அநீதி – திரைப்பட விமர்சனம்
சமூகத்தில் அதிகாரமிக்க சுரண்டல் வர்க்கத்தை வீழ்த்தி நீதியை நிலைநாட்டுவது போல் இயக்குநர் வசந்தபாலன் திரைக்கதை அமைத்துள்ளார்.
அநீதி – திரைப்பட விமர்சனம்
கணபதி இளங்கோ
குருதி தோய்ந்த கொந்தாளம் ஏந்திய கைகளுடன் கதாநாயகன் ஒவ்வொரு படியாக அடங்காத ஆவேசத்துடன் ஏறி மேலே செல்லும் காட்சியோடு திரைப்படம் துவங்குகிறது. இதே காட்சியில் எல்லா தெளிவையும் தந்து முடிவடைகிறது.
இடையில் அழுகைக்கும் உணர்வெழுச்சிக்கும் ஆவேசத்திற்கும் கோபத்திற்கும் ஆளாக்கி நம் அறிவைத் தீட்டி மனதை கொதிப்படையச் செய்து, இறுதியில் நிலவும் சமுதாயம் அநீதியானது. அது தகர்த்து துடைத்தெரியப்பட வேண்டும் என்பதை முடிவாக தருகிறது.
கொந்தாளி, மேடு பள்ளங்களை வெட்டி தகர்த்து சமமாக்கும் கருவி. சமத்துவத்தின் புரட்சியின் குறியீடு.
கதாநாயகன் ஜிக் தொழிலாளி. உணவு விநியோக வேலை. ஏற்படும் அவமானம், புறக்கணிப்பு, உழைப்புச் சுரண்டல், ஏமாற்றுதல் அனைத்தையும் நொடிதோறும் சந்திக்கும் கதாநாயகன். கடுமையான மன உளைச்சல். அது உளவியல் பாதிப்பாக மாறும் நிலை. மருந்து மாத்திரைகள் பயனளிக்காத போது ஒரு இளநங்கையின் பரிவும் காதலும் அவன் நோய்க்கு மருந்தாக இருப்பதுடன், அவன் வாழ்க்கையில் நம்பிக்கை துளிர்க்கவும் காரணமாகிறது.
ஆனால், புறச்சூழல் இவற்றை எல்லாம் சிதைத்து கலங்கடித்து பெரும் துன்பங்களுக்கும் சோதனைகளுக்கும் ஆளாகி காதலை குலைக்கிறது. அந்நிலையிலும் கதாநாயகன், தம் காதலுக்காக எல்லா துன்பங்களையும் எதிர்கொள்கிறான்.
உழைப்புச் சுரண்டலுக்கும், வீண் பழி பாவங்களுக்கும் ஆளாகிறாள் நாயகி. ஏற்கெனவே தனது சிறு வயது முதலே இத்தகைய சுரண்டல், பழிபாவங்கள், தண்டனைக்கு ஆளாகி அநாதை ஆகிவிட்ட நாயகன் உறுதியுடன் அவளுடன் சேர்ந்து நிற்கிறார்.
அடக்குமுறைச் சித்திரவதைக்கு அஞ்சாமல் தன் அன்பினை, காதலை, மானுட நேயத்தை காக்கிறான்.
எந்த சூழ்நிலையிலும் உழைக்கும் வர்க்கம் தன் நிலை இழப்பதில்லை என்பதை கதை சிறப்பாக சித்தரிக்கிறது. உழைக்கும் வர்க்கம் ஒவ்வொரு கணமும் தனக்கெதிரான ஒடுக்குமுறைகளை சந்திக்கிறது. உழைப்புச் சுரண்டலுக்கு நடுவே செய்யாமலேயே மோசமான குற்றம் சாட்டப்பட்டு, தண்டனைக்கும் கொடுமைக்கும் ஆளாகி அல்லலுறுகிறது.
அத்தகைய சூழலில் எதிரி வர்க்கத்தினை வெட்டி வீழ்த்திட ஆவேசம் கொள்கிறது. அதுதான் நாயகனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல். ஆனாலும் அவன் கொலை செய்யவில்லை அப்படி நடந்தால் அநீதியே உருவாய் அமைந்துள்ள இந்த முதலாளித்துவ சமூகத்தில், நாடு தினம் தினம் பிணக்காடாய் மாறிப் போகும்.
இதைத்தான் நாயகன் பகைவர்களை மனதால் பல முறை கொல்வதாக சித்தரிக்கப்படுகிறது. அவனுடைய விழித்திரை விரிந்து, இரத்தம் கொதித்து, மூளை சூடேறி கொலை செய்து விட எண்ணுவதும். ஆனால், நிஜத்தில் அமைதி அடைவதும் நடக்கிறது. சமூகத்தில் அவ்வாறு நடந்தால் அது தனிநபர் அழித்தொழிப்பு, வன்முறை. அதை பாட்டாளி வர்க்கம் செய்வதில்லை. அதே போல வர்க்க சமரசம் வர்க்க இணைவு என்பதும் இல்லை.
ஆனால், இறுதியில் உழைக்கும் மக்கள் தம்மை சுரண்டலுக்கு உள்ளான வர்க்கமாக உணர்ந்து ஒன்று சேர்ந்து போராடும் போது புரட்சி வெடிக்கும். அதிகார வர்க்கம் வீழ்த்தப்படும்.
அநீதி அழிந்து நீதி மிக்க புதிய சமூகம் உழைக்கும் மக்களின் தலைமையில் தோன்றும். சமத்துவம் மலரும். இதையே ஜிக் தொழிலாளியான நாயகன் ஜிக் தொழிலாளர் போராட்டத்தை மேற்கொள்கிறார்.
சமூகத்தில் அதிகாரமிக்க சுரண்டல் வர்க்கத்தை வீழ்த்தி நீதியை நிலை நாட்டுவது போல இயக்குநர் வசந்தபாலன் வடிவமைத்துள்ளார்.
நாயகி அபலை மிக்க பாட்டாளி வர்க்க குறியீடு. நாயகன் முன்செல் அணியாய் விளங்கும் கட்சியின் குறியீடு. மேலும், இது சமூக மாற்றம் பற்றிய துன்பியல் படைப்பு. ஆழமான வர்க்க வேற்றுமையும், வர்க்க மோதலும், பகைமையும் நிறைந்த முதலாளித்துவ சமூகம் உழைக்கும் மக்களுக்கு அநீதியை மட்டுமே செய்து துன்பத்தை மட்டுமே இயன்ற அளவு கொடுக்கும் சமூகம் என்பதை காட்சிக்கு காட்சி விவரிக்கும் கலைப் படைப்பு.
“அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே செல்வத்தை தேய்க்கும் படை” என்ற குறளுக்கு சான்றாக அமைந்த திரைக் காவியம்.