப்டம்பர் 16ல் முதல் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அரசாணை பெறுவதில் நிறைவு பெற்றது.

நாட்டின் விடுதலைக்குப் பின்னர், அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, முன்னேறிய சாதியினர் வகுப்புவாரி இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராகச் சட்டப் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரெழுச்சியும், பெரும் கொந்தளிப்பும் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி, சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பின்தங்கியுள்ள சமூகப் பிரிவினருக்கு (இந்த உரிமைகள் மறுக்கப்பட்ட சாதிப்பிரிவினர்களுக்கு) இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 1969 நவம்பர் மாதத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சீரிய தலைமையிலான அரசு திரு.எஸ்.என்.சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தபட்டோர் ஆணையம் அமைத்தது. இந்த ஆணையத்தின் பரிந்துரைகள்படி இட ஒதுக்கீடு மேலும் விரிவடைந்தது.
தொடர்ந்து 1982ஆம் ஆண்டில் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் தலைமையிலான அரசு திரு.ஜெ.ஏ.அம்பாசங்கர் தலைமையில் இரண்டாவது ஆணையம் அமைத்து அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இந்த வரலாற்று தொடர்ச்சியில் தற்போது தமிழ்நாட்டில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சமூகநீதி கொள்கை நடைமுறையில் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் நூறாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் சமூகநீதிப் போராட்ட அனுபவத்தையும், அதன் விளைவுகளையும், தேவைகளையும் மாண்பமை உச்சநீதிமன்றத்திற்கு முழுமையாக உணர்த்தப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

கடந்த 07.11.2022ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு ஒன்றபட்ட, கருத்திணக்கம் கொண்ட தீர்ப்பல்ல. இதில் சில மாண்புமிகு நீதிபதிகள் இட ஒதுக்கீடு எவ்வளவு காலத்துக்கு நீடிக்க வேண்டும்? என கேள்வி எழுப்பியிருப்பதும் அது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்பட இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருப்பது சமூகத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

1978ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு அமைத்த மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு வழங்கலுக்கான சமூகப் பிரிவுகளை அடையாளப்படுத்தும் போது, வருமான வாய்ப்புகளையும், பொருளாதார ஆதாரத்தையும் கருத்தில் கொண்டே நிர்ணயித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டால் வருமான வரம்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பின்தங்கிய நிலையை நிர்ணயிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு மாறானது, எதிரானது என்பது எளிதில் விளங்கும்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சாதிய, வர்க்க வேறுபாடுகள் இல்லாத சமத்துவ சமூக அமைப்பை கட்டமைப்பதற்கு உறுதியுடன் போராடி வருகின்றது. சாதி வாரியாக கணக்கெடுப்பு எதுவும் நடைபெறாத நிலையில், முன்னேறிய வகுப்பாரில் பின்தங்கியோர் என்று வகைப்படுத்துவது ஏற்றத்தக்கதல்ல. அதனை நிராகரிக்க வேண்டும். நவ தாராளமயக் கொள்கை நடைமுறையில் தனியார்துறை முன்னுரிமை பெற்று, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என எல்லா நிலைகளிலும் பன்னாட்டு நிதி மூலதன சக்திகள் மேலாதிக்கம் செலுத்தி வருகிறது. இச் சூழலில் இட ஒதுக்கீட்டு வழங்கலை தனியார் துறையிலும் அமலாக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் மாண்பமை உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, அரசியலமைப்பு முழு அமர்வு மன்றத்தின் மறுசீராய்வுக்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button