அதானி குழும தில்லுமுல்லுகள் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
அதானி குழும தில்லுமுல்லுகள் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:
நரேந்திர மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க அரசாங்கம் கார்ப்பரேட் ஆதரவு மற்றும் பெருநிறுவன ஆதரவு கொள்கைகளைக் கடைபிடித்து வருகிறது என்றும், அதன் விளைவாக, அதானி உள்ளிட்டோர் இயற்கை வளங்களையும், தேசத்தின் செல்வ வளங்களையும் சூறையாடுகிறார்கள் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வருகிறது.
அதானி நிறுவனங்களின் பங்குகளில் எல்.ஐ.சி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று மோடி அரசாங்கம் வற்புறுத்தி வருகிறது.
துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் இலாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களை அதானி குழுமம் தற்போது கட்டுப்படுத்தி வருகிறது. மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஏற்பட்டுள்ள அதானி குழுமத்தின் இத்தகைய திடீர் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் ஆதரவு தான் அடிப்படை என்பது நிரூபணமாகியுள்ளது.
அதானி குழுமத்தின் தில்லுமுல்லுகள் காரணமாக பொதுத்துறை நிறுவனங்கள், சாமானிய இந்திய முதலீட்டாளர்கள் உள்பட அனைத்து முதலீட்டாளர்களும் பெரும் இழப்புகளைச் சந்தித்து வருகிறார்கள். இனிவரும் காலங்களில் இழப்புகள் ஏற்படாமல் தவிர்த்திட, அதானி குழுமத்தின் அனைத்து தொழில் நடவடிக்கைகளையும் உரிய அமைப்புகளின் மூலம் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இயற்கை வளங்களையும், தேசத்தின் செல்வ வளங்களையும் சூறையாடுவோருக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு கட்சியின் தேசிய செயற்குழு விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.